கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்!

Share this:

"ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும்" என மாலேகோன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இந்துத் தீவிரவாத சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் அமைப்பான 'அபினவ் பாரத்'தின் தலைவி ஹிமானி சவார்க்கர் அறிவிப்புச் செய்துள்ளார்.

 

 

ஹிமானி, காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகளாவார். ஹிமானியின் கணவர், ஹிந்துத்துவ ஆச்சாரியன் சவர்க்கருடைய மருமகன் ஆவார்.

 

"மாலேகோன் முதலான இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஹிந்துக்களின் நியாயமான எதிர்வினைகளாகும். தங்களுடைய மக்களுக்கு எதிராக நிரந்தரமாக அக்கிரமம் நடக்கும் வேளையில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற தத்துவங்கள் எதுவும் இக்காலத்தில் விலை போகாது" என அவுட் லுக் தினசரிக்கு ஹிமானி வழங்கிய பேட்டியில் ஹிந்துத்துவ வாதிகளின் அட்டூழியங்களை நியாயப் படுத்தி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேற்கண்டவாறு கூறினார்.

 

"தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமே எங்களின் இலட்சியம். அதனைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்தால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர். ப்ரக்யா சிங் துவங்கிய மாலேகோன் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவையே. தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் எதிர்த் தாக்குதல் மட்டுமே நடத்தியுள்ளனர்" என ஹிமானி கூறினார்.

 

"துப்பாக்கியைத் துப்பாக்கி கொண்டே எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் கூறியது தெரியுமில்லையா? எனில், வெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது? மாலேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட மேஜர் சமீர் குல்கர்ணி முதலானவர்கள், உண்மையில் தேசப்பற்று மிக்கவர்களாவர். தேசப் பற்றாளர்கள் மீது குற்றம் சுமத்தி, ஹிந்துக்களைப் பலவீனப் படுத்துவதற்கு அரசு முயல்கிறது" எனவும் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஹிமானி குற்றம் சாட்டினார்.

 

"குஜராத் கலவரம் முதலானவற்றில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என முஸ்லிம்கள் கூறுகின்றனர். மதத்தை முன் நிறுத்தியே அவர்கள் அவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். குஜராத் நிகழ்வைக் குற்றச் சாட்டாகச் சொல்பவர்கள் குடியேறுவதற்கு உலகில் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உடையவர்கள் அங்குச் சென்று வாழ்ந்து கொள்ளட்டும். ஹிந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை" எனவும் ஹிமானி கூறினார்.

 

மும்பைக் கலவரத்தைக் குறித்து சமர்ப்பிக்கப் பட்ட ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஹிமானி கூறினார். "குஜராத் கலவரம் குறித்த நானாவதியின் அறிக்கையிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?" என்ற கேள்விக்கு, "அந்த அறிக்கையினைக் குறித்துத் எனக்கு அதிகம் எதுவும் தெரியாது; எதிர் தாக்குதல் நடத்துவது மனிதர்களிடையே சகஜமானது" என்று அவர் பதிலளித்தார்.

 

"தற்பொழுது நடப்பவை அனைத்தும் ஹிந்துக்களின் யதார்த்தமான எதிர்வினைகளே! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிக் கொண்டு நிற்க வேண்டுமோ? நாங்கள் எதிர்த்துத் தாக்கவே செய்வோம். அதற்காக ஹிந்துக்களுக்கு எதிராக எவராவது நடவடிக்கை எடுப்பின் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம்" என ஹிமானி ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கை விடுத்தார்.

 

"ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மனியர் என்றும் பிரிட்டனின் வசிப்பவரை பிரிட்டீஷியர் என்றும் அழைக்கும் பொழுது, ஹிந்துஸ்தானில் வசிப்பவர்களை ஹிந்து என்று ஏன் அழைக்கக் கூடாது?" என அதிபுத்திசாலி(!)த் தனமான கேள்வி ஒன்றை ஹிமானி எழுப்பினார்.

 

"அனைவரும் ஹிந்துக்களான இந்த ஹிந்துஸ்தானை ஒரு ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும். இதனை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள் நாட்டை விட்டுப் போகலாம். தீவிரவாதத்தை அழிப்பதில் எந்த அரசு தோல்வியடைந்தாலும் அவர்களைத் தோற்கடிக்க ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். பங்களாதேசிகள் முதலான வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" என அவர் கூறினார்.

 

***

ஒருமுறை குமுதம் இணையத் தொலைகாட்சியில் த.மு.மு.க. தலைவர் பேரா. ஜவாஹிருல்லாவுடனான நேர்முக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவி, ஒரு கேள்வியின் பொழுது, "இந்தியாவை மதசார்பற்ற நாடு எனக் கூறக்கூடாது. இந்தியாவில் மத சார்பற்ற அரசு நடக்கிறது என வேண்டுமானால் கூறலாம். விடுதலையின் பொழுது நேரு முதலானவர்கள் இப்புனித ஹிந்து மண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டனர். பாரம்பரிய ஹிந்து மண்ணான இந்தியா, ஒருபோதும் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்கவே முடியாது. எனவே இம்மண்ணை ஹிந்து மண், ஹிந்து நாடு என்று தான் அழைக்க வேண்டும்" என்று கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

 

ஆர்.எஸ்.எஸ் எந்த அளவிற்கு இந்திய மக்களின் மனதில் விஷத்தை ஏற்றி மூளைச் சலவை செய்கிறது என்பதற்கு இதனைவிடச் சிறந்த வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை.

 

செய்யும் அக்கிரமங்களை நியாயப் படுத்துதல், தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகுவதை விடுத்து, செயற் படுத்தும் அத்தனை அக்கிரமங்களையும் தேசப்பற்றாக நினைத்துக் கொண்டு, ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்தல் என ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி விட்டுள்ள இலட்சகணக்கான தொண்டர்கள், இந்தியாவின் இறையாண்மையையும் இந்திய மக்களின் ஒற்றுமையையும் தகர்க்கப் போகும் வெடிகுண்டுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

இந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின், காவல்-நீதித்துறைகளின் கட்டாயக் கடமையாகும்.

 

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.