மேற்குலகின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அல்ஜஸீரா!

கடந்த 15-11-2006 முதல் தன் ஆங்கில ஒளிபரப்பைத் துவங்கிய அல்ஜஸீரா தொலைக்காட்சி தனது புதியதொரு சேவையான அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனலை, கடந்த ஜனவரி 1ந்தேதி அன்று 12.00 GMT முதல் துவங்கியுள்ளது.

இதன் மூலம் பார்வையாளர்களுக்கு சர்வதேச அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளோடு சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வுகளையும், சமூக, அரசியல், கலாச்சார, அறிவியல், மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய தொகுப்புக்களில் கவனம் செலுத்தும் ஆய்வுகளையும் உள்ளது உள்ளபடி துல்லியமான ஒளிபரப்போடு உயர் தொழில் நுட்பத்தரத்துடன் வழங்கவுள்ளது.

தற்போதைக்கு அரபி மொழியில் துவங்கப்பட்டுள்ள இச்சேனல் மிக விரைவில் ஆங்கிலத்திலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணப்படங்களின் தொகுப்புப் பேழையாக இதன் நிகழ்ச்சிகள் உலகில் வலம் வரும் வகையில் 24 மணி நேர சேவையில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலில் வளைகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ள கலாச்சாரச் சீரழிவுகளை வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமையும் ஆவணப்படங்களை தயாரிக்கும் தொழில்துறையுடன் கைகோர்ப்பதுடன், உலகெங்கிலும் உள்ள திறமையுள்ள படப்பிடிப்பாளர்கள் குழுவைக் கண்டறிந்து அவர்களுக்கான நிதியுதவிக்கான பொறுப்பேற்றுக்கொள்ளவும் அல்ஜஸீரா தயாராகியுள்ளது.

அல்ஜஸீராவின் பொது இயக்குனர் வதாஹ் கன்ஃபர் இது பற்றி பேசுகையில், “புதிய இச்சேனல் ஆதாரங்கள், அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நடக்கும் உண்மைச் சம்பவங்களின் பின்னணிகளை ஆராய்ந்து, மனித உறவுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் இடையே புரிந்துணர்வு கொள்ளும் வகையில் ஒரு பாலம் அமைக்கும்.

மேலும், மேற்கத்திய ஊடகங்கள் உலகிற்குக் கொடுக்க மறந்த அல்லது மறைத்த சம்பவங்களின் பின்னணிகளைத் தோண்டித் துருவி அதனைக் கொடுப்பதே எங்கள் நோக்கம். நிகழ்வுகளின் உண்மை நிலையை நடுநிலையோடு அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் செய்திகளைப் போர் முனையில் இருந்தே உலகத்திற்கு வழங்கியிருந்தததால் அல்ஜஸீராவிற்கு அமெரிக்கா உள்பட உலகெங்கும் மொழிப்பாகுபாடற்ற ரசிகர்கள் அதிகரித்திருந்தனர். ஏற்கெனவே, கட்டுப்பாட்டு அறை(Control Room) என்று பெயரிடப்பட்டு நியூயார்க்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அல்ஜஸீராவின் முதல் டாக்குமெண்டரி திரைப்படமே அமெரிக்க திரைப்பட உலகில் புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. (பார்க்க, பிபிஸி)

இப்படத்தின் சாராம்சம் ஈராக் போரில் அல்ஜஸீரா செய்தியாளர்கள் செய்தி சேகரித்த விதமும் அவர்களுக்கு அமெரிக்க மற்றும் கூட்டுப்படைகளால் ஏற்பட்ட இடையூறுகள் பற்றியதாகும்.

இரண்டாவது முறையாக அல்ஜஸீராவின் செய்தியாளர் தாரிக் அயுப் (பார்க்க, The Hindu) ஈராக் ஆக்ரமிப்பில் அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை நேரடியாக கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்கப்படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆவணப்படமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அமெரிக்க மக்களிடையே அல்ஜஸீராவின் புதிய டாக்குமெண்டரி சானல் பெரும் எதிர்ப்பார்ப்பை தந்திருக்கிறது.

இதை வாசித்தீர்களா? :   ஹஜ்ஜுப் பெருநாள் உரை (2013)

அல்ஜஸீராவின் செய்தித் தொடர்பாளர் ஜிஹாத் பாலட் கூறுகையில், “அல்ஜஸீரா சானல் எப்போதும் அமெரிக்கர்களுக்கு எதிரான செய்திகளைக் கொடுக்கிறது, ஒஸாமா பின் லேடனின் தூதுவனாக செயல்படுகிறது என்று புஷ் தலைமையினால் சுமத்தப்பட்ட அபாண்டமான பழியினால் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டிருந்த தவறான கண்ணோட்டத்தை இப்புதிய சேவை முற்றிலுமாக மாற்றி அமைக்கும்” என்றார்.

முன்பு ஈராக் செய்திகளின் உண்மை நிலையை உள்ளபடியே வழங்கியதால் இங்கிலாந்து அரசின் துணையுடன் அல்ஜஸீராவின் அனைத்து அலுவலகங்கள் மீதும், கத்தரில் இருக்கும் அதன் தலைமையகம் மீதும் ஒரே நேரத்தில் குண்டு போட்டு அழிக்க, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இங்கிலாந்து பிரதமர் டோனிபிளெயருடன் இணைந்து  திட்டமிட்டிருந்தார்(பார்க்க, Mirror)

இச்செய்தி வெளியே கசிந்து உலகின் முன் தலைகுனிவு ஏற்பட்ட வேளையில், அதிபர் புஷும் இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேயரும் இணைந்து அல்ஜஸீராவின் மீது குண்டு வீசி தகர்க்க திட்டமிட்ட ரகசியம் வெளியே கசிய காரணமாக இருந்த, இங்கிலாந்து கேபினட் அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் கியோகின் மற்றும் லெயோவின் மீது அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக இங்கிலாந்து அரசாங்கம் குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்தது. மட்டுமல்ல தொடர்ந்து இது சம்பந்தமான தகவல்களை வெளியிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அச்செய்தியை தொடர்ந்து வெளியிட முடியாமல் செய்து விட்டனர். இவ்வாறு தெளிவாகவே அல்ஜஸீரா செய்தி நிறுவனத்தை அழிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வரும் அமெரிக்க ஆளும் தலைமைக்கு, அல்ஜஸீராவின் இப்புதிய டாக்குமெண்டரி சேனலுக்கு அமெரிக்க மக்களிடையே பரவி வரும் ஆதரவும் ஆரவாரங்களும் வயிற்றை கலக்கும் என்பதில் வியப்பில்லை.

அல்ஜஸீராவின் இச்சேவைக்கான விக்கிபீடியா சுட்டி

அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனலைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் பெற்றுக்கொள்ள இயலும்.

Hotbird at 13.0E

Freq:12111MHZ, Pol: vertical

SR:27500, FEC:3/4

 

Nilesat at 7.0W

Freq:12284MHZ, Pol: vertical

SR:27500, FEC:3/4

 

Arabsat at 26.0E

Freq:10971MHZ, Pol: Horizontal

SR:27500, FEC:3/4

முதலில் அரபி மொழியில் மட்டுமே ஆரம்பித்த அல்ஜஸீரா செய்திச் சேவை தற்போது ஆங்கிலத்திலும் காலடி எடுத்து வைத்து உலக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் சூழலில் வரும் காலங்களில் உலகின் மற்ற மொழிகளிலும் அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனல் கால்பதித்து வெற்றி பெறும் என்பதை நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.

ஆக்கம்: அபூ ஸாலிஹா