பிற மதங்களுடன் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் சவூதி அரசர்

{mosimage}முஸ்லிம், கிருஸ்துவர் மற்றும் யூதர்களுக்கிடையில் மார்க்க ரீதியிலான கலந்துரையாடல் நடைபெற வேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் விருப்பம் தெரிவித்திருக்கிறார் 
 
ஜப்பானில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் "ஓரிறையை ஏற்றுக்கொண்ட (இஸ்லாமிய, கிறிஸ்தவ, மற்றும் யூத) மார்க்கங்களின் பிரதிநிதிகள், தங்கள் சக மார்க்கச் சகோதரர்களைச் சந்திக்க முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மன்னரின் இந்த யோசனைக்கு சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள் ஒப்புதல் அளித்து விட்டதாகவும், அடுத்தக் கட்டமாகப் பிற முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
"இறைவன் நாடினால், தௌராத் மற்றும் இன்ஜீல் வேதங்களைப் பின்பற்றும் எமது பிற மார்க்க சகோதரர்களை நாம் சந்தித்து, மனிதகுல நலன்களைக் காப்பாற்றும் வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம்" என்று மன்னர் தெரிவித்தார். இதைப் பற்றி ஐக்கிய நாட்டு மன்றத்திலும் மன்னர் பேசவிருப்பதாக தெரிகிறது.
 
"இன்றைய சூழலில் நேர்மை, நற்குணம், கடமையில் உறுதிப்பாடு, மார்க்கத்தில் பிடிப்பு போன்ற பண்புகளை நாம் இழந்து விட்டோம். குடும்பச் சிதைவுகளும் நாத்திக வாதமும் உலகில் பெருகி விட்டன. மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் இப்பிரச்னைகளை எதிர் கொண்டு அவற்றிற்கான தீர்வுகளைக் காண வேண்டிய பொறுப்பு எல்லா மார்க்கத்தினருக்கும் இருக்கிறது."
 
இந்தக் கலந்துரையாடல் எங்கே நடக்கக் கூடும் என்பதைப் பற்றி மன்னர் எதுவும் சொல்லவில்லை. கடந்த இரண்டாண்டுகளாகத் தான் யோசித்துக் கொண்டிருக்கும் இத்திட்டத்தைப் பற்றி சென்ற ஆண்டு நவம்பரில் வாடிகன் நகருக்குச் சென்றிருந்தபோது போப்புடன் விவாதித்ததாகவும் மன்னர் தெரிவித்தார்.

இதை வாசித்தீர்களா? :   2006-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு!