எது பெண்ணுரிமை?

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

"பிரபஞ்சத்தின் ராஜாவாகிய இறைவன் என்னைப் பெண்ணாகப் படைக்காதிருந்து, என்மீது அருள் பொழிந்துள்ளான்" -யூத ஆண்களின் பிரார்த்தனை.

"மனைவியாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவள் ஏவாள்தான். எனவே எந்தப் பெண்ணின் மீதும் நாம் மிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" -புனித அகஸ்டின்.

முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொலை செய்யப்படுவதோ, முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுவதோ, உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுக் களையெடுக்கப்படுவதோ இங்கே மனித உரிமைகள் விவகாரம் இல்லை. மேற்கத்திய பார்வையில் இதனை நோக்கினால், பாதிக்கப்பட்டவர்கள்தான் இங்கே அதிகமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுத் திட்டப்படுவார்கள். ஒடுக்குபவர்கள் இங்கே உத்தமர்கள்.

'நாகரிகங்களின் மோதல்' உள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் விவகாரம் பெரிய பெண்ணுரிமைப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'தங்கமான தரத்தில்' வைத்துப் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அவர்களது சமூகத்தில் 'வழங்கப்பட்டுள்ள கண்ணியம்' பெரிதும் போற்றப்படுகிறது. முஸ்லிம்களும் அவ்வழியைப் பின்பற்ற வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

மேலை நாடுகள், பெண்களை அடக்கி ஒடுக்கிய, பெண்களை மனித இனமாகக் கருதாத ஒரு பென்னம் பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

1860 வரை இங்கிலாந்திலுள்ள ஒரு மணமான பெண், சட்டபூர்வமான ஒருவராகக் கருதப்படவில்லை. திருமணமானவுடன் அந்தப் பெண் அவளது கணவனின் உடைமையாகி விடுவாள். அவளது பெயரும், தான் யாருடைய சொத்து என்பதை வெளிகாட்டும் முகமாக மாற்றப்பட்டுவிடும். இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. அவளால் ஒரு சொத்தை வாங்க முடியாது. ஒப்பந்தம் போட முடியாது. உயில் எழுத முடியாது. அவளது சொந்தக் குழந்தைகளின் பாதுகாவலராக ஆவதற்கான உரிமைகள் கோர முடியாது.

"கணவனுக்கு என்னவெல்லாம் உண்டோ அதுவெல்லாம் அவனுக்கே சொந்தம், மனைவிக்கென்று என்னவெல்லாம் உண்டோ அதுவெல்லாம் அவனுக்கே சொந்தம்!" என்று 1962ஆம் ஆண்டின் இங்கிலாந்துச் சட்டம் பிரகடனப்படுத்துகிறது. இதைவிடவும் மோசமானது என்னவெனில் ஒரு விருப்பமில்லாத திருமணத்திலிருந்து வெளிவரும் உரிமைகள் அவளுக்குக் கிடையாது. 1857ஆம் ஆண்டு வரை, விவாகரத்து என்பது இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக மட்டுமே இருந்தது. அங்கே பெண்ணின் இரண்டாந்தர நிலை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. "ஆண் இறைவனின் நிழலும் மகத்துவமும் ஆவான். ஆனால் பெண் என்பவள் ஆணின் நிழலும் மகத்துவமும் ஆவாள்" (டி கொரின்தியன்ஸ் 114).

ஆதலால் மேலைநாட்டில் 15ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த எந்த ஒரு மதிக்கப்படத்தக்க தலைவரும் இந்தக் கருத்தை எதிர்க்கத் துணியவில்லை. மிகப்பெரிய சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் கூறினார்: "பெண்கள் தளர்ந்து விட்டாலோ, இறந்து விட்டாலோ அது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விடட்டும். அதற்குதான் அவர்கள் இருக்கிறார்கள்".

மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட்(1972), ஜான்ஸ்வோர்ட்மில்(1869) ஆகியோர்தாம் முதல்முதலில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் மதிப்பதற்குத் தகுதியற்ற மனிதர்களாகக் கணிக்கப் பட்டதால், அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களால் புறந்தள்ளப்பட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில் நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியது. அதுவும் பெண்களுக்கான நியாயமான காரணங்களுக்காக அல்ல. அப்போது ஏற்பட்ட முதலாளித்துவத் தொழிற்புரட்சியினால் இந்த மாற்றம் ஏற்பட்டது. அதாவது சமூக மாற்றம் என்றக் கட்டாயத்தேவை ஏற்பட்டதால் 'பெண்களின் முன்னேறம்' தலைதூக்கியது.

இந்தப் புரட்சி ஏற்பட்டவுடன் கைவினைஞர்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. அவர்கள் தங்கள் பிழைப்பிற்காகப் பெரிய நகரங்களை நோக்கி நகர்ந்து கடைகளிலும் நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர்ந்தனர். அவர்களது வயிற்றை நிரப்பும் அளவுக்குக் கூலி தரப்பட்டது. ஆனால் வீட்டில் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றக் கூடியதாக அந்த வருமானம் இல்லை. அவர்கள் குடும்பப்படி கேட்டனர்; கொடுக்கப்படவில்லை. வேறு வழியில்லாமல் வீட்டிலிருந்த பெண்களையும் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்ப ஆரம்பித்தனர். இப்படித்தான் வீட்டிலிருந்தே பெண்கள் வெளிக்கொண்டு வரப்பட்டனர். பின்னர் கிளார்க் வேலைகள் பரவ ஆரம்பித்த பொழுது எல்லாத் தரப்பு பெண்களும் லட்சக்கணக்கில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் விற்பனைப்பணிப் பெண்களாகவும் தட்டச்சுப் பணியாளர்களாகவும் செயலாளர்களாகவும் பணியில் சேர்க்கப்பட்டனர். ஆண்களை விடப் பெண்களை வேலைக்குச் சேர்ப்பதில் இன்னொரு பெரிய லாபம் இருந்தது. அதுதான் குறைந்த சம்பளம்.

இந்த லாபங்களெல்லாம் மறைக்கப்பட்டு, பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குப் பெண்ணிய இயக்கவாதிகளால் 'பெண்ணுரிமை' முலாம் பூசப்பட்டது. எந்த அளவுக்குப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனரோ, அந்த அளவுக்கு 'பெண்ணுரிமை வளர்ந்ததாக'க் கணிக்கப்பட்டது. தொழிற்புரட்சி, இயந்திரப் புரட்சியால் ஏற்பட்ட சமூக மாற்றம் 'பெண்கள் முன்னேற்றம்' என்று பெயர் சூட்டப்பட்டது.

பெண்ணியவாதிகளின் இந்த 'முன்னேற்றம்' முன்வைத்த வாதம் என்னவெனில், "ஒரு பெண் தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறினால் அது அடிமைத்தனம்! ஆனால் அதே பெண் யாருக்கோ, எவருக்கோ ஹோட்டல்களிலும் வீதிகளிலும் விமானங்களிலும் உணவு பரிமாறினால், அதனால் நேரிடும் பாலியல் தொல்லைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு சேவைகள் செய்தால் அது பெண்களின் முன்னேற்றம்"!

என்னே அருமையான வாதம்!

பழங்கால கிரேக்கத் தத்துவவியலாளர்கள் பெண்ணுக்கு ஆன்மா உண்டோ, இல்லையா என்று கடுமையான விவாதம் செய்தனர். ஆனால் 'நாகரிகத்தின்' உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஐரோப்பியர்களும் அமேரிக்கர்களும் இந்தப் பொல்லாத விவாதத்திற்கு விடை தந்தனர். அதாவது பெண் என்பவள் ஓர் உடலைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆன்மாவாவது கத்தரிக்காயாவது. பெண் என்பாள் ஓர் அழகிய உடலுக்குச் சொந்தக்காரி. அவளை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்; ரசிக்கலாம்; பயன்படுத்தலாம். அவளை அரை நிர்வாணத்துடன் பார்க்கலாம்; முழு நிர்வாணமாகவும் பார்க்கலாம். "பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்" என்று மேலைநாடுகள் மார்தட்டிக் கொண்டிருக்கும் பொழுதுதான் இந்த நிர்வாணக்கோலங்கள் அரங்கேறுகின்றன.

'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' என்ற பத்திரிகை இண்டர்நெட்டில் உலாவும் ஆபாசப் படங்கள் பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டது. "நிர்வாணப்படங்கள் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் இந்த இண்டர்நெட் உலகம் உருவாக்கியிருக்கும் போக்கு எப்படிப் போய் விட்டதென்றால் பெண் தனது உடலை வியாபாரப் பொருளாக்கி, அதனை இண்டர்நெட்டில் உலாவ விட்டு வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அவலம் வந்து விட்டது" என்று அந்த ஆய்வு கூறுகின்றது.

இந்தச் சூழ்நிலை நிலவும் ஒரு நாட்டில் பெண்களைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்திய ஒரு நாட்டின் அதிபர், பெண்களிடமிருந்தே அதிக ஓட்டுகளை வாங்கினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இருக்கிறதா? யாரும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு சமுதாயம் அது. ஏனெனில் பாலியல் கொலைகள் என்பது அங்கு அன்றாடச் செய்தி; சாதாரண செய்தி. 'வீட்டு வாழ்க்கை அமைப்பு' அழிந்ததன் விளைவுதான் இந்தக் கேடுகெட்டச் சூழ்நிலை உண்டானதன் காரணம்.

1994ஆம் ஆண்டு மட்டும் 12 லட்சம் விவாகரத்துகள் ஆணானப்பட்ட அமெரிக்காவில் அறங்கேறியிருக்கிறது. நிபுணர்கள், "புதிய திருமணங்களில் பாதி விவகாரத்தில்தான் முடியும்" என்று சர்வ சாதாரணமாகக் கணிக்கிறார்கள். ஓர் அநீதி அமைப்பால் சுரண்டலின் வடிவம்தான் மாறியிருக்கிறது. அவர்களால் வீடுகளின் உள்விஷயங்களை மாற்ற முடியவில்லை. ஆதலால் அவர்கள் வீடுகளை விட்டும் பெண்களை 'விடுதலை' செய்து விட்டனர்.

முற்காலத்தில் கெட்ட ஆண்களுக்கெதிராகப் போராடிய பெண் இன்று பெண்ணியம், நவீனப் பெண்ணியம் என்ற பெயரால் இன்றைய ஆண்களுக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

இதற்கெல்லாம் மாறாக, இஸ்லாம் பெண்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை அள்ளி வழங்குகிறது. பெண்களை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றும் கொடுமை இஸ்லாத்தில் இடம் பெறவில்லை. அவளுக்குச் சொத்துக்களை சொந்தமாக்கும் உரிமை உண்டு. வாரிசுரிமையும் உண்டு. திருமணத்தில் கணவனுக்கு என்ன உரிமைகளெல்லாம் உண்டோ அத்தனை உரிமைகளும் மனைவிக்கு உண்டு.

இஸ்லாத்தில் பெண்கள் வீட்டின் எஜமானிகள். குடும்பத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகள். குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பாதுகாவலர்கள். எதிர்கால சமுதாயத்தின் உயிர் நாடிகளான இன்றைய குழந்தைகளை வளர்த்தெடுக்கும் வார்த்தெடுக்கும் உன்னதப் பொறுப்பில் உள்ளவர்கள்.

அந்தக் குழந்தைகளின் சுவனம், தாய் என்ற ஒரு பெண்ணின் காலடியில்தான் உள்ளது. அவளது கணவனின் நன்மைகள் அவளை அவன் எவ்வாறு நடத்துகிறான் என்பதை வைத்தே இறைவனிடம் தீர்மானிக்கப்படும்.

ஒரு பெண்ணை நல்ல முறையில் அன்பு செலுத்தி அரவணைத்து வளர்த்தெடுக்கும் தந்தைக்கு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது.

ஆக ஒரு கணவனுக்கு, ஒரு மகனுக்கு, ஒரு தந்தைக்கு ஈடேற்றம் என்பது பெண்ணை மையமாக வைத்துத்தான் என்று இஸ்லாம் அன்றே தீர்மானித்து விட்டது. இது இன்றைய 'நவீனப் பெண்ணியவாதி'களுக்குப் புரியுமா?

இன்ஷா அல்லாஹ் காலம் புரிய வைக்கும்.

ஆக்கம்: சகோ. முஹம்மத் அப்துல் கனி

 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் அப்துல் கனி  அவர்கள் அறிவியல் பட்டப்படிப்பும் கேட்டரிங் பட்டயப் படிப்பும் முடித்தவர். தற்சமயம் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.  எழுத்தார்வம் உடைய இவர் இஸ்லாமிய சஞ்சிகைகள் அனைத்தையும் தொடர்ந்து படித்து வருகிறார்.

2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஊக்கப் பரிசினை வென்ற சகோதரர் முஹம்மத் அப்துல் கனி அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்

 

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.