சவூதி அமைச்சரவையில் முதல் பெண்மணி!

Share this:

முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரை நியமித்து சவூதி அரேபிய அரசு வரலாறு படைத்துள்ளது. நூரா பின்த் அப்துல்லாஹ் அல்-ஃபாயிஸ் என்ற பெண்மணி, கல்வித்துறையில் பெண்கள் விவகாரத்திற்கான துணை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்த நியமனம் எனக்கு மட்டுமல்லாது சவூதிப் பெண்கள் அனைவருக்குமே பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.திறன் மிகுந்த செயற்குழுவின் உதவியுடன் சவால்களைச் சந்திக்கவும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன்” என அமைச்சர் நூரா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சவூதிப் பெண்கள் கல்வி முன்னேற்றத்தில் சவால்களைச் சந்திக்க என்ன செய்யலாம் என்று கருத்துத் தெரிவிக்குமுன் தற்போதைய சூழ்நிலையை நன்கு ஆராயத் எனக்கு நேரம் தேவைப்படும் என்றும் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அளவிற்கு சவூதிப் பெண்களுக்குத் திறமையும் தகுதியும் நிச்சயமாக உண்டு என்றும் அவர் கூறினார்.

ரியாதிலுள்ள மன்னர் சவூத் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பும் அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலப் பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பும் பயின்ற நூரா, 1982-ல் ஒரு பள்ளிக்கூடத்தில் சாதாரண ஆசிரியையாகத் தமது பணியைத் துவக்கினார். 2001-ல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற கல்வி நிறுவனத்தில் பெண்கள் பிரிவின் பொது இயக்குனராக நியமிக்கப் பட்டார். கல்வித்துறையில் அவரது நீண்ட கால அனுபவமும் அவரின் கணவரது ஊக்குவிப்பும் ஆதரவுமே அவரை அமைச்சராகும் அளவிற்கு உயர்த்தியுள்ளது.

சவூதியில் பொதுமக்கள் பலரும் இந்த அமைச்சக நியமனத்தை வரவேற்றுப் புதுநம்பிக்கை தெரிவித்துள்ளனர். கல்வித் துறையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஒரு பெண்மணி, “இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்றும் “எங்கள் நாட்டின் கல்வித்துறை மேம்பாட்டிற்கு இது உதவும் என்றும் தெரிவித்தார்.இது வெற்றிகரமான முதல்படி. இந்தப் பதவியில் இதற்கு முன் ஆண்கள் நியமிக்கப் பட்டிருந்தது பெண்களுக்குச் சில சிரமங்களை ஏற்படுத்தியது.ஒரு பெண்ணால் தான் சகபெண்கள் சந்திக்கும் சவால்களைப் புரிந்துக கொள்ளமுடியும். இந்தமாற்றத்தினால் நன்மையே விளையும்” என்றும் அவர்கூறினார்.

சவூதிக் கல்வியாளரும் எழுத்தாளருமான அலீ அல் த்வாதி, “ஒரு பெண் இது போன்ற தலைமைப் பதவியில் இருப்பது மிகவும் கட்டாயமானது.சவூதியில் 10,000த்திற்கும் மேலான பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அவற்றில் பயிலும் பெண்களின் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்கவும் அவற்றைப் புரிந்துக் கொள்ளவும் அமைச்சகத்தில் ஒரு பெண் தொடர்பாளர் இருக்க வேண்டியது அவசியம்” என்று கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு பொறுப்புகளைப் பிரித்து வழங்குவதால் சவூதியில் பெண்களும் உயர்மட்டத் தலைமைத்துவப் பதவிகளுக்கு வருவது எளிதாகிறது.மற்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் சவூதியில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் உயர்பதவிகளை வகிக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

எஃப்பாத் கல்லூரியின் முதல்வரான ஹைஃபா ஜமால் அல்-லைல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, “இந்த நியமனம் பிற சவூதிப் பெண்களும் உயர் பதவிகளை அடைந்து சமூக முன்னேற்றத்தில் தமது பங்களிப்பைச் செலுத்த ஒரு தூண்டுகோலாக அமையும் என்றார்.சவூதியில் ஒரு பெண்மணி முதன்முதலாக அமைச்சரானதோடு நில்லாமல், மேலும் பல பெண்களும் முக்கியமான பதவிகளுக்கு வர வேண்டும்.கல்வி அமைச்சகத்தில் திருமதி நூராவின் பிரவேசத்தின் மூலமாகப் பெண்கள் தங்கள் குரலை எந்தத்தயக்கமும் இன்றி ஒலிக்கச்செய்யவழிபிறந்துள்ளதுஎன்றும் ஹைஃபா தெரிவித்தார்.

மன்னர் சவூத் பல்கலைக்கழத்தில் துணைப் பேராசிரிராகப் பணியாற்றும் காலித் அல் ரதிஹான், “இது ஓர் எளிதான செயலாக இருக்கப் போவதில்லை” என்றுமாற்றமான ஒரு கருத்தைக்கூறினார்.மாறுதல்களை விரும்பாத பிரிவினர் இதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இருந்தபோதிலும் இந்த நேர்மறையான மாறுதலினால் எதிர்கால முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. துணை அமைச்சர் தனது திறன்களை நிரூபித்து வெற்றி அடைந்தார் எனில் அது ஒரு திருப்புமுனையாக அமையும்” என்றும் அவர் சொன்னார்.

துணை அமைச்சர் நூரா அல்-ஃபாயிஸின் நியமனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்த துபை அரசாங்கப் பள்ளியின் துணைத் தலைவர் அஸ்மா சித்திக்கீ, “இந்த நியமனம் சவூதிப் பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல் என வர்ணித்தார்.பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் சவூதி அரசு பாராட்டிற்குரியது.நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தையும்கல்வித்துறையில் அரசின் முதலீடுகளையும் வைத்துப் பார்க்கையில், எதிர்காலத்தில் மேலும் முக்கியமான பதவிகளுக்குப் பெண்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை” என்று சித்திக்கீ தெரிவித்தார்.

சவூதி அரசின் வரவேற்கத் தக்க மாறுதல்களால் பெண்கள் கல்வித் துறைக்கான துணை அமைச்சர் பொறுப்பைப் பெற்றுள்ள முதல் சவூதிப் பெண் அமைச்சர் நூரா அல்-ஃபாயிஸ் அவர்களுக்கும், முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குலூத் அல் தாஹேரி அவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, பொறுப்பேற்ற துறையில் இவர்கள் வெற்றி பெறுவதற்கு வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் என்று பிரார்த்தனை புரிகிறது!

தகவல் : அரப் நியூஸ்

தமிழில் : ஸலாஹுத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.