தென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே!!

{mosimage}தென்காசி…….!

 

ஹிட்லரின் பார்ப்பனீய வடிவம் RSS-ன் அசிங்க முகத்தை அம்பலப்படுத்தியச் சமீபத்திய உதாரணம்! அப்பாவி மக்களின் உதிரத்தின் மீது மனுவின் அசிங்க ஆட்சியை அமர்த்தத் துடிக்கும் சங்பரிவாரக் கூட்டத்தின் பார்ப்பனீயத் தந்திரங்களுக்கு ஆப்பு வைத்த மாநகரம்!

இரு வீட்டு மதில் பிரச்சனையைக் கூட மதப்பிரச்சனையாக உருமாற்றி ஆதாயம் தேட முயலும் RSS சங்பரிவாரக் கூட்டம், தென்காசியைச் சேர்ந்த இரு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையிலான நிலப்பிரச்சனையைக் கையில் எடுத்து, அதனை மதப்பிரச்சனையாக உருமாற்றி வடக்கில் குடிக்கும் இரத்தத்தை, மோடி வழியில் தெற்கிலும் அறுவடை செய்ய முயன்ற வேளையில் அதிசயமாகத் திராவிடத் தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் காவல்துறை அதனைத் தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான RSS-ன் வெறியினையும் கோரமுகத்தினையும் அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டில் எங்கு ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் காவல்துறை முதல் தகவல் அறிக்கை தரும் முன்னரே முந்திக் கொண்டு, “இஸ்லாமிய பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் வெறிச்செயல்” எனத் தலையங்கத்தில் வெறியூட்டி சாதாரண மக்களிலிருந்து உளவுத்துறையின் விசாரணை வரை அனைத்து இடங்களிலும் சம்பவத்திற்குக் காரணம் இஸ்லாமியர்கள் தான் என்றச் சிந்தனையை ஊட்டி விசாரணைகளைத் திசை திருப்பும் இந்திய ஊடக நடுநிலை(?)த்தன்மையினைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, சங்பரிவார RSS கூட்டம் சாதித்து வந்த அக்கிரமங்களுக்கு முதன் முதலாகத் தமிழ்நாடு முத்திரை இட ஆரம்பித்துள்ளது என இந்த நல்ல முகூர்த்தத்தில் நம்புவோமாக.

{mosimage}கடந்தச் சில மாதங்களாகத் தென்காசியைப் பதற்றத்தின் முனையிலேயே வைத்திருந்த சங்பரிவாரக் கூட்டம் திட்டமிட்டு தாங்களாகவே RSS தென்காசி அலுவலகத்தின் மீது குண்டு வீசியது. செய்தி பத்திரிக்கைகளுக்கு வரும் முன்னரே தமிழ்நாடு RSS தலைவர் ஆர்.வி.எஸ். மாரிமுத்துவின் கண்டன அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியானது.

சம்பவத்தைச் செய்த நபர் யார் என்பதைக் காவல்துறைக்கும் மக்களுக்கும் அவரே தெரிவிக்கவும் செய்தார். அவருடைய கண்டன அறிக்கையின் முக்கிய பாகங்கள்:

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. …இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை RSS. இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம்.”

{mosimage}சாதாரணமாக ஒரு குண்டுவெடிப்பு நிகழும் பொழுது புலனாய்வுக் குழுவை விஞ்சிய விதத்தில் சம்பவ இடத்தையே நேரில் கண்டிராத இவர்கள் கொடுக்கும் அறிக்கைகளே பின்னர் பத்திரிக்கைகளில் “பாகிஸ்தான் ISI களாகவும் லஷ்கரே தொய்பா முதல் அல்காயிதா வரை” இஸ்லாமியச் சாயம் பூசப்பட்டு அச்சேற்றப்படுவது வழக்கம்.

இதை வாசித்தீர்களா? :   மாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்!

மக்களிடையே இஸ்லாத்தின் மீதான வெறுப்புச் சாயத்தை இம்முறையிலேயே ஊற்றி வளர்த்து அந்த வெறுப்பின் மீது ஏறி அமர்ந்துச் சவாரி செய்து வந்த RSS-ன் தந்திரம் தமிழகத்தில் முதன் முதலாக திவாலாகியுள்ளது.

தாங்களாகவே திட்டமிட்டுத் தங்களின் அலுவலகம் மீது குண்டு வீசிவிட்டு சம்பவ இடத்தில் குண்டு வீச்சு சப்தம் ஓயும் முன்பே “இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறிச்செயல்” என ஓலமிட்ட தமிழ்நாடு RSS தலைவரின் ஈன முகத்தை எதனால் அடிக்கலாம் என்பதைச் சம்பந்தப்பட்ட இந்து சமூக மக்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

இவர்களின் இத்தகைய கீழ்தரமான நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல, ஆங்கிலேயன் இந்நாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்தக் காலகட்டத்திலேயே ஆரம்பித்து விட்டதை நாடு அறியும்.

இந்நாட்டின் விடுதலை விடிவெள்ளி மகாத்மா காந்தியைக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு கொலை செய்தவன் தனது கையில் “இஸ்மாயில்” என முஸ்லிம் பெயரைப் பச்சைக் குத்தி வைத்திருந்ததிலிருந்து, நாக்பூர் அலுவலக RSS அலுவலகத்தில் தாங்களாகவே குண்டு வீசி விட்டு அப்பாவி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு அவர்களைக் காவல்துறை கறுப்பு ஆடுகளின் துணையுடன் போலி என்கவுண்டர் செய்து கொன்றது வரை பல உதாரணங்கள் பதியப் பட்டிருக்கின்றன.

{mosimage}இவர்களின் ஈனச் செயலுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பது 2002 குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் புகைவண்டியில் இராம பக்தர்களாக வந்தத் தங்களின் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் ஒரேயடியாகத் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை முஸ்லிம்களின் செயலாகத் திருப்பி 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட வெறிச்செயலாகும்.

மாலேகான் மசூதி மீது வெள்ளிக் கிழமை மதியம் தொழுகை வேளையில் குண்டு வீசியவன் ஒட்டுத் தாடியுடன் இருந்ததும் பின்னர் நாந்தெட் எனுமிடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் ஒரு பஜ்ரங்தள் தலைவனின் தொழிற்சாலையில் ஒட்டு தாடிகள் கண்டெடுக்கப்பட்ட விவரமும் ஊடகங்களால் உரத்துப் பேசப்படாத உண்மைகளாகும்.

இவ்வாறு நாட்டில் திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாகச் செயல்களைச் செய்து வரும் RSS, அவ்வழியிலேயே தங்களது மிக நீண்ட நாளையக் குறிகோளான தமிழகத்தையும் சமீபகாலங்களில் குறிவைக்க ஆரம்பித்துள்ளதையே தென்காசி சம்பவங்களும் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நிகழ்ந்த உடனேயே தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் தென்காசி RSS அலுவலகம் மீதான வெடிகுண்டு தாக்குதலுக்கு சிபிசிஐடி விசாரணை தேவை என கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்ட வேளையிலேயே RSS அலுவலகம் மீது குண்டு வீசியவர்கள் RSS அமைப்பினர் தான் என்றத் தகவலைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதே போன்று கவனிக்கப்பட வேண்டிய மற்றுமோர் அம்சம் என்னவெனில், இது போன்று சங்பரிவார அமைப்புகளுக்கு ஏதாவது நெருக்கடியான நிலைமைகள் வரும் பொழுது ஊடகங்களில் வேறொரு ‘பரபரப்பு’ச் செய்தியை உலவ விட்டு முந்தையத் தங்களுக்கு நெருக்கடியான சூழலை மக்கள் மனதிலிருந்து அகற்றுவது RSS. வழக்கமாகக் கடைப்பிடிக்கும் தந்திரமாகும்.

இதை வாசித்தீர்களா? :   பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்! அதிர வைக்கும் அலர்ட் ரிப்போர்ட்

“தென்காசி குண்டு வெடிப்பில் RSS அமைப்பினர்தான் ஈடுபட்டுள்ளனர்” என்றத் தகவல் வெளியான உடனேயே ஊடகங்களில் “அத்வானி உயிருக்கு ஆபத்து – யாத்திரை ரத்து” என்பது போன்றச் செய்திகளைத் தற்பொழுது உலவவிட்டுள்ளனர்.

இந்தப் ‘பரபரப்பு’ச் செய்தியின் பின்னணியில் மறைந்திருக்கும் தந்திரங்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒரு பக்கம் தங்கள் இயக்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை மக்கள் மனதில் பதிய விடாமல் திசை திருப்பும் தந்திரம்.

“அத்வானியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்” என தீர்க்கமான தகவல் கிடைக்கும் உளவுதுறைக்கு அவன் யார் என்ற தகவல் கிடைக்காததன் அர்த்தம் என்ன? அவர்களைக் காவல்துறையால் உடனடியாகச் செயல்பட்டுக் கைது செய்ய முடியாததன் இரகசியம் என்ன?

பாராளுமன்றம் தாக்குதலுக்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னர் அத்வானி, “பாராளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட இருக்கிறது” என முன்கூட்டியே அறிவித்ததையும் இத்துடன் இணைத்துப் பார்த்தால் பதில் பளிச்சென விளங்கும்.

எனவே “கள்வன் வேறெங்கும் இல்லை” என்பதை மக்கள் தென்காசி, நாக்பூர், மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலிருந்து மிக நன்றாகவே உணர்ந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதையத் தென்காசி சம்பவத்தை “அத்வானி உயிருக்கு ஆபத்து” செய்தியுடன் கரைந்துப் போக விட்டு விடாமல் இச்சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்துச் செயல்பட்டவர்கள் யார்? யார்?, இதற்கான திட்டங்கள் எங்கே தீட்டப்பட்டன?, யார் தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது?, குண்டுகள் எங்கிருந்துப் பெறப்பட்டன? என விசாரணையை அவ்வழியிலேயே துரிதப்படுத்தி உண்மையான பயங்கரவாதிகளான RSS கூட்டத்தைத் தமிழகக் காவல்துறையும் நடுநிலை ஊடகங்களும் மொத்தமாகத் தோலுரிக்க வேண்டும்.

சம்பவத்திற்குக் காரணமானவர்கள்தான் கிடைத்தாகி விட்டதே?, அதற்கும் நமக்கும்தான் தொடர்பில்லை என்றாகி விட்டதே? என விஷயத்தை இத்தோடு மறந்து விட்டு வேறு விஷயங்களின்பால் முஸ்லிம்களும் கவனத்தைச் சிதற விட்டுவிடக்கூடாது.

முறையான விசாரணைகள் நடத்தப்படும் பொழுது நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இருக்கும் “பயிற்றுவிக்கப்பட்டப் பயங்கரவாதிகள்” யார்? என்ற உண்மை வெளிவரும்.

இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரித்து வெளிக்கொணர வேண்டியக் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. தற்போதைய தென்காசி வெடிகுண்டுச் சதி என்பதைத் தமிழக RSS தலைவர் திரு. மாரிமுத்து அவர்கள் கூறியதைப் போன்று தமிழக அரசுக்கு RSS பயங்கரவாதிகள் விடுத்த எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு துரிதமாகச் செயலாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

இல்லையேல் தமிழகமும் ஒரு குஜராத்தாக மாறும் நாள் வெகு தொலைவில் இருக்காது!

எது எப்படி இருந்தாலும் சங்பரிவாரத்தினர் மோடி வழியை நடப்பாக்கத் தமிழகத்தைத் தற்பொழுது குறிவைத்துள்ளனர் என்பது மட்டும் உறுதி. அவ்வுறுதி நடைமுறைக்கு வருவதும் முளையிலேயே முறியடிக்கப் படுவதும் தமிழக அரசு, காவல்துறை, நடுநிலை ஊடகங்கள், மதச்சார்பற்ற அமைப்புகள் மற்றும் தென்காசிப் பொதுமக்கள் ஆகியோரின் தலையில் சுமத்தப் பட்டுள்ள கடமைப் பொறுப்புகள் செயல்வடிவம் பெறும்போது தெரிய வரும்.