காஸா சண்டை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையேயான போர்நிறுத்தம் இன்று (26/11/2006) காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடங்கிய முதல் மணிநேரத்தில் பலஸ்தீனத் தரப்பிலிருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும், எனினும் இஸ்ரேல் அமைதி காப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் தோல்வி அடைந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நல்லதொரு வாய்ப்பாக இந்தப் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் உல்மர்ட் தெரிவித்தார்.

பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இந்தச் சண்டைநிறுத்தத்தை உறுதி செய்யும் வகையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு பலஸ்தீனப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் போர்நிறுத்தம் மூலம் உண்மையில் இஸ்ரேல் பலஸ்தீன நாடுகள் உருவாகும் அக்கறையுடனும் ஒத்துழைப்புடனும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தமக்கு இருக்கும் நாட்டத்தை வெளிக்காட்டப்போவதாக உல்மர்ட் கூறினார். இதற்கு முன்னதாக நல்லெண்ண நடவடிக்கையாக காஸா பகுதியில் பெருமளவு நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படையினரைத் திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

காஸா பகுதியில் இருக்கும் பலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படையினர் திரும்பப் பெறப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்குமாறு பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவும் வேண்டுகோள் விடுத்ததுடன், ஹமாஸ் அமைப்பு இந்தப் போர்நிறுத்தத்தைத் தானாக மீறாது எனவும் உறுதி அளித்தார்.

இந்தப் போர்நிறுத்தத்துக்கான முதல் வேண்டுகோளை முன்வைத்தது ஹமாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர்நிறுத்தம் வெற்றி பெற்று மத்தியகிழக்கில் அமைதி திரும்பவும் பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கை சூழல் திரும்பவும் சத்தியமார்க்கம்.காம் இறைவனை வேண்டுகிறது.

இதை வாசித்தீர்களா? :   2006-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு!