நீதியை நிலைநாட்ட முன்வாரீர்!

Share this:

தனி மனிதனிலும் முழு உலகிலும் அமைதியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தில், அந்த அமைதியை ஏற்படுத்துவதன் முக்கிய அம்சமாக உலகில் நீதியை நிலைநாட்டுதல் உள்ளது. தனி மனிதனிலிருந்து குழு, அமைப்பு, சமுதாயம் என எங்கெல்லாம் நீதி வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் உலகில் அக்கிரமமும் அராஜகங்களும் பயங்கரவாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. எனவேதான் அமைதியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம், நீதி வழங்குவதிலும் நீதியை நிலைநாட்டுவதிலும் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறது. முஸ்லிம்களை நீதிக்குச் சாட்சியாளர்களாக மாறுங்கள் என அழைப்பும் விடுக்கிறது.

உலக நீதி-நியாய முறைகளில் அனைவராலும் நினைவுகூரப்படும் முக்கியமான ஒரு வாசகம் உண்டு. "நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது" என்பதுதான் அது. உருவாகி விட்ட குற்றவாளிகளைத் தண்டித்துத் திருத்த முயலும் அதே வேளையில், எந்தக் குற்றமும் செய்யாத ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு இருக்கும் குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு, நாட்டில் அமைதியின்மை அதிகரித்து விடக்கூடாது என்பதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.

ஆம், குற்றமிழைக்காத ஒரு நிரபராதிக்கு அநீதி இழைக்கப்படுமேயானால், அவன் எதிர்காலக் குற்றவாளியாவதற்கு நிர்பந்திக்கப்படுகிறான் என்றே பொருள் கொள்ள முடியும். இதற்கு, சட்டம், நீதித் துறைகளையோ அரசை மட்டுமோ குறை கூறுவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஒரு தனி மனிதனுக்கு நீதி கிடைக்கப்பெறாமல், நிரபராதிக்கு அநீதி இழைக்கப்படும் எனில், அதற்கு முழு சமூகமும்தான் பொறுப்பாளியாக வேண்டும். அதாவது, அந்த நிரபராதிக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பாத, அவனுக்கு நீதி கிடைக்க சாட்சியாக தயாராகாத அனைத்துத் தரப்பினரும் அதற்கு முழுப் பொறுப்பாளியாவார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் அரசியல் அதிகாரம் குறித்து அத்துறைகளில் அயராது உழைத்து வரும் சமூகநீதி அறக்கட்டளை, ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு வருடமும் 25-30 மாணவ-மாணவிகளைச் சட்டம் பயில வைத்து அவர்களுக்கு மார்க்க அறிவும் சமுதாயத்தின் பிரச்சனைகள் குறித்து விளக்கியும் இந்தச் சமுதாயத்திற்கான சட்ட வல்லுனர்களை உருவாக்கிட முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்திற்கேற்ப இன்ஷா அல்லாஹ், இந்த வருடத்தில் சட்டம் படிப்பதற்கு ஆர்வமுள்ள பொருளாதார வசதியற்ற மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

சட்டம் பயின்று சமுதாய கண்ணோட்டத்துடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் +2 சான்றிதழ் அல்லது பட்டம் பெற்ற சான்றிதழின் நகலையும் சேர்த்து ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்பிட வேண்டுகிறோம். சட்டம் பயிலுவதற்குத் தேவையான கட்டணம் அனைத்தையும் சமூகநீதி அறக்கட்டளை ஏற்கும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநீதி அறக்கட்டளை

129.64 தம்புச் செட்டித் தெரு, சென்னை – 1.

தொலைபேசி: 044-25225780

www.samooganeethi.org

சுதந்திர இந்தியாவில், முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்து விட்டப்பின்னரும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான அளவில் பின் தங்கியிருக்கின்றனர் என சமீபத்திய சச்சார் கமிட்டிகள் வரை பல அறிக்கைகள் ஆதாரங்களுடன் சமர்ப்பித்து விட்டன. இந்நிலையில், முஸ்லிம் சமுதாயத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடு வெட்டி எறியும் திட்டத்துடன் இயங்கி வரும் பல்வேறு தீய சக்திகள், இச்சமுதாயத்தை இந்தியாவுக்கு எதிரான கட்டமைப்புகள் கொண்டு

இயங்கும் ஒரு பெரிய தீய சக்தி என்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே இந்திய நாட்டின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பின் தங்கியுள்ள இச்சமுதாயத்தை,  தனிமைப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தத் தக்கவை. அதற்காக இந்தியாவின் மிக முக்கிய உளவுத்துறை போன்ற பல துறைகளிலும்கூட தீய சக்திகள் புகுந்து ஆட்டம் போடுகின்றன என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் சிறைகளில் திட்டமிட்டு அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்ற தலைப்புச் செய்திகளோடு நாடு முழுவதும் மக்கள் மனதில் "முஸ்லிம் தீவிரவாதி" என்ற எண்ணத்தை விதைத்து இவ்வாறு அடைக்கப்படும் முஸ்லிம்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், விசாரணை என்ற பெயரிலேயே பல ஆண்டுகள் சிறைகளில் தங்கள் வாழ்வை அழித்து விட்டு, அவர்களின் முக்கிய இளமைகாலம் முடியும் தருவாயில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர். இது இன்று நாட்டில் அன்றாடம் காணும் காட்சியாக மாறிவிட்டது.

இதற்கான சமீபத்திய உதாரணமே, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், நிரபராதி என விடுவிக்கப்பட்ட பல முஸ்லிம்கள். இதுபோன்று எண்ணற்ற சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன.

முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான திட்டமிட்ட செயல்பாடுகளால் பல்வேறு நன்மைகளைத் தீய சக்திகள் அடைந்து கொள்கின்றன.முஸ்லிம் சமுதாயமே தீயது என்ற எண்ணம் நாட்டு மக்களின் அடிமனதில் விதைக்கப்படுகிறது. இதனால், சமுதாயம் தனிமைபடுத்தபடுகிறது.

2. ஏற்கெனவே கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் 50 ஆண்டுகாலம் பின் தங்கியுள்ள இச்சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதி இளைஞர்கள், கல்வி, பொருளாதாரம் தேடி அடைய வேண்டிய முக்கிய காலகட்டம் சிதைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வில் மேற்கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்பு மழுங்கடிக்கப்படுகிறது. இதனால், சமுதாயத்தின் முன்னேற்றம் மீண்டும் கீழ்நோக்கிச் செல்கிறது.

3. எக்குற்றமும் செய்யாமல் தங்கள் வாழ்வைத் தொலைத்ததில் விரக்தியடைந்திருப்பவர்களை அதே தீய சக்திகள் உளவுத்துறையுடன் இணைந்து, அவர்களின் எதிர்காலம் பிரகாசமான வாழ்விற்கு பற்பல ஆசைகள் காட்டி தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களையே முதலில் இன்ஃபார்மர்களாகவும் பின்னர் தீவிரவாதிகளாகவும் மாற்றும் வேலைகள் செய்கின்றன. இதனால் சமுதாயம் இன்னும் அதிகமான பாதிப்பை அடைகிறது.

4. இவையன்றி அநீதம் இழைக்கப்பட்டதில் வெறுத்துப் போனவர்கள், சமூகத்தின் தொடர் தனிமைபடுத்துதலில் விரக்தியடைந்து சமூகத்தில் அட்டூழியம் இழைப்பவர்களாக மாறிவிடுகின்றனர் – அவ்வாறு மாற நிர்பந்திக்கப்பட்டு விடுகின்றனர்.

இந்நிலை தொடர்வது இந்திய நாட்டின் அமைதிக்குப் பெரும் குந்தகத்தையே விளைவிக்கும். முஸ்லிம் சமுதாயத்துக்கு இழைக்கப்படும் இதே போன்ற அநீதி, இன்னும் பல தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயங்களுக்கும் பல்வேறு விதங்களில் இழைக்கப்படுகிறது.

மேல்தட்டு மக்கள் என்று மனதில் நினைத்துக் கொள்ளும் சில குழுக்களாலும் அராஜக, அட்டூழிய அரசுகளாலும் இவ்வாறு தொடர்ந்து இழைக்கப்படும் நீதி மறுப்பு என்பது இங்கு அமைதியான வாழ்வுக்கு மிகப்பெரும் சவால் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, தன்னிலும் தன் சுற்றுப்புறத்திலும் முழு உலகிலும் அமைதியை நிலைநாட்டுவதற்காக உழைப்பது என்பது அவன் மீது விதிக்கப்பட்ட கட்டாயக் கடமை போன்றதாகும். இந்திய நாட்டைப் பொருத்தவரை அத்தகைய நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். இந்தியச் சட்டம் பயின்றவர்களால் இந்தியாவில் நீதி கிடைக்காதவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக நீதிமன்றங்களில் போராட இயலும்; எவ்விதக் குற்றமும் செய்யாமல் சிறையில் வாடும் அப்பாவிகளின் 'சிறைவயதை'க் குறைக்கவியலும்.

கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம், சமுதாயத்தின் எழுச்சிக்காக, அமைதியை நிலைநாட்டுவதற்காக கல்வி பெறுதலைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். அதிலும் சட்டம் பயில்தல் என்பது மிக மிக இன்றியமையாததாகும். இதனைத் தனிமனிதன் முதல், சமுதாயத்திற்காக உழைப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகள், ஜமாஅத்கள், இயக்கங்கள் என அனைத்தும் புரிந்துக் கொண்டு, சமுதாயத்தை நீதியின் காவலர்களாக முஸ்லிம் இளைஞர்களை மாற்றுவதற்கு முயல வேண்டும்.

அதற்கான முயற்சிகளுள் ஒன்றாக, சமூகநீதி அறக்கட்டளை எனும் அமைப்பு(பெட்டி செய்தி காண்க) சமுதாயத்தைச் சட்டம் பயில்வதில் தன்னிறைவு பெற வைப்பதற்காகவே சூளுரைத்து, அதனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டு முதல் 25-30 மாணவர்களுக்கு  இலவசமாகவே சட்டம் பயில்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வந்துள்ளது.

இஸ்லாம் விரும்பும் அமைதியை உலகில் நிலைநாட்ட விரும்பும்

நீதிக்குச் சாட்சியாளர்களாக,

பாதிக்கப்பட்டவனின் அரணாக,

அநீதிக்கு எதிரான போராட்டத்தைத் தன் வாழ்வின் களமாக

ஆக்கிக் கொள்ள விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என சத்தியமார்க்கம்.காம் அழைப்பு விடுப்பதோடு, இத்தகைய நல்லதொரு நோக்கத்தைச் செயல்படுத்த முன்வந்த சமூக நீதி அறக்கட்டளைக்கு உளமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

சட்டம் பயில்வோம், நீதிக்குப் பாதுகாவலர் ஆவோம், அமைதியை நிலைநாட்டுவோம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.