தீவிரவாத ஒழிப்பா – முஸ்லிம் வேட்டையா ?

Share this:

தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ள (இடமிருந்து) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ?

தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவரும் விசாரணைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய மூவரும் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக போலீசின் துணிச்சலுக்கும் திறமைக்கும் கிடைத்த வெற்றியாகத் தமிழக அரசு கூத்தாடிக் கொண்டாடி வருகிறது.  எனினும், ஜெயா அரசின் இந்த ஆரவாரத்தையெல்லாம் மீறித் தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவரும் விசாரணைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

போலீஸ் பக்ருதீன் சென்னைக்கு வந்திருப்பதைத் துப்பறிந்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரைத் தொடர்ந்து சென்று, எதிர்பாராத சமயத்தில் அவர் மீது பாய்ந்து, அவரோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டு, பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் பக்ருதீன் கைது செய்யப்பட்டதாகத் தமிழக போலீசு கூறிவரும் அதேசமயம், இதனை மறுக்கும் தகவல்கள் பல்வேறு தரப்பிலிருந்து வெளிவந்துள்ளன.

‘‘சில முசுலீம் அமைப்புகளின் வற்புறுத்தலால் பக்ருதீன் சரணடைய ஒப்புக் கொண்டதாகவும், இதனையடுத்து அந்த முசுலீம் அமைப்புகள் போலீசோடு நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஒரு பொதுவான இடத்தில் பக்ருதீனை போலீசிடம் சரணடைய வைப்பது” என முடிவாகியதாக ஜூனியர் விகடன் (13.10.13, பக்.45) கிசுகிசு பாணியில் எழுதியிருக்கிறது.

பக்ருதீனுக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செதுள்ள இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம், ”பக்ருதீனை சென்னை பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துதான் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார். (குமுதம் ரிப்போர்ட்டர், 13.10.2013, பக்.8)

‘‘போலீஸ் பக்ருதீன் சாகுல் ஹமீது என்பவர் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திர போலீசாரைத் தொடர்பு கொண்டு, தான் சரணடைய விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில்தான் போலீசார் அவரை பெரியமேட்டுக்கு வரச் சொல்லிக் கைது செய்ததாக ஒரு செய்தி வந்திருப்பதாக’’க் குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, ”போலீஸ் பக்ருதீன் தானாகச் சரணடைந்தாரா? அல்லது போலீசார் சண்டை போட்டுப் பிடித்தார்களா? எது உண்மை?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தீவிரவாதிகளைக் கண்காணிப்பதற்கு எஸ்.ஐ.டி., எஸ்.ஐ.யூ., எஸ்.ஐ.சி., என ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகள் தமிழக போலீசில் இருந்து வந்தாலும், அவைகளில் ஒன்று கூட பக்ருதீன் கூட்டாளிகள் புத்தூரில் தங்கியிருப்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கவில்லை. சரணடைந்த பக்ருதீனிடமிருந்து தான் போலீசார் அந்தத் தகவலைப் பெற்றுள்ளனர்.  இம்மூவரையும் கைது செய்த பிறகோ, சமீபத்தில் நடந்த இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகள் அனைத்தையும் இந்த மூவரின் தலையில் கட்டிவிட்டது, தமிழக போலீசு.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய அப்பாவிகள்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோசடியாக சிக்கவைக்கப்பட்டு ஐந்தாண்டு சிறைவாசம் அனுபவித்த அப்பாவி முசுலீம்கள்.இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. 27.7.2013 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலர் அரவிந்த் ரெட்டி கொலை, பணப்பரிமாற்றம் விவகாரம் தொடர்பாக நடந்தது.  இவ்வழக்கில் வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டுள்ளது.  பரமக்குடி நகர பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், சொத்து விற்பனை தொடர்பாக நடந்த தகராறில் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கில் நான்கு பேர் கைது செயப்பட்டுள்ளனர்” என விளக்கியிருந்தார். ஆனால், இதற்கு மாறாகத் தற்பொழுது அரவிந்த் ரெட்டி, முருகன் கொலைகளுக்கும் பக்ருதீனும் அவரது கூட்டாளிகளும்தான் காரணம் என போலீசு கூறுகிறது.  இதில் எது உண்மை? எது பித்தலாட்டம்?

மேலும், இம்மூவரும் இந்து முன்னணியின் ராம.கோபாலன், தினமலர் அதிபர் கோபால்ஜி ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும்; சென்னையில் நடந்த திருப்பதி குடை ஊர்வலத்தைச் சீர்குலைக்கச் சதி செய்ததாகவும்; மோடியைக் கொல்ல நோட்டம் விட்டதாகவும் பீதி கிளப்பியிருக்கிறது, தமிழக போலீசு.  இதன் மூலம் தானே முன்வந்து போலீசிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் பக்ருதீனையும், கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லாத நிலையில் கைது செயப்பட்ட பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலையும் மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலாகச் சித்திரிக்க முனைந்து வருகிறது.

‘‘பக்ருதீனைப் பற்றி போலீசு கூறுவதில் கொஞ்சம் உண்மையும் நிறைய பொய்யும் இருக்கிறது” எனக் கூறுகிறார், அவரது சகோதரர் தர்வேஸ் மைதீன்.  ”1995-ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் முதன்முதலாக பக்ருதீனைக் கைது செய்தார்கள். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபா என்பது தெரிய வந்தது. ஆனாலும், அன்று முதல் பக்ருதீனைத் தீவிரவாதி என முத்திரை குத்திவிட்டது போலீசு” என்கிறார் அவர்.

பக்ருதீனின் சகோதரர் என்ற ஒரே காரணத்திற்காகவே தர்வேஸ் மைதீனும் அத்வானியைக் கொல்ல பாலத்திற்கு அடியில் குண்டு வைத்த வழக்கில் கைது செயப்பட்டு, பிணையில் வெளியே வந்திருக்கிறார். பக்ருதீனைக் காரணம் காட்டியே, அக்குடும்பத்தைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்திருக்கிறது, போலீசு.  பக்ருதீன் மனைவிக்கு நிர்பந்தம் கொடுத்து, அவரை மணவிலக்குப் பெற வைத்திருக்கிறது.

‘‘ஒரு கொலைவழக்கில் கைதாகி விடுதலை ஆன பிறகு, எந்தப் பிரச்சினை என்றாலும் அவர் மீதும் சேர்ந்து வழக்குப் போடுவது போலீசுக்கு வாடிக்கையாகி விட்டது.  போலீஸ் டார்ச்சரால் எங்க குடும்பமே சீரழிஞ்சு போச்சு” எனக் கூறுகிறார், பன்னா இஸ்மாயிலின் மனைவி ஷமீம் பானு.

போலீசின் இந்தச் சித்திரவதைகளும் அச்சுறுத்தல்களும் ”அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கில் கூட போடுங்கள்; எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்” எனக் கூறும் நிலைக்குத் அக்குடும்பங்களைத் தள்ளிவிட்டிருக்கிறது.  பக்ருதீன், பன்னா இஸ்மாயிலின் குடும்பங்கள் மட்டுமல்ல, ஏறத்தாழ முசுலீம் சமூகத்தின் நிலைமையே இதுதான்.  தம் மீது குத்தப்பட்டுள்ள தீவிரவாத முத்திரையைக் களைந்து கொள்வதற்கு அச்சமூகமே தீயில் இறங்கித் தம்மைப் புனிதனாகக் காட்டிகொள்ளும் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறு சிறு திருட்டுகள், அடிதடி வழக்குகளில் கைது செய்யப்படும் இளைஞர்களின் பெயர்களை ரௌடிகள் லிஸ்டில் வைத்து வதைக்கும் போலீசின் கிரிமினல் புத்தியும், அத்துறையில் ஊறியிருக்கும் இந்து மதவெறியும் ஒருசேரக் கலந்து பக்ருதீன் விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது.  இது மட்டுமின்றி, பிடிபட்ட பக்ருதீன் உள்ளிட்ட மூவர் மீது அரவிந்த் ரெட்டி, முருகன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குகளைச் சகட்டுமேனிக்குப் பாய்ச்சியிருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியல் நோக்கங்களுக்கு ஒத்தூதும் வேலையையும் தமிழக போலீசு கனகச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறது.  தமிழகத்தில் மட்டுமல்ல, நாடெங்கும் நடந்துள்ள பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் போலீசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கீறிப் பார்த்தாலே, அதனின் புத்தியில் முசுலீம் வெறுப்பும் இந்து மதவெறிச் சார்பும் உறைந்து போயிருப்பதையும்; அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். இன் அடியாளாக அத்துறை செயல்பட்டுவருவதையும் புரிந்துகொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா.”மாலேகான் குண்டுவெடிப்பை நாங்கள்தான் செய்தோம்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா.

• மகாராஷ்டிராவிலுள்ள மாலேகான் நகரிலும், ம.பி.யிலுள்ள அஜ்மீர் தர்காவிலும், சம்ஜௌதா விரைவு ரயிலிலும் நடந்த குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் நடத்தியது என்பது தற்பொழுது உறுதியாகி விட்டது.  அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செயப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா இதனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  ஆனால், அக்குண்டுவெடிப்புகள் நடந்தவுடனேயே அதற்கான பழி கயமைத்தனமான முறையில் முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டு அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக, மாலேகான் குண்டுவெடிப்பில் அப்ரார் அகமது என்ற போலீசு ஆட்காட்டி அளித்த சாட்சியத்தை ஆதாரமாகக் காட்டி, 9 முசுலீம்களைக் கைது செய்தது, அம்மாநில தீவிரவாதத் தடுப்பு போலீசு. வழக்கு விசாரணையின் போக்கில் அப்ரார் அகமதுவும் இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விசித்திரமும் நடந்தது.  அதன்பின் அப்ரார் அகமது அந்த 9 முசுலீம்களுக்கும் எதிராக, தான் அளித்த சாட்சியத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.  ஆனாலும், தீவிரவாதத் தடுப்பு போலீசு அப்ரார் அகமது அளித்த பொய் சாட்சியத்தின் அடிப்படையிலேயே வழக்கை நடத்தி வந்தது.  இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகும், வழக்கின் போக்கில் எந்த மாற்றமும் நடக்கவில்லை.  மாலேகான் குண்டு வெடிப்பை இந்து மதவெறியர்கள்தான் நடத்தினார்கள் என்பது அம்பலமான பிறகுதான், அந்த 9 முசுலீம்களும், செய்யாத குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசத்தை அனுபவித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அந்த அப்பாவிகள் இன்னும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

• மும்பை புறநகர் பகுதி மின்சார ரயில்களில் ஜூலை 11, 2006 அன்று நடந்த ஏழு குண்டு வெடிப்புகளில் 187 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திவரும் மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்பு போலீசு பிரிவு, இந்திய மாணவர் இசுலாமிய இயக்கம்தான் (சிமி) இக்குண்டுவெடிப்புகளை நடத்தியதாகக் கூறியதோடு, அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றஞ்சுமத்தி 13 முசுலீம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது.  கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு விசாரணையில், இந்த 13 பேருக்கு எதிராக ஒரு உருப்படியான ஆதாரத்தைக் கூட தீவிரவாதத் தடுப்பு போலீசார் முன்வைக்கவில்லை; குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான இஹ்தேஷம் சித்திக்கிற்கு எதிராகச் சாட்சியம் அளித்துள்ள விஷால் பர்மர் போலீசாரால் தயார்படுத்தப்பட்ட பொய் சாட்சியம் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, மும்பை குற்றப்பிரிவு போலீசு, கடந்த 2008-ஆம் ஆண்டு சாதிக் சித்திக் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்தது.  ”இவர்கள் ஐந்து பேரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்; இந்த ஐந்து பேர்தான் மும்பை புறநகர் மின்சார ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள்; சாதிக் சித்திக் இதனை ஒப்புக்கொண்டு தங்களிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக”க் கூறி வருகிறது, மும்பை குற்றப்பிரிவு போலீசு. ஆனாலும் தீவிரவாதத் தடுப்பு போலீசு பிரிவு, தான் பிடித்த முயலுக்கு மூணுகால் எனப் பிடிவாதமாக 13 பேருக்கும் எதிராக வழக்கை நடத்தி வருகிறது. ஒரே வழக்கில் இரண்டு விதமான விசாரணை முடிவுகள், குற்றவாளிகள் – என்ற இந்தக் கூத்தை விசாரணை நீதிமன்றமும் கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதான் (குஜராத் முசுலீம் படுகொலைகளில் இந்து மதவெறிக் கும்பலுக்கு உள்ள பங்கை இரகசிய வாக்குமூலமாக சேகரித்து அம்பலப்படுத்தியவர்) இக்குண்டு வெடிப்பு வழக்கில் போலீசு நடத்தியிருக்கும் விசாரணை பொய் மூட்டையாக இருப்பதால், சுதந்திரமான கமிசனை அமைத்து இவ்வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்.

முகம்மது ஆமிர் கான்

முகம்மது ஆமிர் கான்.டெல்லி போலீசால் 20 பயங்கரவாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு, ”குற்றமற்றவர்; வழக்குகள் மோசடியானவை” எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முகம்மது ஆமிர் கான்.

• 2010-ஆம் ஆண்டு நடந்த புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் ஹிமாயத் பேக் என்ற முசுலீம் இளைஞருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக சாட்சியம் அளித்த அத்துனை பேரையும் இரகசியமாக பேட்டி எடுத்த ஆஷிஷ் கேதான், இச்சாட்சியங்கள் அனைவரும் பேக்கிற்கு எதிராகச் சாட்சியம் அளிப்பதற்கு ஏற்றவாறு (மகாராஷ்டிராவின்) தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இதுவொருபுறமிருக்க, இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டார். ”ஜெர்மன் பேக்கரி வழக்கிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேக்கிற்கும் சம்பந்தமில்லை; அக்குண்டுவெடிப்பைத் தானும் காதில் சித்திக் என்பவரும்தான் சேர்ந்து நடத்தியதாக” வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனாலும், இவ்வழக்கை நடத்திவரும் தீவிரவாதத் தடுப்பு போலீசு பேக்கிற்கு எதிராகத் தன்னிடம் வலுவான சாட்சியங்கள் இருப்பதாக இன்னமும் கூறி வருகிறது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் பொய் சாட்சிகளைத் தயாரித்து மோசடியாக வழக்குகளை நடத்தி வருவதற்கு, அப்பாவி முசுலீம்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்திய குண்டுவெடிப்புகளுக்குக் கூட முசுலீம்கள் மீது பழி போட்ட கயமைத்தனத்திற்கு இன்னும் பல வழக்குகளை எடுத்துக் காட்டலாம். இந்த அத்துமீறல்கள் குறித்த விவாதம் கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசியல் வெளியில் நடந்து வருகிறது.  இத்துனை ஆண்டுகளாக இது பற்றி வாயே திறக்காத காங்கிரசு கும்பல், இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ”தீவிரவாத வழக்குகளில் அப்பாவி முசுலீம்கள் கைது செய்யப்படுவதை மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்; தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, உப்புப் பெறாத கடிதமொன்றை மாநில அரசுகளுக்குத் தட்டிவிட்டிருக்கிறது. அதேசமயம், இப்படியொரு சடங்குத்தனமாகக் கடிதத்தை அனுப்புவதைக்கூட இந்து மதவெறிக் கும்பல் விரும்பவில்லை. ”இவை முசுலீம்களை தாஜா செய்யும் நடவடிக்கை” என பா.ஜ.க. குதிக்கத் தொடங்கி விட்டது. இந்து மதவெறிக்கும் அரசு பயங்கரவாதத்துக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள முசுலீம் சமூகமோ அச்சத்துக்கிடையே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நன்றி – செல்வம் (வினவு)

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.