உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று – இஸ்லாமிய வங்கி!

Share this:

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் பொருளாதாரம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின் வளர்ச்சி, நேர்மையான-நியாயமான வழிமுறைகளின் அடிப்படையில் இல்லாத போது, அதுவே எதிர்மறை விளைவுகளையும் தோற்றுவித்து விடுகிறது.

இன்று உலகப் பொருளாதாரம் முழுமையும் நேர்மை-நியாயமற்ற “வட்டி”யின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. இதனால் எழுந்த எதிர்மறை விளைவு, செல்வம் படைத்தவர்களை மேலும் செல்வந்தர்களாகவும் ஏழைகளைப் பஞ்சப் பரதேசிகளாகவும் ஆக்கி விட்டது. ஏழை மக்கள் பாதிக்கப்படுவதால் என்றுமே அதிகார, துஷ்பிரயோக அரசுகள் அசைந்து கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், இந்தக் கொடும் வட்டி, சமீப காலத்தில் அதிகார, பணபல வர்க்கத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

அதன் பின்னரே, வட்டியினால் விளையும் தீமையினைக் குறித்தும் வட்டியில்லாத ஒரு மாற்று பொருளாதார கட்டமைப்பினைக் குறித்தும் அதிகார, பணபல வர்க்கங்கள் சிறிதாக சிந்திக்கத் துவங்கியுள்ளன.

உலக மக்களின் சுபிட்சமான வாழ்வுக்குரிய வழிமுறைகளை வாழ்வியல் நெறியாக கொண்ட சத்தியமார்க்கமாம் இஸ்லாம், உலகின் அமைதி வாழ்வுக்கு நேர்மை-நியாயமற்ற கொடும் வட்டியைப் புறக்கணித்து வட்டியற்ற கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட கட்டளையிடுகிறது.

இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாட்டைக் கடைபிடித்து, வட்டியற்ற முறையிலான பொருளாதாரத்தைக் கட்டமைத்திருந்த ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகள், சமீபத்திய கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்காமல் தலைநிமிர்ந்து நின்றதை உலகம் கண்டு கொண்டது.

இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசே வட்டியில்லா முறையிலான “இஸ்லாமிய கூட்டு வங்கி” ஒன்றை உருவாக்கியிருப்பினும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்பால் சுப்பிரமணிய சுவாமி அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கி முடக்கினார்.

“நல்லவைகளை நல்லவர்களே வரவேற்பர்!”. அத்தகைய நல்லோர் பலருக்கு இன்னமும் வட்டியில்லா பொருளாதாரம் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதனுடைய அவசியம் குறித்தும் விரிவாக விளக்கப்படவில்லை. அவர்கள் அதன் நன்மைகளை அறிந்து கொண்டால், “இஸ்லாமிய வங்கிகள்” மூலம் இந்த உலகமே ஒரு பொருளாதார புரட்சியைச் சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே, வட்டியில்லா முறையிலான “இஸ்லாமிய பொருளாதார திட்டங்கள்” குறித்து வெளிப்படையான கலந்தாய்வுகள், விளக்கங்கள், பிரச்சாரங்கள் மிக ஆழ்ந்த திட்ட வரைவுகளோடு முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதனைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு, இறை மார்க்கத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்களுக்கு உண்டு.

அவ்வரிசையில், வட்டியின் தீமைகளையும், வட்டியில்லா முறையிலான இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளையும் விளக்கும் விதமாக, “உயிர்க்கொல்லி” என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சகோதரர் ரஃபீக் ரோமன் மற்றும் ஆர். நைனார் முஹம்மது ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இக்குறும்படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா வருகிற 11.01.2009 திங்கள் மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான கம்பர் பி. செல்வந்திரன் குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டு தலைமையுரையாற்றுகின்றார். தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி கவிஞர் சல்மா முதல் குறுந்தகடை பெற்று சிறப்புரையாற்றுகின்றார்.

வட்டி அடிப்படையிலான பொருளாதார கட்டமைப்பினால் விளையும் தீமைகளைப் பாமரர்கள் முதல் அரசுகள் வரை இன்று கண்முன்னால் கண்டுக் கையைச் சுட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், உலகின் சுபிட்ச வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கும் வட்டியில்லா முறையான இஸ்லாமிய வங்கியியல் குறித்து விளக்கங்கள் கொடுக்க எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவைகளாகும்.

மேலும் இது போன்ற முயற்சிகளை மிக ஆழமான ஆய்வுத் திட்டங்களுடன் முன்னெடுப்போம்; இவ்வுலகை வட்டி என்ற கோர அரக்கனின் பிடியிலிருந்து காப்போம்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.