பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதா, அடுத்து என்ன? – உண்மை நிலவரம்!

Share this:

காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர்மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 42 இந்திய துணை இராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலும் போர்ச் சூழல் உருவாகி நிலை நின்று வருகிறது.

தீவிரவாதிகளின் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது. அதனை மறுக்கும் பாகிஸ்தான், இந்தியாவில் நடத்தப்பட்டத் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் தரும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத இந்திய தரப்பு, பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாதப் பயிற்சி கூடங்கள்மீது தாக்குதல் நடத்தி 350 தீவிரவாதிகளையும் அவர்களின் பயிற்சி கூடங்களையும் தகர்த்ததாக கூறியது. இதனை மறுத்த பாகிஸ்தான், எல்லை தாண்டி நுழைந்த இந்திய விமானங்களைப் பாகிஸ்தான் விமானப்படையினர் விரட்டியதாகவும் திரும்பிச் செல்லும்போது, இந்திய விமானப்படை குண்டுகளை Off-load செய்ததாகவும் அது மலைப்பகுதியிலுள்ள காடுகளில் விழுந்ததால் எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது.

இதனைத் தொடர்ந்த நாட்களில் பாகிஸ்தானின் விமானப் படையினரும் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அதே போன்று இந்திய விமானப்படையினரும் பாகிஸ்தான் எல்லைக்குள் மீண்டும் புகுந்தனர். இதில், இருதரப்பும் சுட்டுக்கொண்டதில் இரு தரப்பிலிருந்தும் ஓரிரு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில், இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த விமானத்திலிருந்து தமிழக வீரர் அபிநந்தன் பாகிஸ்தானால் பிடிக்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். தாம் பிடித்ததாக பாகிஸ்தான் கூறிய மற்றொரு இந்திய வீரர் குறித்து இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை. இந்தியாவும் இதுகுறித்து இதுவரை வாய்த் திறக்கவில்லை.

அபிநந்தன் விடுவிப்புக்குப் பின்னர், இரு தரப்பும் எல்லைக்கோடு பகுதியில் நடத்தும் துப்பாக்கி சண்டையில் இருதரப்பிலும் இராணுவ வீரர்கள் மற்றும் சாதாரண மக்கள் உட்பட இப்பதிவு எழுதும் இந்நிமிடம் வரை தலா ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இரு தரப்பிலும் வெளியாகும் தகவல்கள் பல முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளன. இந்திய தாக்குதலில் 350 தீவிரவாதிகளும் அவர்களின் பயிற்சி நிலையங்களும் தகர்க்கப்பட்டதாக கூறிய இந்திய தரப்பிலிருந்து, தற்போது அது குறித்த எந்தக் கணக்கு விவரவுமே தம்மிடம் இல்லை என இந்திய முப்படை தளபதிகள் இணைந்து மறுத்துள்ளனர்.

உண்மையில் எல்லையில் என்ன நடக்கிறது? நடந்து முடிந்தவை குறித்த உண்மையான தகவல்கள் என்ன? தற்போதைய சூழல் என்ன?

இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள இத்தருணத்தில், நடப்பவை அனைத்தும் அடுத்தத் தேர்தல் வெற்றிக்காக ஆளும் பாஜக அரசே திட்டமிட்டு நகர்த்துவதாக கடுமையான விமர்சனம் மக்களிடையே எழுந்திருக்கும் சூழலில், இவை குறித்த உண்மை நிலவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அந்த ஆய்வுக்குள் செல்வதற்கு முன்னர், அடிப்படையாக சில விசயங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

பிரச்சனைக்குரிய காஷ்மீர் பகுதி, இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்று பாகிஸ்தானின் ஆளுமை பகுதிக்குள்ளும் மற்றொன்று இந்தியாவின் ஆளுமை பகுதிக்குள்ளும் இருக்கிறது. இவற்றுக்கு இடையே LOC – Line Of Control எனப்படும் எல்லைக்கோடு பிரிக்கப்பட்டு, இதில் இந்திய மற்றும் பாகிஸ்தான் தரப்பு இராணுவத்தினர் முழு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது 1971 ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே கையெழுத்திடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின்படியாகும்.

https://www.aljazeera.com/mritems/Images/2019/2/27/f08cd440e1a847a4806e511ae884d8c1_6.jpg

இதன்படி, இந்திய ஆளுமைக்குட்பட்ட காஷ்மீர் பகுதிகளை இந்தியாவின் பகுதி என எடுத்துக்கொண்டால் புல்வாமாவில் இந்திய இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை இந்தியாவின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியெனில், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் ஆளுமைக்குட்பட்ட ஜபா பகுதியில் இந்திய விமானப்படையினர் புகுந்து குண்டு வீசியதைப் பாகிஸ்தானின் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆக, இரு நாடுகளின் பார்வையில் பாகிஸ்தானிலுள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தானுடையது; இந்தியாவிலுள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுடையது. ஆனால், சர்வதேச நாடுகளின் பார்வையில் பாகிஸ்தானினுள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்; அதே போன்று இந்தியாவிலுள்ள காஷ்மீர் பகுதி இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர். காஷ்மீரின் வரலாற்றை நோக்கினால் இதுவே உண்மையும் கூட. காஷ்மீரில் வாழும் மக்களைப் பொறுத்தவரை, இரு நாடுகளின் கீழுமுள்ள காஷ்மீரின் பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானவை; அதில், இந்திய-பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி சர்வதேச கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான ஓட்டெடுப்பு நடத்தி முழு காஷ்மீரையுமே தனி சுதந்திர நாடாக ஆக்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்காத பாகிஸ்தான் – இந்தியா ஆகிய இரு நாடுகளுமே காஷ்மீரிலுள்ள மக்களுக்கு எதிரி நாடுகள். இதன் அடிப்படையிலேயே, இரு நாடுகளின் கீழிருக்கும் பகுதிகளிலும் காஷ்மீரைச் சுதந்திர நாடாக்கக்கோரும் புரட்சியாளர்கள் உருவாகின்றனர்.

இந்தப் புரட்சியாளர்கள் இரு பகுதியிலும் தீவிரவாதப் பயிற்சி கூடங்களை நிறுவி, தத்தம் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாகிஸ்தான்/இந்தியா மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதிலேயே, இரு நாட்டு இராணுவம்/உளவுத்துறை உட்புகுந்து மற்ற நாட்டின்மீது தாக்குதலை நடத்துவதற்கு இந்தப் புரட்சியாளர் குழுக்களுக்கு உதவுவதாக கூறப்படுகிறது. அவ்வகையில், இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் செயல்படும் புரட்சியாளர்களுக்கு ஆயுதமும் பணமும் நல்குவதோடு, தம் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர் பகுதியில் அந்தப் புரட்சியாளர்கள் தங்கி பயிற்சி எடுக்க வசதியும் செய்துகொடுத்து, இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரினுள் ஊடுருவி தாக்குதல் தொடுக்க பாகிஸ்தான் இராணுவம் மற்றும் உளவுத்துறை உதவிபுரிகிறது. இதனையே எதிர்தரப்பில் இந்தியாவும் செய்வதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

LoC பகுதியில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் செயல்படும் ஜெய்ஷே முஹம்மத், லஷ்கரே தொய்பா முதலான தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவினுள் ஊடுருவாமல் பார்த்து கொள்வதே இந்திய இராணுவத்தினரின் மாபெரும் பணி. மலை மற்றும் குளிரில் வசிக்க அதிகப்பயிற்சி பெற்றுள்ள அவர்கள், குளிர் காலங்களில் இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரின் பாதுகாப்பு குறைவாக இருக்கும்பகுதியினுள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதிகளை ஆக்ரமிப்பதும் வாடிக்கை. இதுவே கார்கில் முதலான யுத்தங்கள்.

https://pbs.twimg.com/media/DG4O5vbWAAAGBx7.jpg

இந்த அடிப்படையினை மனத்தில் இருத்திக் கொண்டு, தற்போது நடந்து முடிந்த நிகழ்வுகள் குறித்து இரு நாட்டு ஊடகங்கள் அன்றி பிபிசி, ராய்ட்டர்ஸ், அல் ஜஸீரா முதலான சர்வதேச ஊடகங்களில் வந்துள்ள செய்திகளை ஆராய்ந்தால் கீழ்கண்ட முடிவுகளுக்கு எட்ட முடிகிறது.

1. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள காஷ்மீரின் ஜபா பகுதியில் செயல்படும் ஜெய்ஷே முஹம்மத் பயிற்சி கூடங்களைத் தாக்க இந்திய விமானப்படையினர் நள்ளிரவு 3 மணியளவில் நுழைந்துள்ளனர்.

2. உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் விமானப்படையினர், இந்திய ஜெட் விமானங்களை விரட்டியுள்ளனர். பாகிஸ்தான் விமானங்களிடமிருந்து தப்பி வரும் வழியில், தம் விமானத்தில் நிரப்பியிருந்த குண்டுகளை இந்திய விமானப்படையினர் அப்பகுதியிலேயே ஆஃப் லோட் செய்துள்ளனர்.

3. இந்தக் குண்டுகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியிலுள்ள ஜபா மலைப்பகுதியிலும் விவசாய நிலங்களிலும் விழுந்துள்ளன. இதில், விவசாய நிலத்தில் விழுந்த குண்டால் தெறித்து வந்த பாறை கல் துண்டு பட்டு அந்நிலத்தின் அருகில் வசித்திருந்த பொதுமக்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவையன்றி, ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாத முகாம் எதற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்தத் தீவிரவாதியும் கொல்லப்படவில்லை.

4. இந்தக் குண்டுகள் விழுந்த ஜபா மலைப்பகுதியின் அருகிலேயே ஜெய்ஷே முஹம்மதால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இப்பள்ளிக்கூடம் இம்மியளவும் சேதமடையவில்லை. அதன் அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் இடக்காட்டி பலகையில், அப்பள்ளிக்கூடத்தின் தலைவர் ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் என்றும் அதன் நடத்துனர் மசூத் அசாரின் உறவினர் முஹம்மத் யூசுஃப் அசார் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த முஹம்மத் யூசுஃப் அசார், 1999 ஆம் ஆண்டு வாஜ்பேயி ஆட்சி காலத்தில் இந்திய சிறையிலிருந்து மசூத் அசாரை விடுவிக்கக் காரணமான இந்திய விமானக்கடத்தல் நடத்திய முக்கிய புள்ளி. இவரைத் தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது. அப்போது விமானத்துடன் கடத்தப்பட்ட 150 பயணிகளைத் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக விடுதலை செய்யப்பட்ட மசூத் அசாரால் 2000 ஆம் ஆண்டில் ஜெய்ஷே முஹம்மத் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஜெய்ஷே முஹம்மத் இயக்கத்தைப் பாகிஸ்தான் தடை செய்துவிட்டது. இருப்பினும் அதன் பயிற்சி முகாம்கள் இப்போதும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருவதன் அடையாளமே இந்தப் பள்ளிக்கூடம்.

5. இப்பள்ளிக்கூடம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள், அது சாதாரணப் பள்ளிக்கூடம் என்றும் ஜெய்ஷே முஹம்மத் இயக்கத்தவர்களுக்கு ஆயுதப்பயிற்சியளிக்கும் கூடமெனவும் இருவேறு கருத்துகள் கூறுவதாக அல் ஜஸீராவின் நேரடி கள ஆய்வு கூறுகிறது.

https://www.aljazeera.com/mritems/Images/2019/2/27/08242c45e6614870b52f3b4df20aa39a_6.jpg

இவற்றிலிருந்து நமக்கு மிகத் தெளிவாக புரியவருபவை:

1. இரு நாடுகளும் காஷ்மீர் மக்களின் பார்வையில், எதிரெதிர் நாடுகள் ஆக்ரமித்து வைத்துள்ள காஷ்மீரின் பகுதியிலேயே தாக்குதல்கள் நடத்திக் கொள்கின்றன. ஊடகங்கள் இதனை, பாகிஸ்தான் மீது தாக்குதல்/இந்தியா மீது தாக்குதல் என செய்திகள் வெளியிட்டுத் தம் டி ஆர் பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்கின்றன.

2. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாத முகாம்கள் உள்ளன. அவை அங்குச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதனை அழிப்பதற்கான முயற்சிகளைப் பாகிஸ்தான் இராணுவம் கைகொள்ளவில்லை. இந்திய இராணுவத்துக்கு அம்முகாம்கள் குறித்து ஓரளவு தெளிவான தகவல் தெரியும்.

3. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாத முகாம்களையே இந்திய இராணுவம் தெளிவாக குறிவைத்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியினுள் புகுந்துள்ளது. பாகிஸ்தானின் ஏதேனுமொரு இடத்தில் ஒரு தாக்குதல் நடத்தினால் போதுமென நினைத்திருந்தால், அதன் எல்லைக்குள் நுழைந்த நிமிடத்திலேயே கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் குண்டுகளை வீசி அதிக பட்ச இழப்புகளை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், இந்திய இராணுவம் அத்தகைய அராஜகத்தில் ஈட்டுபடவில்லை. பாகிஸ்தான் இராணுவம் விழித்துக்கொண்டது தெரிந்ததும், தேவையற்ற மோதலைத் தவிர்க்க உடனடியாக திரும்பியுள்ளன. திரும்பும் வழியில் ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாத முகாம் இருக்கும் இடமென தெரிந்த இடத்தில் குண்டுகளை வீசியுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அவை விவசாய நிலத்திலும் மலையிலும் மட்டும் விழுந்துள்ளன. அதன் அருகிலேயே இருந்த ஜெய்ஷே முஹம்மத் தீவிரவாத பயிற்சி முகாம் தப்பித்துக் கொண்டது.

4. இதனைத் தொடர்ந்து கவுரவப் பிரச்சனையால், இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியினுள் பாகிஸ்தானின் ஜெட் விமானங்களும் நுழைந்துள்ளன. அவற்றை விரட்டிச் சென்ற இந்திய விமானங்களில் இரண்டு பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலுள்ள இரு இந்திய வீரர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டனர். அதிலொருவர் அபிநந்தன், இந்தியாவில் இப்பிரச்சனையைக் கொண்டு ஆளும் பாஜக அரசு அரசியல் ஆதாயம் தேட முயல்வதைப் புரிந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5. தற்போதைய நிலையில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமே இது கவுரவப் பிரச்சனையாக மாறியுள்ளது. நிஜத்தில் பாகிஸ்தான் போரை விரும்பவில்லை. இந்தியாவும்தான். அவ்வாறொரு முழு நீளப் போருக்கு இரு நாடுகளும் செல்லும்பட்சத்தில், இரு நாடுகளிடமும் இருக்கும் ஆயுத இருப்பைக் கணக்கிலெடுத்தால் பாகிஸ்தான் முழுமையாக அழியும்; இந்தியாவும் மாபெரும் இழப்புகளைச் சந்திக்கும். இரு நாடுகளுக்கும் உலக நாடுகளில் எவையாவது ஆதரவு கொடுக்கும் பட்சத்தில், அது மூன்றாவது உலகப்போராகவும் மாற வாய்ப்புண்டு. சர்வதேச நாடுகள் இவ்விஷயத்தில் நடந்துகொள்ளும் முறையினைக் காணும்போது அவ்வாறானதொரு மோசமான நிலைக்குச் செல்ல வாய்ப்பில்லை.

6. பாகிஸ்தான் எவ்வகையிலேனும் போரைத் தவிர்க்கும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அதே சமயம், இந்தியாவால் நிச்சயமாக அமைதியாக இருக்க முடியாது. புல்வாமாவில் இழந்தது 42 வீரர்கள். அதனைத் தொடர்ந்து இன்றுவரை நடந்து வரும் எல்லைக்கோடு துப்பாக்கி சூடுகளில் இழந்துள்ள மொத்த உயிர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டிவிட்டது. பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள மற்றொரு பைலட் குறித்தும் இதுவரை இந்தியா வாய்த்திறக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் சரியான முறையில் பதிலடி கொடுக்கவில்லையேல், ஆளும் பாஜக அரசு வரும் தேர்தலில் அடையும் படுதோல்வியைத் தடுக்கவே முடியாது.

ஆக,

எல்லையில் இனி வரும் நாட்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். ஆளும் பாஜக அரசு, நடக்க இருக்கும் தேர்தலை மட்டுமே மனத்தில் வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இழந்துள்ள ஜவான்களின் உயிருக்கும் பாகிஸ்தானில் பிடிபட்டிருக்கும் மற்றொரு வீரருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆளும் மோடி அரசு உள்ளதால், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இனிவரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகள், ஆளும் பாஜக தலைவர்களின் உயிருக்கு ஆபத்து, இராணுவ, உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஆபத்து முதலான பல்வேறு உச்சப்பட்ச உசுப்பேற்றல்களும் திசைதிருப்பல்களும் தேவைப்பட்டால் அத்தகைய தாக்குதல்கள் நடப்பதற்காக பாதுகாப்பில் குளறுபடிகளையும்கூட செய்வதற்கு ஆளும் மோடி அரசு தயங்காது என்பதே உண்மை!

-அபூ சுமையா

http://www.satyamargam.com/author/abusumaiya/


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.