அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை

டாக்டர் ஹனீஃப்
டாக்டர் ஹனீஃப்

சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கருதி அவரை விடுதலை செய்ய இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அரசு தலைமை வழக்கறிஞர் டேமியன் பக் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மருத்துவர் ஹனீஃபுக்கு எதிராக அரசு தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுத் திரும்பப் பெறப்படுவதாகக் கூறினார். இவ்வழக்கைக் கையாண்டதில் அரசின் அனைத்துத் துறையினரும் பொறுப்பற்ற நிதானமின்மையை வெளிப்படுத்தினர் என அவர் ஒப்புக் கொண்டார்.


இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளான மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்தினர் மட்டுமல்லாது பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் இச்செய்தி குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரித்தனர்.


கடுமையான சூழலுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோருமா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு அதற்கான சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார். குற்றம் சாட்டுவதும் வழக்குத் தொடுப்பதும் காவல் துறையினரதும் அரசு வழக்கறிஞரதுமான வேலை. இதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு பிரதமர் ஏன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.


விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் ஹனீஃப் காவலில் இருந்து விடுவிக்கப் பட்டாலும் அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கான முறையான அனுமதியை ஆஸ்திரேலியா இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


இது குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு இந்திய அரசு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படும் என இந்திய வெளியுறவு இணை அமைச்சர் E. அஹமது தெரிவித்தார். மருத்துவர் ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் இனியும் அவருக்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் கூடாது என அவர் தெரிவித்தார்.


இதற்கிடையே பல்வேறு மனித உரிமைக்குழுக்களும், மருத்துவர் ஹனீஃபின் வழக்கறிஞர்களும் பொய்யாகப் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டி மருத்துவர் ஹனீஃபை கொடுமைப் படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

இதை வாசித்தீர்களா? :   இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!