2006-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு!

Share this:

2006 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, வங்காள தேசத்தைச் சேர்ந்த முனைவர் முஹம்மது யூனுஸ் என்கிற பொருளாதார வல்லுனருக்கும் அவர் தோற்றுவித்த கிராமீன் வங்கிக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கிராமீன் என்றால் கிராமங்கள் என வங்காள மொழியில் பொருள்.

வறுமை ஒழிப்பைத் தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு மிகவும் வறிய ஏழைகள் தங்கள் வாழ்வை வேறு எவரையும் எதிர் பார்க்காது தாங்களே மேம்படுத்திக் கொள்ள  நுண்கடன் என்னும் அரிய முறையைக் கண்டுபிடித்து பலர் வாழ்வை (முக்கியமாகப் பல ஆதரவற்றப் பெண்கள்) ஒளிமயமாக்க உதவி இருக்கிறார்.

இந்த முறையின் வெற்றிக்கு இதன் கடன் விபரங்களை ஆராய்ந்தால் பிரமிப்பு தான் ஏற்படுகிறது. இந்த வங்கியின் கடன் தாரர்களில் 96 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் வாங்கிய கடனைக் கடன் பெற்றோரில் 98 விழுக்காட்டினர் உரிய நேரத்தில் சரியாகத் திருப்பிச் செலுத்திக் கடனை அடைக்கின்றனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்த வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரம் பெருமளவு உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு, ஒரு நாளைக்குத் தங்க வீடில்லாமல் ஒரு வேளை உணவிற்கு மிகுந்த சிரமம் அனுபவிக்கும் ஏழைகளாக இருந்தவர்கள், பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தினமும் மூவேளை உணவு, மழைக்கு ஒழுகாத வீடு, சுகாதாரமான கழிவறை இவை எல்லாவற்றுக்கும் தங்களால் செலவு செய்ய முடிவதுடன் வங்கியில் பெற்ற கடனையும் திரும்ப அடைக்க இயலுகிறது.

இன்னொரு ஆச்சரியம் இந்த வங்கியின் உரிமையாளர்கள் இதன் வாடிக்கையாளர்களே என்பதாகும்.

இப்படிப் பல ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டமைக்காக இவ்வருட அமைதிக்கான நோபல் பரிசு முனைவர் முஹம்மது யூனுஸுக்கும், கிராமீன் வங்கிக்கும் அளிக்கப் படுவதாக நோபல் அறக்கட்டளை தெரிவிக்கிறது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.