கண்ணுக்குக் கண் …?

Share this:

ஆமினா பஹ்ராமி என்பது அந்த அழகிய பெண்ணின் பெயர். ஈரானைச் சேர்ந்தவர். அதே நாட்டுக்காரனான  மாஜித் முவஹிதி என்னும் வாலிபன் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால்  அவனுடைய கோரிக்கையை, தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார் ஆமினா.  என்னதான்  முயன்றும் ஆமினாவின் மனதை வெல்ல மாஜிதால் இயலவில்லை.

அழகுப் பித்துப் பிடித்த மாஜிதுக்குள் அழிவின் வன்மம் தலைத் தூக்கியது. தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பாத ஆமினாவை  வேறு யாரும் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்த  அவன்   அடுத்து செய்ததோ குரூரம். ஆமினாவின் முகத்தின் மீது திராவகத்தை வீசியடித்தான் அந்தக் கயவன். உடலும், தலையும் எரிய, முகம் முழுவதுமாகச் சிதைந்து விகாரமடைந்தார் ஆமினா. அதைவிட, இரு கண்களின் பார்வையும் முழுவதுமாகப் பறி போனது.  இது நடந்தது 2004ஆம் ஆண்டு.

https://www.youtube.com/watch?v=qpls-muZibE

ஈரான் காவல்துறை மாஜித் மீது வழக்குப் பதிவு செய்தது.  நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 2008  நவம்பரில் தீர்ப்பு வந்தது. “கியாஸ்” எனப்படும் இஸ்லாமிய சட்ட வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாய்வின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு பாதிப்புக்குள்ளானவரின் விருப்பத்தைக் கேட்டு அமைந்திருந்தது. அதாவது, ஆமினா நாடினால் தன் அழகை அழித்து வாழ்க்கையைச் சீரழித்தவனை மன்னிக்கலாம். மாறாக  அவனும் வேதனைப்பட வேண்டும் என்று அவர் கருதினால், தண்டனை தரும் நோக்கில் ஆமினாவின் பார்வையைப் பறித்ததற்குப் பகரமாக மாஜிதுடைய ஒரு கண்ணில் சில அமில ரசாயன சேர்க்கைகளை அரசாங்கத் தரப்பு  மருத்துவர் செலுத்துவார். அது அவனுடைய ஒரு கண் பார்வையைப் பறிக்கும்.

மன்னிப்பா? தண்டனையா? பாதிக்கப்பட்ட ஆமினாதான் நீதி வழங்க வேண்டும் என்றது தீர்ப்பு.

இதுபோன்ற காரணங்களால் பெண்கள் மீதான அமில வீச்சு அதிகரித்திருக்கும் ஈரானில் இந்தத் தீர்ப்பு பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

தீர்ப்பின் பின்னர் வானொலி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த ஆமினா தீர்ப்பை மகிழ்ந்து  வரவேற்றிருந்தார். “பழி வாங்கும் நோக்கம் இல்லையெனினும் தான் வேதனைப்பட்டது போல அவனும் வேதனைப்படவேண்டும்” என்றார் அவர்.

இழந்த பார்வையை மீட்கும் நோக்கில் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேடிச் சென்று வந்த ஆமினாவுக்கு ஆரம்பத்தில் 40 சத வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.  ஆனாலும், இறுதியில் அவரது பார்வை முழுவதுமாக பறிபோனதைத் தடுக்க முடியவில்லை.

இப்போது 34 வயதாகும் ஆமினாவின் விருப்பப்படி தீர்ப்பை நிறைவேற்றும் அந்த நாளும் வந்தது.

அதாவது, இஸ்லாத்தின் எதிரிகள் அடிக்கடி அங்கலாய்க்கும் “கண்ணுக்குக் கண்”

மண்டியிடப்பட்டு அமர்த்தப்பட்டிருந்த, மாஜித் தலை குனிந்தபடி தேம்பித் தேம்பி அழுதபடியிருந்தான். தன்னுடைய சாத்தானியச் செயல் குறித்துப் பரிபூரணமாக அவன் வருந்தினான். இறை மன்னிப்பை யாசித்து உள்ளம் உருகிப் பிரார்த்தித்தபடி இருந்தான். மனித உரிமையின் மகத்துவத்தைச் சொல்லும் இஸ்லாத்தின் குரலான “பாதிக்கப்பட்டவர் மன்னிக்காதவரை இறைவனும் மன்னிப்பதில்லை” எனும் நபிமொழியையும் அவன் அறிந்தே இருந்தான்.

மருத்துவரும் ஆயத்தமாக இருந்தார். குற்றவாளியான மாஜிதின் கண்ணொன்றில் சில சொட்டுகள் அமிலக் கலவை இடுவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே மீதமிருந்தன.

அப்போது ஒலித்தது ஆமினாவின் குரல். “அவனை விட்டுவிடுங்கள், அவனை விட்டுவிடுங்கள், நான் அவனை மன்னித்துவிட்டேன்”

இதயங்களைப் புரட்டக் கூடிய இறைவனின் கருணைதான் அங்கே ஆமினாவின் குரலாய் ஒலித்தது.

இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த  செய்திதான் இது.

மாஜிதின் கண்களிலிருந்து இப்போதும் நீர் வழிந்தபடி இருக்கிறது. ஆனால் அதில் வன்மம், வக்கிரம் என்னும் திராவகங்களின் எரிச்சல் இல்லை.  அதில் அன்பின் ஆனந்தம் வழிகிறது இப்போது.

மன்னிக்கப்பட்ட இதயத்திலிருந்து
ஊற்றெடுக்கிறது கண்ணீர்
மனிதத்தின் வேருக்கு நீராய்.

– தகவல் : கவிஞர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.