முன்னாள் இராக் அதிபர் சதாமுக்கு தூக்கு தண்டனை!

{mosimage}பக்தாத்: மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தற்போது US ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் இராக்கின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து சதாமின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் குழு தலைவர் திரு கலீல் துலைமி கருத்துத் தெரிவிக்கையில் "கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணை என்ற பெயரில் இராக் பொம்மை அரசாங்கம் நடத்திய நாடகம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவு முதலிலேயே எதிர்பார்க்கப் பட்டது தான். இதில் நீதி கிடைக்காது என்பது தெரியும். இந்த முடிவு US-ல் நடக்க இருக்கும் தேர்தலுக்கு சற்றே முன்பு வெளியாகி உள்ளது முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது" என்று தெரிவித்தார்.

சதாமுக்கும் அவரது அரசில் பங்கு வகித்த மேலும் இரு முக்கியப் பிரமுகர்களுக்கும் துஜைல் நகரில் 1982 ஆம் ஆண்டு 148 ஷியா மக்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மரணதண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிற மூன்று பிரமுகர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இருவர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு வரும் முன்னரே இராக் முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. கலவரம் நிகழும் அபாயம் இருக்கும் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தது. இராக்கின் அனைத்துக் காவலர் மற்றும் இராணுவத்தினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமக்குரிய வாதாடும் உரிமை மறுக்கப்பட்டதாகவும் தமது கோரிக்கைகள் பெருமளவு நிராகரிக்கப்பட்டதாகவும் இந்தத் தீர்ப்பு குறித்து இராக்கிய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் திரு.துலைமி தெரிவித்தார்.

US அதிபர் தேர்தலுக்குச் சற்று காலம் முன்பே சதாம் ஹுசைன் பிடிபட்டு உலகிற்குக் காட்டப்பட்ட நிகழ்வும் இங்கே நினைவுகூரத் தக்கது.

இதை வாசித்தீர்களா? :   ஹதீஸா படுகொலை: அமெரிக்க படையினர் குற்றவாளிகள்