தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்!

Share this:

மிழர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த, இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  வாழ்க்கை வரலாறு தொடர்புடைய, கடந்த 1977 ஆம் வருடம் வெளியான, தி மெசேஜ் (The Message) எனும் ஆங்கிலத் திரைப்படம்  தற்போது தமிழில் வெளியாகியிருக்கிறது.

Star Communications நிறுவனரும், தயாரிப்பாளருமான காயல்பட்டினத்தை சேர்ந்த K.M. முஹம்மது தம்பி அவர்களின் முயற்சியில் மொழி பெயர்ப்பாளர் திரு. ராஜேஷ் மற்றும் மவ்லவி காஞ்சி அப்துர் ரவூப் பாக்கவி அவர்களின் மொழி நேர்த்தியுடன் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

இத் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது. தனித் திரையிடல் மூலமோ DVD வாங்கியோ பார்க்கலாம்.

இதற்கான DVD வெளியீட்டு விழா, சென்னை Four Frames Preview தியேட்டரில் நடந்தது. விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, முகம்மது தம்பி, எல்.கே.எஸ். இம்தியாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ஜனநாதன், பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கவிஞர் அப்துல் ரகுமான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 தகவல்: அபூ ஸாலிஹா

 


த மெசேஜ்: த ஹிந்து விமர்சனம்:

இன்றைய உலகம் இஸ்லாத்துக்கும் அமெரிக்காவின் தலைமையிலான மற்ற நாடுகளுக்கும் இடையே எல்லாத் தங்களிலும் வெளிப்படையான மோதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்த முரண்பாட்டின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமும் பிற மார்க்கங்களும் ஒத்திசைந்து வாழவே முடியாது என்ற அளவுக்கு வலுவான கருத்து உருவாக்கப் பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தனிநபர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட தி மேசஜ் என்ற ஆங்கிலத் திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய நிலைமைக்கு அக்காட் தள்ளப்பட்டார். எல்லா சிரமங்களையும் மீறி எடுக்கப்பட்ட இந்தப் படம் தன் நோக்கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்துள்ளது என்பதை அதனுடைய ஆங்கில மூலமும் அதன் தமிழாக்கமும் தெளிவாக உணர்த்துகின்றன.

ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முகமது தம்பி இப்படத்தைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.

“இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலை இப்படம் மக்களிடம் எடுத்துச் செல்லும். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதில்லை. ஆகவே தனிநபர்களின் பார்வைக்காக வெளியிட்டு வருகிறோம். தனியார் தொலைக்காட்சிகள் மூலம் மக்களை அடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறோம்,” என்றார் அவர்.

ஆங்கில வசனங்களின் உச்சரிப்பை தமிழில் அப்படியே கொண்டு வருவது சாதாரண காரியம் இல்லையென்றாலும், இப்படத்தில் பெரிய உறுத்தல் ஏதும் இல்லை. இயல்பாகவே கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவது போல் உள்ளது.

{veoh}v7029015heJ7KGAQ{/veoh}

இஸ்லாத்தைத் தழுவுமாறு அறிவுறுத்தி பைசாந்திய சக்கரவர்த்தி, பாரசீக நாட்டுப் பேரரசர், அலெக்சாண்டிரியாவின் அரசர் ஆகியோருக்கு முகமது நபியின் தூதுவர்கள் செய்தி கொண்டு செல்வதோடு படம் தொடங்குகிறது.

பாலைவன சுடுமணலில் கிளம்பும் கானல் நீரில் இருந்து வெளிப்படும் புரவிகளின் வேகமும், துளியும் அச்சமின்றி வேற்று நாட்டு அரண்மனையில் புகுந்து பேரரசர்களை இஸ்லாத்துக்கு அழைக்கும் தூதுவர்களின் மனநிலையும், இஸ்லாம் என்ற மார்க்கம் அதைத் பின்பற்றுபவர்களுக்கு எத்தகைய வலிமையை அளிக்கிறது என்பதைச் சட்டென அறிவித்துவிடுகின்றன.

அப்படியே இஸ்லாத்தின் தொடக்கக் காலத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட கடவுளர்களை வழிபடும் செல்வச் செழிப்பில் திளைத்திருக்கும் மாபெரும் வணிக நகரம் மெக்கா நம் கண் முன்னே விரிகிறது. காபாக்களிலோ மனிதர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் தெய்வங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விருந்தினர்களை உபசரிப்பதற்குப் பேர்போன மெக்காவில் மதுவுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவில்லை. ஆனால் ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் இவையெல்லாம் எட்டாக்கனிகள். அவர்களைக் கரையேற்ற வருகிறார் நபிகள் நாயகம்.

கருப்பரான பிலால் கதாபாத்திரம், உலகெங்கும் ஒடுக்கப்பட்டு, சொல்லாணாக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கருப்பின மக்களின் பிரதிநிதியாக எழுந்து நிற்கிறார். கொதிக்கும் மணலில் கைகால்கள் கட்டப்பட்டு, சாட்டையடிபடும் பிலாலுக்கும், சாணிப்பாலும் சவுக்கடியும் பட்ட கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மசூதியில் மக்களைத் தொழுவதற்கு அழைக்கும் முதல் வாங்கு ஓதுபவராக பிலால் நியமிக்கப்படுகிறார். மெக்காவில் புகுந்து, யுத்தமின்றி அந்நகரைக் கைப்பற்றியதும் கபாவின் உச்சியில் ஏறி பிலால் செய்யும் முழக்கம் இஸ்லாத்தின் வெற்றி முழக்கம்.

இப்படி எத்தனையோ காட்சிகள் நபிகள் நாயகத்தின் போதனையும் அதன் விளைவுகளையும் எடுத்துக் காட்டினாலும், அபிசினியாவில் அகதிகளாய்த் தஞ்சம் புகுந்த முதல் இஸ்லாமியர்களைக் காத்த கருப்பினக் கிறித்தவ மன்னனின் பாத்திரம் நெஞ்சு நிறைய புகுந்துகொள்கிறது.

ஒரு கோட்டைத் தரையில் கிழித்துவிட்டு, “இசுலாத்துக்கும் கிறித்தவத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதைவிடப் பெரியதல்ல” என்கிறான்.

பின்னர் இஸ்லாமியர்களை மெக்காவுக்கு அழைத்துச் சென்று தண்டிக்க நினைக்கும் அமரை நோக்கி, “மலையாகத் தங்கத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் இவர்களை ஒப்படைக்க மாட்டேன்,” என்கிறான். அதற்கு முன்னதாக மன்னனுக்கும் இசுலாத்தைத் தழுவியவர்களுக்கும் நடக்கும் வாதம் இரு மதங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் பெரிதல்லவே என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆனால் இன்று அந்த இரு மதங்களை வழி நடத்துபவர்களும் மன்னன் கிழித்த கோட்டை விரிவாக்கிப் பெரும் நெடுஞ்சாலையாக மாற்றிவிட்டனர். சாதாரண கருத்துப் பரிமாற்றத்துக்குக்கூட இடமில்லாத அளவுக்கு அரசியல் அதில் புகுந்துவிட்டது.

இஸ்லாம் சமாதானத்தை மட்டுமே விரும்பும் மார்க்கம். திணிக்கப்பட்டால் தவிர யாரிடம் யுத்தம் செய்ய நபிகள் அனுமதித்ததில்லை. பெண்களையும், குழந்தைகளும் கொல்ல அனுமதித்ததில்லை. மரங்களை வெட்டுவதற்கு என்றுமே எதிர்ப்புத் தெரிவித்தார். வயல்களில் வேலை செய்பவர்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது. இக்கருத்துகள் படம் முழுக்க அழுத்திச் சொல்லப்பட்டி ருக்கின்றன.

நபிகள், அவருடைய மனைவிமார்கள், அவரது மருமகனான அலி முதலான்வர்களின் உருவமோ, உரையாடலோ படத்தில் இல்லை. நபிகளுடன் மற்றவர்கள் உரையாடும் பல காட்சிகள் இருந்தாலும், அவர் பேசுவது போல் எந்தக் காட்சியும் இல்லை. ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அவர் எதிரில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு எழுகிறது.

பல நேரங்களில் உணர்ச்சிகரமான வசனங்கள் பேசப்பட்டபோது, அரங்கத்தின் அல்லாஹ் அக்பர் என்ற முழுக்கம் எழுந்தது. மார்க்கத்தைத் தெளிவாக்கும் அதே நேரத்தில், இஸ்லாமியர்களுக்குத் தங்கள் மதத்தின் மேல் மீண்டும் ஒரு தீவிரப் பிடிப்பை இப்படம் உருவாக்கும்.

ப. கோலப்பன் (த ஹிந்து விமர்சனம்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.