ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

ஆளூர் ஷாநவாஸ்
Share this:

‘ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்’ என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?

ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மை நிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா?

ஆளூர் ஷாநவாஸ்


சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை குறித்து நான் எழுதிய மேற்கண்ட பதிவை பார்த்து தி.மு.க நண்பர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜாகீர் உசேனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது; அப்படியெனில் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினரை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என அரசும் காவல்துறையும் ஊடகங்களும் சொன்னபோது அதைக் கடுமையாக எதிர்த்துள்ளேன். தலித் மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பா.ம.க.வினர் பரப்புரை செய்தபோதும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளேன். அப்போதெல்லாம் சமூக ஆர்வலனாகத் தெரிந்த நான், இப்போது முஸ்லிம்களுக்காக பேசும்போது அடிப்படைவாதியாகத் தெரிவது ஏன்?

தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா? அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா? அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா? இல்லையே. ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே. பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே. கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே. அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று பலரால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், ‘சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்’ என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் ‘ஜூவி’ அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

ஜாகிர் உசேன் குற்றவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது என்பதே என் வாதம். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அன்றே அவர் குறித்த அனைத்து தகவலையும் நம்பி ஒரு முடிவுக்கு வரலாமா என்பதே நம் கேள்வி.

ஏற்கெனவே, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் காவல்துறை சொன்னது பொய் என்று ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ தலைவர்கள் படுகொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் குழுவினரே குற்றவாளிகள் என காவல்துறை சொன்னதை கலைஞரே கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் பக்ருதீனை காவல்துறையும் ஊடகங்களும் தீவிரவாதி என சொல்லிக் கொண்டிருந்த போதுதான் கலைஞர், போலீஸ் பக்ருதீன் தரப்பு நியாயத்தை கேள்வியாக முன்வைத்தார். அப்படி கேள்வி எழுப்பியதற்காக கலைஞர் தீவீரவாத ஆதரவாளர் ஆகிவிடுவாரா?

இப்போது, ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் இங்கும் வெடித்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. பாட்னா வெடிப்பில் இந்துத்துவ சக்திகளின் சதிவலையே அம்பலமானது. எனவே இதுவும் அதன் தொடர்ச்சிதான் எனும்போது சந்தேகம் யாரை நோக்கி வரவேண்டும்?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பற்றவைப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதே மோடியின் திட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் துணிந்துள்ளனர். எனவே, ஆந்திராவுக்கு மோடி வரும்போது, ஆந்திராவை கடந்துவரும் ரயிலில் குண்டு வெடிக்கிறது என்றால் சந்தேகம் முஸ்லிம் மீதா வரவேண்டும்? இந்த நேரத்தில் குண்டு வெடித்தால் அந்த லாபம் மோடிக்கா, முஸ்லிமுக்கா என்பதைக் கூடவா சிந்திக்கமாட்டீர்கள்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், ‘சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்’ என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் ‘ஜூவி’ அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

தி.மு.க நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

ஆளூர் ஷாநவாஸ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.