ஜெர்மனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா!

Share this:

ஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும் அதீத பயமும் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களுடன் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத அளவுக்கு இந்த இஸ்லாமோஃபோபியா எல்லையைத் தொட்டு நிற்கிறது.

 

அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனும் பர்தா, நாகரீகம் என்ற பெயரில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அரை-குறை ஆடை அணிந்து வலம் வருபவர்களிடையே மிகுந்த எரிச்சலைத் தோற்றுவித்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் சார்கோஸி, பர்தாவின் மீதான தன் அதீத காழ்ப்புணர்வைக் கொட்டியதும் அதனைத் தொடர்ந்து, இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே மோசமானவர் என பட்டம் வழங்கப்பட்ட பால்தாக்கரே தன் வெறுப்பை உமிழ்ந்ததும் உலகம் கண்டது.

இந்த வரிசையில் வெறுப்பின் உச்சகட்டமாக, ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஒருவர் ஜெர்மனியில் பொது இடத்தில் பலர் முன்னிலையில் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனதை உலுக்கும் கொடூரமான இச்சம்பவம் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல் என்பவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் நீதிபதிகளும் மேலும் பலரும் கூடி இருந்த போது அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தில் தனது மனைவியைக் காக்கப் போராடிய மர்வாவின் கணவரான எல்வி ஒகஸ்-வும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். ஜெர்மனியின் செய்தி ஊடகங்கள் தரும் தகவலின் படி, ஷெர்பினியின் கணவரான ஒகஸ் கொலைகாரனால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதனைத் தடுப்பதற்காக முன் வந்த போலிஸ்காரர் ஒருவரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் வருடத்தில், தான் ஹிஜாப் அணிவதைக் கண்டு தன்னைப் “பெண் தீவிரவாதி” என ஆக்ஸெல் என்பவர் தொடர்ந்து கூறித் தொல்லை கொடுத்து வந்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் ஷெர்பினி. இந்த வழக்கு ஏற்கனவே எகிப்து மற்றும் ஜெர்மனி மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இச்சூழலில் வழக்கின் முடிவு வெளியானது. அதில் ஷெர்பினியை அவமதித்த குற்றத்திற்காக 750 யூரோக்கள் ($1,050) அபராதமாகச் செலுத்தும்படி ஆக்ஸெலுக்கு ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆக்ஸெல், இது தொடர்பாக அபராதம் செலுத்த நீதிமன்றம் வந்தபோது ஆத்திரம் தலைக்கேறி பலர் முன்னிலையில் ஷெர்பினியை குத்திக் கொலை செய்தார்.

தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும் ஷெர்பினியின் உயிரைக் காக்க முடியவில்லை. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்ற உருக்கமான செய்தியும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திலேயே அதுவும் தனது மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

கொலைகாரனான 28 வயதான ஆக்ஸெல், ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்கள் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி கொண்டவராவார் என்று ஜெர்மன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி எகிப்து துவங்கி உலகம் முழுவதும் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக அநியாயமாக ஒரு பெண்ணின் மீது அவதூறு/ பழி சுமத்திய ஒருவரை ஜெர்மனிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அவர் மீது வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு பெண் இவ்வாறு கொலை செய்யப் பட்டிருப்பது மிகவும் அநீதியான செயல் என்று இதனைக் கண்டித்து கண்டனங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

இஸ்லாத்தில் இறைவனின் கட்டளையை ஏற்று ஹிஜாப் அணிந்து பேணுதலான முறையில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காக இப்பெண் படுகொலை செய்யப் பட்டிருப்பதால் இவர் வீரமரணம் அடைந்த வீராங்கனை என்று எகிப்திய மக்கள் அழைக்கின்றனர். அத்துடன் ஜெர்மனியில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா தொடர்பான செயல்களை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் பரவலாக தெரிவித்து வருகின்றனர்.

“கொலைகாரனான ஆக்ஸெல் ஏற்கனவே ஷெர்பினியை அடிக்கடி சீண்டி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார் என்றும் அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக பறித்து அதனைக் கிழிக்க முயற்சிகள் செய்தார் என்றும் ஷெர்பினியின் தங்கையான அதாரிக் அல் ஷெர்பினி எகிப்திய செய்தி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும் ஷெர்பினியின் கணவர் இத்தொல்லைகள் தொடர்பாக ஜெர்மனியின் உள்ளூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

“ஷெர்பினி ஹிஜாப் அணிவதால் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படும் என்றும் இதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்துகள் வரும் என்றும் பல கொலை மிரட்டல்கள் ஏற்கனவே வந்துள்ள போதிலும் அதனை அலட்சியப் படுத்தி தொடர்ந்து அணிந்து வந்தார்” என ஷெர்பினியின் குடும்ப நண்பரும் அலெக்ஸாண்டரியா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியரானருமான ஹிஷாம் அல் அஸ்ஹரி தெரிவித்தார். மேலும் “இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் தன் உயிரை இழக்க நேரிடலாம்!” என்பதை ஷெர்பினி அறிந்து வைத்திருந்தார் என்றார் பேராசிரியர் ஹிஷாம்.

கடந்த 5-7-2009 இல் படுகொலை செய்யப்பட்ட ஷெர்பினி மர்வாவின் ஜனாஸா(உடல்) அவரது சொந்த நாடான எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்பதை பெர்லினில் உள்ள எகிப்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. 35 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் ஹிஜாப் தொடர்பான இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஜெர்மனின் பல மாநிலங்களின் பள்ளிகள் தம் ஆசிரியைகள் ஹிஜாப் அணியத் தடை விதித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் இஸ்லாமோஃபோபியா தலை விரித்தாடுகிறது என்பது மீண்டுமொரு முறை சகோதரி மர்வாவின் வீரமரணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.

தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பெயரில் ஏற்கெனவே உலகம் முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தான் விரும்பும் ஆடையை அணிவதற்குக் கூட முஸ்லிம் பெண்களுக்குச் சுதந்திரமில்லை என்ற ரீதியில் இஸ்லாமோஃபோபியா எனும் நோய் பரவி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தொடர்ந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் விளைந்த இத்தகைய வன்முறை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, உலக முஸ்லிம்கள் உடனடியாக ஒன்றிணைந்து எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

– அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.