ரகுநாத் கோவில் தாக்குதல்: உண்மைக் குற்றவாளி யார்?

{mosimage}ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது.

கடந்த 2002 மார்ச் 30 அன்று ஆயுதம் தாங்கிய இரண்டு தீவிரவாதிகள் ரகுநாத் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதற்கு முன்னதாக அப்பாவி மக்கள் கூடும் ரகுநாத் பஜார் எனும் கடைவீதியில் கையெறி குண்டுகளை வீசி பல கடைகளையும் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியிருந்தனர்.  இத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் கடும் காயமடைந்தனர். காவல் படையினர் திருப்பித் தாக்கியதில் அந்த இருவரும் கொல்லப் பட்டனர்.

துணிகரமாக நிகழ்த்தப்பட்ட இந்த மாபாதகச் சம்பவம் தொடர்பாக ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த ஜம்மு நீதிமன்றம் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கூறியது. நீதிபதி சுபாஷ் சந்திர குப்தா தனது தீர்ப்பில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிகக்கடுமையாக சாடினார். இந்த வழக்கில் 84 பேர் சாட்சியம் அளித்திருந்த போதிலும், குற்றம் சுமத்தப் பட்ட ஆறு முஸ்லிம்களுக்கும் இக்கோயில் தாக்குதலில் தொடர்பு உள்ளதற்கான ஒரு ஆதாரம் கூட காவல் துறையால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. 
 
அதற்கு மாறாக, வீரேந்தர் சர்மா என்பவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியதற்கு இந்த வழக்கின் விசாரணை கோப்புகளில் போதுமான தகவல்களும் போதுமான முகாந்திரமும் இருந்த போதிலும் இவர் மீது குற்றம் சுமத்தப் படவோ, கைது செய்யப்படவோ இல்லை. குறைந்தபட்சம் இவர் விசாரிக்கப்பட கூடவில்லை. 'இவர் ஏன் கைது செய்யப்படவில்லை?' என்பதற்கு காரணம் தெரிவிக்கும்படி நீதிபதி சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
இக்கோயில் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு, இப்போது நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுவிக்கப் பட்டிருக்கும் அப்பாவிகளின் பெயர் விபரம் வருமாறு; மஹ்மூது அஹமது, மரூஃப் கான், சர்ஃப்ராஸ் கான், கபீர்தீன், முனீர் ஹுசைன் மற்றும் சபீர் அஹமது.

தகவல்: மரைக்காயர்

இதை வாசித்தீர்களா? :   பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!