அரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ளி மாணவர்

Share this:

ழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப்பான், மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கும் விதமாக ஜப்பான் – ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தை (சுகுரா) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ஜப்பானில் உள்ள தொழிற்சாலைகள், அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கல்வி நிலை யங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்த ஆண்டு, இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கும் ஒருவர். இவருடைய தந்தை அம்ஜத் இபுராகீம் ஆட்டோ ஓட்டுநர்.

தற்போது 11ஆம் வகுப்பு முடித்துள்ள சித்திக்கிடம், இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து கேட்டோம்.

“எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்தபோதே, அறிவியல் பாடத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதை ஆசிரியை செல்வராணி உணர்ந்தார். எனவே, என்னை அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்க வைத்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் ‘இன்ஸ்பேர்’ விருதுக்கான போட்டி 2009ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில், நான் உருவாக்கிய எளிய முறையில் எடை அறியும் கருவியைப் பார்வைக்கு வைத்திருந்தேன். பயன்படாத பழைய ஆட்டோ டியூப், குளுக்கோஸ் டியூப் மற்றும் நீளத்தை அளக்கும் இஞ்ச் டேப் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதைச் செய்திருந்தேன். அது மாவட்ட அளவில் முதல் பரிசை வென்றது.

2010ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்தேன். இடையிடையே எனது கண்டுபிடிப்பை மேம்படுத்திக் கொண்டே வந்ததால், 2011இல் தேசிய அளவிலான போட்டியிலும் முதல் பரிசு கிடைத்தது. 2013ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் விருந்தில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பை அறிவியல் தொழில்நுட்பத்துறை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, ஜப்பான் செல்லும் 50 பேர் குழுவிலும் என்னைத் தேர்வு செய்துள்ளனர். இதில் நான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், யுகவேந்தன் ஆகிய 3 பேரும் தமிழர்கள். நான் படித்த அரசுப் பள்ளியும், ஆசிரியை செல்வராணி, தலைமை ஆசிரியர் அருள்முருகன் ஆகியோரும்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம்.

தற்போது நான் படிக்கும் மதுரை பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றிருக்க முடியாது.

வருகிற மே 7-ம் தேதி டெல்லியில் இருந்து ஜப்பான் செல்லவுள்ளோம். அங்குள்ள விண்வெளி ஆய்வு மையம், அறிவியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுவதோடு, நோபல் விஞ்ஞானிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கு இந்தப் பயணம் உதவும் என்று நினைக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வசதி இல்லாத குடும்பம் என்பதால், அபுபக்கர் சித்திக் இந்தக் கோடை விடுமுறையில் தம்முடைய அண்ணன்கள் சையது அபுதாகீர், சையது அலாவுதீன் ஆகியோருடன் எலெக்ட்ரிக் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி : tamil.thehindu.com


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.