பொறுப்பை உணர்வோம்!

கோவை சாய்பாபா காலணியைச் சேர்ந்த ஹைதர் ஷரீஃப் என்பவரின் மகள் ருக்சானா(21) BSc பட்டதாரி, கடந்த 16.10.2017 அன்று காலை 11 மணியளவில் தனது தோழியிடம் புத்தகம் வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்றவர், காணாமல் போனார்.

இவரைப் பல இடங்களில் தேடிய பெற்றோர், 18.10.2017 அன்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதற்கிடையே பவானி கல்லாறு அணை அருகே பாறைப் பொதும்பில் நிர்வாண நிலையில் பிணமாக ருக்சானா கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில் ருக்சானாவின் காதலன் பிரசாந்த் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை 22.10.2017 அன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

oOo

மேற்காணும் செய்தி, அண்மையில் முகநூலின் விவாதப் பொருளாக, எல்லோராலும் பேசப்படுகின்ற தலைப்புச் செய்தியாகிவிட்டது.

உண்மையான முழு விவரம் தெரியுமுன்னே சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது.

உயிரற்றுப் போன அந்தப் பெண்ணை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டு, மீண்டும் மீண்டும் சாகடிக்கின்றனர்.

எப்போதும் போல எல்லா விஷயங்களைப் போலவும் இந்த விஷயமும் புகைப்படங்களுடன் “Hi Friends ” என்னும் ஆடியோவுடன் பலருடைய கைப்பேசிகளில் பறந்து வருகிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்கள் இருவரும் எப்படி காதல் வயப்பட்டார்கள், எந்தப் பிரச்சனையால் அவள் கொல்லப்பட்டாள் என்பது அல்ல.

ஏனெனில், அது முடிந்து போன ஒன்று.

அதைப்பற்றிப் பேசி பேசி அந்த பெண்ணைக் குறை கூறுவதால் அவள் திரும்பி வரப் போவதும் இல்லை, நடந்த கொலையும் இல்லை என ஆகப்போவதும் இல்லை.

நாம் வாழும் கால கட்டத்தில் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து படிப்பினை பெற்று, அந்தப் படிப்பினையில் இருந்து நம்மை நாம் மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ருக்சானாவுக்கு நிகழ்ந்தது போன்ற செய்தி, முன்னர் எப்போதாவது நாளிதழ்களில் வெளிவரும். அந்த நிலை மாறிப் போய் அண்மைக் காலமாக காதல் கொலைகள் அடிக்கடி நடைபெற்று, அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

எனவே, இதைப் பற்றி வெறுமனே பேசி/எழுதிவிட்டுக் கடந்து சென்றுவிடாமல் நாளை நம் வீட்டிலோ நம்மைச் சுற்றி உள்ளவர்கள் வீட்டிலோ இது போன்ற நிகழ்வு அரங்கேறி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் நாம் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்.

தற்காலத்தில் பெண் /ஆண் பிள்ளைகள் பதின்ம வயதில் பருவ நிலையை அடைந்ததும் உண்டாகும் உடல் நிலை மாற்றங்களால் ‘எதிர் பாலின ஈர்ப்பு’ எனும் மனநிலை மாற்றமும் உண்டாகின்றது.

இக்கால கட்டத்தில் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அதிகமான அரவணைப்பும் கண்காணிப்பும் அவர்களுக்குக் கட்டாயம் தேவைப்படும். அவர்களுக்கான அரவணைப்பு, குடும்பத்தாரிடமிருந்து கிடைக்காவிட்டால் அல்லது குறைவாயிருந்தால் அவர்கள் வீட்டில் உள்ள உறவுகளை விடுத்து வேறோர் உறவைத் தேட ஆரம்பிப்பார்கள்.

இதை வாசித்தீர்களா? :   சிதம்பரத்தில் பா.ஜ.க பொதுச்செயலாளர் கொலை! மூன்று இந்துக்கள் கைது!

உடன் படிப்பவர்களிலோ, அண்டை வீட்டிலோ எதிர் பாலினர் ஒருவர் தமக்கு ஆறுதலாக அமைந்துவிட்டால் அவருடன் உறவை அதிகப்படுத்தத் தோன்றும்; அயல் உறவுப் பழக்கம் முற்றினால் வீட்டில் உள்ள உறவுகளை வெறுக்கத் தோன்றும்.

உரிய காலத்தில் கண்காணித்து, அரவணைத்து ஆற்றுப் படுத்தாமல் விட்டுவிட்டால் அயல் உறவுகளில் மூழ்கி, தன்னையே மறந்துவிடுவார்கள். உறவு முற்றிவிட்டால் தன்னையே இழந்துவிடுவார்கள்.

இவ்வாறே காலம் செல்லச் செல்ல தனக்கு உண்மையான “Maturity” என்னும் பருவ நிறைவை அடையும் போதுதான் , தான் செய்தது தவறு என்பதை உணர்வார்கள். அப்படி உணரும்போது எல்லாம் முடிந்திருக்கும்.

இதற்குத் தீர்வாக நாம் முதலில் செல்ல வேண்டியது பெற்றோர்களிடம் தான்.
பெற்றோர்கள் தங்களுக்கிடையில் போட்டுக் கொள்ளும் சண்டைகள் பிள்ளைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிள்ளைகள் மேல் பெற்றோரைவிட அதிகப் பாசமுடையவர் , அக்கறையுடையவர் யாரும் இல்லை என அவர்களுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிய வைக்க வேண்டும்.

பதின்ம வயதை எட்டும் பிள்ளைகளோடு உற்ற நண்பர்களைப்போல் பெற்றோர்கள் பழக வேண்டும். மனம்விட்டுப் பேசுதல் மட்டுமே சிக்கல்களுக்கான தீர்வு என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

அடுத்தது, மார்க்க ரீதியான தீர்வை எடுத்துக் கொண்டால் சிறு வயதிலிருந்தே மார்க்க விஷயங்கள் தெரிந்த பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்.

யார், யார் எப்படியான உறவு ? மஹ்ரமானவர்கள் , மஹ்ரமற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் ? என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். ஹிஜாபுடைய முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களைச் சுற்றி இசுலாமிய சூழலை வகுத்துக் கொடுக்க வேண்டும்.

சில சமயம் இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான நிலையில் வளர்க்கப்பட்டவர்கள்கூட தவறான பாதையில் சென்றால் அப்போது அவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்., பிள்ளைகளுக்கு, தேவைப்படும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கும் அதேவேளை, எல்லை மீறும்போது கட்டுப்படுத்தவும் தவறக் கூடாது.

ஆறு மாதங்களுக்கு முன்னர், தங்கள் வீட்டுக்கே ஒருவன் வந்து தகராறு செய்கின்றான். அதன் பின்னரும் அவனோடு தங்கள் மகள் பழக்கம் வைத்துக்கொள்வதைக் கண்டித்து, சீர்திருத்தத் தவறிவிட்டு, மகளின் மரணத்துக்கு சிபிஐ விசாரணை கேட்கும் பெற்றோரின் நிலையை என்னென்பது?

பெற்றோர் தம் பொறுப்புகளை உணர்ந்து நடக்க வேண்டும். பொதுவெளியில் பிறரைப் பற்றி விவாதிப்போரும் உண்மை நிலையை முதலில் அறிந்து கொண்டு, பொறுப்புடன் செயல்பட முயலவேண்டும். சரியான புரிதல் இல்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்று புகைப்படங்களைப் பரப்பி, அவர்களைத் திட்டி பாதிக்கப்பட்டோரின் மனப்புண்ணில் எண்ணெயை ஊற்றாமல் இருப்போம்..

சிந்திப்போம்!

oOo

{youtube}Q54RHM5JuiI{/youtube}

ரிஃபானா காதர்