கடந்த சில வாரங்களாக சத்தியமார்க்கம்.காம் என்ற நமது இணைய தளத்தின் பெயரில் ஒருவர் திருகுதாளம் செய்து விஷமத்தனமாகப் பல இடங்களில் நிதானமிழந்து மோசமான வகையில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்.
இதனை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தாலும் விஷமிகளின் அறிவிழந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்ததாலும், போலிகளுக்கு நாமே இலவச விளம்பரத்தை நமது தளத்தில் கொடுக்க வேண்டாம் என நினைத்ததாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளிக் கொண்டிருந்தோம்.
மேலும், சமுதாயம் உலகளாவிய அளவில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற விஷமத்தனங்களின் பக்கம் நமது கவனத்தைச் செலுத்தினால் சமூக சிந்தனையின் பக்கமிருந்து நமது கவனம் திருப்பப்பட்டு இது போன்ற மனநோயாளிகளிடத்தில் பதிலுக்கு பதில், விளக்கம் என நமது பொன்னான நேரம் வெறுமனே வீணாகும் என நினைத்ததாலும் அதுவே இஸ்லாத்தின் எதிரிகள் மற்றும் இது போன்று விஷமிகளின் நோக்கம் என்பதை நாம் நன்கறிந்ததாலும் அவர்களின் இச்சூழ்ச்சி வலையில் விழக்கூடாது என்ற நோக்கில் முழுமையாக அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருந்தோம்.
ஆனால் சில வாசக சகோதரர்கள் போலியின் எழுத்துகளை நேரடியாகக் குறிப்பிட்டு நம்மிடம் கீழ்கண்ட விதத்தில் விளக்கம் கோரி வருகின்றனர்.
//தங்கள் இணைய தளத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு கிறிஸ்தவ நண்பரின் வலைப்பதில் ஒரு செய்தியை ஒருவர் பதித்துள்ளார். தாங்கள் அது பற்றி ஏன் எந்தச் செய்தியோ மறுப்போ இது வரை வெளியிடவில்லை. அப்படியானால் அத்தகவல் தாங்கள் பதித்தது தானா? என்பதை விளக்கவும்// |
இது போன்று தொடர்ந்து வரும் வாசகர்களின் கணைகளுக்குத் தகுந்த விளக்கம் கூறப்படாத சூழலில் அவ்விஷம எழுத்துகளுக்கு உரியவர்களாக எம்மை யாரும் கருதிவிடலாகாது என்ற நோக்கில் கீழ்க்காணும் தன்னிலை விளக்கம் கொடுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கட்டற்றச் சுதந்திரத்தைத் தன்னகத்தே கொண்ட இணையத்தில் எவரும் எந்தப் பெயரிலும் எழுதலாம்; எழுதமுடியும். அப்துல்லாஹ் என்ற பெயரில் ஒருவர் தவறானக் கருத்தை எழுதினால் அதற்காக அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்டவர்களையெல்லாம் சந்தேகிப்பது தவறானக் கண்ணோட்டம் ஆகும்.
சத்தியமார்க்கம் என்ற பெயரில் அடுத்த இணையத்திற்குச் சென்று எழுத நமக்கு எந்தத் தேவையும் இல்லை. அல்லாஹ்வின் அளப்பரும் அருளால், எழுதுவதற்கும் பதிப்பதற்கும் எமக்குரியத் தனித் தளம் இருக்கும்போது வெளியே சென்று எழுத / பதிக்க வேண்டிய நிலையில் யாம் இல்லை. சத்தியம் என்றால் என்னவென்று தெரியாதவர்களே இது போன்ற போலிப் பெயர்களில் அசத்தியத்தைப் பரப்புவார்கள்.
‘சத்திய மாக்கம்‘ / ‘சத்தியமார்க்கம்‘ போன்ற பெயர்களில் இணைய சேவைகள் தரும் இலவச வலைப்பதிவுகளை ஏக அளவில் துவங்கி பிறரின் வலைப்பதிவுகளில் இவர் இட்டு வரும் பின்னூட்டங்களுக்குள் நம் தளத்தின் முகவரி கொடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தவறானக் கருத்தைப் பதிந்தவரிடம் அக்கருத்து பதியப்பட்ட இடத்திலேயே அதை நிரூபிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவதூறு எழுதிய அந்த நபர் அதற்குத் தகுந்த விளக்கம் இதுவரை வைக்கவில்லை. இதிலிருந்தே அந்த நபரின் அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.
“ஒருவர் தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
ஆதாரமற்ற எந்தச் செய்திகளையும் முஸ்லிம்கள் நம்பி அதைப் பிறருக்குப் பரப்பக்கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம். எனவே ஆதாரமற்ற அவதூறு செய்திகளை எளிதில் நம்பி, அதற்கு மறுப்பு என்ற பெயரில் அந்த நபரை விளம்பரப்படுத்த நாங்கள் தயாராக இல்லை. இன்ஷா அல்லாஹ் இனியும் அது பற்றி எழுத மாட்டோம்.
சத்தியமார்க்கம்.காம் இணைய தளமானது, https://www.satyamargam.com/ என்ற ஒரே டொமைன் முகவரியில் இருந்து மட்டுமே தற்போது இயங்குகிறது. சத்தியமார்க்கம் தளத்திற்கென்று வலைப்பதிவுகள் எதுவும் இல்லை. அவ்வாறு ஒரு வலைப்பதிவு துவங்கப்படின் அது சத்தியமார்க்கம் தளத்திலேயே தெளிவாக அறிவிக்கப்படும்.
எனவே https://www.satyamargam.com/ என்ற முகவரி அல்லாமல் வேறு எந்த முகவரியில் இருந்து சத்தியமார்க்கம் என்ற பெயரில் கருத்துகள் பதிக்கப்பட்டாலும் அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைச் சகோதரர்களுக்கு அறியத்தருகின்றோம்.
சத்தியமார்க்கம் பெயரில் விஷமத்தனமாக வேறு ஏதாவது முகவரிகள் இயங்குவதைச் சகோதரர்கள் அறியவரின் அவற்றை இங்குப் பதிந்து மனநோய் முற்றிப்போயிருக்கும் இப்போலியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்புடன்
-நிர்வாகம்(சத்தியமார்க்கம்.காம்)