ராமதாஸுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்!

Share this:

முஸ்லிம்கள் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலர் காயல் மகபூப் விடுத்துள்ள அறிக்கை:

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தபோது, “இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும், அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழக முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லிம் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கியுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்கத் தயாராக இல்லை.

இவர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு, ராமதாசைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி பள்ளி வாசலில் இரவு தொழுகை நடந்திக்கொண்டிருந்த நிராயுதபாணியான முஸ்லிம்கள் நூற்றுக்கணக் கானவர்களை விடுதலைப் புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதை, ராமதாசைப் போன்றவர்கள் மறந்திருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டதையே இவர்கள் மறந்துவிட்டனர்.

புலனருவ மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நள்ளிரவில் புகுந்து முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தான். இவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கக் கூடாது எனத் தடுத்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதும், இதைப் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பார்லிமென்டில் கோசல் ராம் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மறந்துவிட்டு, சொந்த நாட்டிலும், பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை ராமதாஸ் சுமத்துவது, இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டுள்ள முஸ்லிம்களை, விரட்டத் துணியும் கொடூரச் செயல். லோக்சபாத் தேர்தலை மனதில் வைத்து இலங்கைப் பிரச்னையில் காய் நகர்த்தும் ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், மத்திய அமைச்சராக உள்ள அவரது மகனை பதவியிலிருந்து விலகச் செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

இவ்வாறு, காயல் மகபூப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைக்காகப் போராடுவதாக அறிவித்துச் செயல்பட்ட விடுதலைப் புலிகளாலேயே இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் கூட்டமாக கருவறுக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம்களைத் தமிழர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளாமல் அவர்களின் இருப்புக்கு எதிராக விடுதலைப் புலிகள் செயல்பட்டதற்கும் ஒத்ததாகவே இதுவரைக்கும் தமிழகத்தின் தமிழர் விடுதலை அமைப்புகளின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன” – சத்தியமார்க்கம்.காம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.