உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்

Share this:

திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

 

அளவற்ற திறமைகளைக் குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்குச் செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
 
 என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
 
 தேசிய அளவில் நடத்தப்படும் இந்தத் தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
 
 இப்போது உங்களுக்குப் புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
 
 பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும் திறனாய்வு தேர்வு உதவுகிறது.
 
 இந்தத் தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.
 
 என்.சி.இ.ஆர்.டி.:-
 
 தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள்இ மகளிர் கல்விஇ அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
 
 மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
 
 தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
 
 மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.
 
 தேசிய திறனாய்வு திட்டம்:-
 
 1963-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
 
 அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
 
 நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி.இ எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.
 
 தேர்வு முறை:-
 
 மூன்று நிலைகளைக் கொண்டு இந்தத் திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
 
 அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
 தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ‘இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006” என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
 
 புதுச்சேரி மாணவர்கள் ‘இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
 
 மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்தத் தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்தத் தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
 
 அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்குப் பின்பு நடத்தப்படும்.
 
 தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும்  www.ncert.nic.in  என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
 
 தேர்வில் வெற்றி பெற வழிகள்:
 
 மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
 
 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.
 
 இணையதளம் அளிக்கும் சேவை:-
 
 மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளைப் படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
 
 தகவல்: மின்னஞ்சல் மூலம்  ஒரு சகோதரர். 
 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.