மனிதநேயப் பிரச்னைகளுக்கான தீர்வு – அமைதி (இணக்கம்) பற்றிய மாநாடு!

Share this:

{mosimage}ஒரு தனிமனிதனாகட்டும் அல்லது முழு மனிதச்சமூகமாகட்டும், அவரவர் தன்னுள்ளும், தனது செயல்பாடுகளின் மூலம் அண்டை, சுற்றுச்சூழல்களின் உள்ளும், புறமும் அமைதியைத் தவழச் செய்வதே சமூகத்தில் சக மனிதர்களுடனான மனித நேயத்தை வளர்க்க உதவும். இத்தகைய மனித நேயத்தைச் சமூகத்தில் வளர்ப்பதும், அதனைப் பற்றிய அறிவைக் கொடுப்பதுமே பிரச்சினைகளும் குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்த மனித வாழ்வில் ஒரு மகத்தான மேம்பாட்டுத் திட்டமாகவும், அவனும் அவன் வாழும் சமுதாயமும் எதிர்கொள்ளும் எல்லாவித பிரச்னைகளுக்குரிய சரியானதொரு தீர்வாகவும் இருக்க இயலும்.

{mosimage}

 

இனங்கள், நிறங்கள், மொழிகள்,பழக்கங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றின் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் ஓர் ஆதிக்க சக்தி, இந்த அமைதியானச் சூழ்நிலையை சீர்குலைக்கும் விதமாகத் தான்தோன்றித்தனமாக செயல்படுவது அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய எத்தனிப்பது உலகின் அமைதியை அழிக்கும் ஒரு செயலாகும். ஓரிடத்தில் நிலவும் அமைதியான சூழல் சுய இலாப நோக்கங்களுக்காக இன்னொருவரால் திட்டமிட்டுக் குலைக்கப்படும்போது அது மனிதநேயத்திற்குக் கேடு விளைவிப்பதோடு நில்லாமல் மீண்டும் சுற்றி வந்து அமைதியைக் குலைத்தவரின் மீதும் அவர் வாழும் சமுதாயத்தின் அப்பாவிகள் அபலைகள் மீதும் கூடப் பாயும் நிலை ஏற்படுகிறது.


இவ்வுலகில் ஆங்காங்கே பரவலாக நிகழ்ந்து கொண்டு வரும் அநீதியையும், மனித உரிமை மீறல்களையும் துணிச்சலுடன் முன்னின்று எதிர்ப்பதும் அதனைச் செய்வோருக்கு அவர்களின் கொடுஞ்செயல்களினால் மனித நலனுக்கு விளையும் பெரும் நஷ்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அளிப்பதையும், அத்தகைய தீய எண்ணங்களில் இருந்து அவர்களை மீளவைக்கும் நன்னெறிகளைப் போதிப்பதையும் சமுதாய நலன் மற்றும் அமைதியை நாடும் ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் படைத்த இறைவனால் கடமையாகவே சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வுலகைப் படைத்த இறைவனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்ட வேதங்களும், அதில் அளித்த வழிகாட்டல்களும், அதை விளக்கிப் போதித்து வந்த நன்மக்களாகிய இறைவனின் தூதர்கள் அனைவரும் இந்த மனித சமுதாயம் எனும் குடும்பம் ஒரே குடும்பம் அனைவரும் ஒரே தாய்-தந்தைக்குப் பிறந்த சகோதரர்கள், அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சூழ்நிலைகளை எதிர் கொண்டு அழகான முறையில் தீர்வு கண்டு வாழ்வதைப் போல் இந்த உலகில் வாழ்வதனாலும் இவ்வுலகை படைத்தவனை அறிந்து அவன் ஏவல் விலக்கல்கள் அடிப்படையில் தமது செயல்பாடுகளை சீரமைத்தாலும் மட்டுமே அவனுக்கு உண்மையான சாந்தியும் அமைதியும் ஈடேற்றமும் கிடைக்கும், இல்லையென்றால் இது கிடைக்காது என்றதே நமக்கு போதிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மை மறக்கப்படும் போது அல்லது திட்டமிட்டு மறைக்கப்படும் போது அல்லது மறுக்கும் விதமாக மனிதசமுதாயம் வாழ முற்படும்போது இவ்வுலகில் இணக்கமும் அமைதியும் சீர்குலையும் நிலையும் இதர இழப்புகளும் ஏற்படுகின்றன.

மேற்கூறப்பட்ட அத்தகைய வெறுக்கத்தக்க நிகழ்வுகளில் இருந்து உலகைக் காக்க உதவிடும் இறைத்தூதையும் இறைவேதங்களின் சத்தியவாக்கை நினைவூட்டும் வகையில் ஓர் அருமையான மாநாடு (சாந்தி /அமைதி எனும் PEACE CONFERENCE) மாநாடு இந்தியாவின் மும்பை நகரில் எதிர்வரும் நவம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 2, 2007 வரை மும்பையின் பிரபல சோமையா மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.

{mosimage}

 

இதன் முக்கிய நோக்கம் முழு மனிதச் சமுதாயத்திற்கும் அமைதியைப் போதிக்க வந்த இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தி இஸ்லாத்தையும் சர்வதேச அளவிலான முஸ்லிம்களையும் குறித்தத் தவறான எண்ணங்களைத் தெளிவுறச் செய்தலுமாகும். மேலும் இம்மாநாடு நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு இஸ்லாம் தனி மனிதனுக்கும் நமது மனித சமுதாயத்திற்கும் உண்மையான அமைதியைக் கொண்டு வரும் என்பதனைக் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சர்வதேச அளவிலான சொற்பொழிவாளர்கள் இதில் உரையாற்றவிருப்பதால் அனைத்து சமயத்தவர்களும் இஸ்லாத்தினைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளவும், இஸ்லாத்தின் மீதான தங்களுக்கு இருந்து வரும் ஐயங்களைத் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நேரடியாகக் கேட்டுத் தீர்த்துக்கொள்ளவும் ஓர் அற்புத வாய்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலையிலும் மதியமும் ஐயாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய அளவில் குளிரூட்டப்பட்ட அரங்கத்திலும், மாலை நேர நிகழ்ச்சிகள் நாற்பதாயிரம் பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கிலும் நடைபெற உள்ளன. மேலும் மாநாட்டுத் திடல் எதிரே உள்ள இடத்தில் சுமார் பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பத்து நாட்கள் மாநாட்டிற்கு வருபவர்கள் எண்ணிக்கை மொத்தம் 500,000-ஆக இருக்கக்  கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்னையிலும் இதே போல் ஒரு மாபெரும் மாநாடு சில ஆண்டுகளுக்கு முன்னர் IIM எனும் அமைப்பின் சார்பாக பெரும் வரவேற்புடன் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பல்வேறு சமுதாய மக்களின் கேள்விகள் அதற்குரிய ஆதாரபூர்வமான பதிலகள் குறுவட்டுகளாகவும், PEACE TV தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் தொடர்ந்து தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் உள்ளது.

125 நாடுகளுக்கு இலவசமாக ஒளிபரப்பாகி வரும் நூறு மில்லியன் பார்வையாளர்கள் காணும் PEACE TV, சார்பிலேயே இந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடியாகயும் மறுபதிப்பாகவும் ஒளிபரப்பவுள்ளது. தவிர இம்மாநாட்டின் நிகழ்வுகளை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கண்டுகளிப்பதற்கு ஏதுவாக சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் குவிந்துள்ளன என்பது கூடுதல் தகவல்.


மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் காண வேண்டிய இணைய தளங்கள்:
 

http://www.peaceconference.in/

http://islam.thetruecall.com/

http://www.drzakirnaik.info/
 

இந்நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பர அறிக்கைகளில் காணலாம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.