மூன்று பத்துகள் (பிறை-13)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 13

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் எல்லா நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமளான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமளானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.

கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் ரமளானில் காணலாம்.

இந்தப் பக்திப் பரவச நிலை, புனித ரமளான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ? எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமளானில் மட்டுமின்றி ரமளானுக்குப் பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல்- ஹதீஸ் ஆதார நூல்: இப்னு குஜைமா பாகம் 3 எண் 191.

https://cdn1.iconfinder.com/data/icons/nuvola2/128x128/apps/important.png(குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்ற பலவீனமானவர் இடம்பெறுவதால் இது உறுதியற்றதாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக இதனைப் பதிவு செய்த இமாம் இப்னு ஹுஸைமா கருதுகிறார். பார்க்க : http://www.islamkalvi.com/portal/?p=4925).

அருள் நிறைந்த இம்மாதம் முழுவதிலும் அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவிப்புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்.

oOo

(மீள் பதிவு)
-தொடரும் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.