இஸ்ரேலின் தொடரும் கபடம்!

Share this:

இஸ்ரேல் தற்காப்பு என்ற போர்வையில் பாலஸ்தீனர்களின் மீது கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது தெரிந்ததே. அது தற்போது கபளீகரம் செய்த பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது. இதன் தற்போதைய நடவடிக்கையாக அது பாலஸ்தீனத்திற்கு நடுவே கட்டிவரும் தடுப்புச் சுவருக்கு அப்பால் இருக்கும் பகுதிகளையும் அபகரித்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த B’Tselem என்ற மனித உரிமைக் கழகம் இஸ்ரேலிய அரசு தனது இராணுவத்தின் உதவியுடன் இந்த அராஜகத்தை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றம் நடக்க அனுமதிப்பது சர்வதேச விதிகளின் படி கடும் கண்டனத்துக்குரிய குற்றமாகும். ஆனாலும் இஸ்ரேல் முன்பு தனது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டது போலவே தற்போதும் தற்காப்புக் காரணங்களைச் சொல்லி இராணுவத்தின் மூலம் ஆக்கிரமித்து வருகிறது.

2004 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேலின் இது போன்ற நடவடிக்கைகளைப் பன்னாட்டு நீதிமன்றம் கண்டித்திருந்தது. அபகரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது உரிமைகளைப் பறிக்கும் இஸ்ரேலிய இராணுவத்திடம் கேள்வி கேட்கும் பாலஸ்தீனர்கள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் கைது செய்யப்படுவதும் மிகச் சாதாரணமாகக் கொல்லப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக B’Tselem மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.

தற்கொலைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை தான் இது என இஸ்ரேலிய அரசு இச்செயலுக்கு அற்பக் காரணம் காட்டியுள்ளது. இஸ்ரேலின் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் புஷ்ஷூம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பிளேய்ரும் கதைகள் சொல்லி வருவது வெறும் ஏட்டளவிலேயே இருக்கும் என்றும் B’Tselem எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

மூலம்: http://news.bbc.co.uk/2/hi/middle_east/7609905.stm

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.