முதலில் வந்தவர்கள் …!

Share this:

மீனவர்களும் முசுலீம்களும்தான் முதலில் வந்தார்கள்”

சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும் பகுதி இளைஞர்களையும் முஸ்லீம் அமைப்பினரையும் மக்கள் நன்றியோடு பார்க்கிறார்கள்.

வீட்டில் குடிக்க வைத்திருந்த தண்ணீர் கேன்களை கட்டி அதன் மூலம் தன் குழந்தைகளைக் காப்பாற்றிய இளைஞனைத் தன் தெய்வம் என்று போற்றுகிறார் ஒரு தாய். ”மீனவர்கள் தான் சார் எங்கள காப்பாத்துனாங்க”, ஜாபர்கான்பேட்டை கூலிதொழிலாளிகள் முதல் ராம் நகர் ஐ.டி ஊழியர்கள் வரை இதைக் கூறுகிறார்கள்.

அடுத்தபடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருபவர்களைப் பற்றி மக்கள் நன்றியோடு கூறினார்கள். அதிலும் குறிப்பாக, இஸ்லாமியர்களின் பங்கு குறித்து சிலாகித்துப் பேசுகிறார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் செட்டித்தோட்டம் பகுதி இளைஞர் ஒருவர் நம்மிடம், “மக்கள் எல்லாரும் உதவி பண்றாங்க. மத்தவங்ககூட தண்ணி கொஞ்சம் வடிய ஆரம்பிச்ச பின்னாடிதான் நிவாரணம் கொண்டு வந்தாங்க. ஆனா இவ்ளோ தண்ணியிருந்தப்ப முஸ்லீம் ஆளுங்கதான் மரப்பலகையில மிதவை செஞ்சு சாப்பாடு கொண்டாந்தாங்க.” என்று கூறினார். நாம் சென்று வந்த பல பகுதிகளிலும் நிவாரணப் பணியில் ஈடுபவர்களில் பரவலாக முஸ்லீம் மக்களைப் பார்க்க முடிந்தது.

முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்பதில் ஆரம்பித்து மணம், குணம், உணவு வரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்தி தவறானது என்பதை ஓரளவிற்கேனும் ‘இந்துக்கள்’ உணர்வார்கள் என்பது உறுதி. ஆர்.எஸ்.எஸ் அவாள் கூட்டம் கரண்டைக் காலில் தண்ணீர்கூட நனையாமல் நாரதகானசபாவில் வெங்காயம் வெட்டி தயிர்சாதம் போட்ட சேவையெல்லாம், முசுலீம் இளைஞர்கள் செய்திருக்கும் அளப்பரிய பணியின் கால் தூசுக்குக்கூட பெறாது என்பதும் நிச்சயம்.  உடன் சென்றதாக இருக்கட்டும், குப்பைகளை அகற்றுவதாக இருக்கட்டும், நிவாரணப் பொருட்களை உடன் திரட்டி விநியோகித்தாக இருக்கட்டும் அனைத்தும் திட்டமிட்ட முறையில் உரிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது.

பாரிமுனையின் கறிக்கடை சங்கத்தினர் தினமும் 2000 பேருக்கு கோழிக்கறி பிரியாணியே போட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவையெல்லாம் இந்துமதவெறியர் போல மிகுந்த விளம்பர நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. பலருக்கும் தெரியாது. முசுலீம்கள் என்றால் தனித்திருப்பார்கள்; ஒட்டமாட்டார்கள் என்ற பொய்ப்பிரச்சாரமும் இங்கே தகர்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கு சைதாப்பேட்டையை ஒட்டியுள்ள செட்டித்தோட்டம் பகுதி அடையாறு ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது.  நகரத்தில் கூலிவேலை செய்யும் மக்களின் குடிசைகள் மற்றும் சிறுவீடுகளுக்குச் சற்றுத் தொலைவில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும் இருக்கின்றன. இருவர்க்கத்தினரையும் புரட்டிப் போட்டிருக்கிறது வெள்ளம்.

தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே குப்பத்து இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் அபயக்குரல் எழுப்புவோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்,  அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.  “அவர்கள் நிறையவே உதவி செய்தார்கள்”என்று குடிசைப் பகுதி இளைஞர்களை ஆங்கிலத்தில் வாழ்த்துகிறார்கள். இருப்பினும் இந்த வெள்ளம் தங்களையும் கையேந்த வைத்துவிட்டதாக பொருமவும் செய்கிறார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள், கார்கள், நுகர்வுப் பொருட்கள் அடங்கிய உலகமயமாக்கத்தை ஆதரித்தவர்கள் இன்று ஏரிகள் ஆக்கிரமிப்பையும், ரியல் எஸ்டெட் வீடுகளையும், மியாட் மருத்துவமனையின் படுகொலையையும் கண்டித்து பேசுகிறார்கள். எட்டிப்பார்க்காத அரசு குறித்தும் அவர்களுக்கு விமரிசனமிருக்கிறது. ஒரு சிலரோ பகுதி வாழ் மக்களை அணிதிரட்டி நிவாரணப்பணிகளையும் கூட செய்கிறார்கள். அடுக்கு மாடிகளில் தனித்திருந்து வாழப்பழகியவர்கள் இன்று கூட்டாக வாழவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள், கொஞ்சமேனும்.

நன்றி : வினவு

            முகநூல் பக்கம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.