மஹாராஷ்டிரா குண்டுவெடிப்புகள்: சங் பரிவாரின் முகமூடி கிழிகிறது – ஓர் அதிர்ச்சி தகவல்

Share this:

மஹாரஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் RSS உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் என்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராகுல் மோகன் என்பவரை உண்மை அறியும் மயக்கநிலை சோதனைக்கு (Narco Analysis Test) உட்படுத்திய போது அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல விவரங்கள் வெளிப்பட்டுள்ளன.

நாந்தேட் குண்டு வெடிப்பு அல்லாமல் ஜல்னா, புர்னா, பர்ஃபானி பள்ளிவாசல்களில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் தனக்கு பங்குள்ளதை ராகுல் ஒத்துக் கொண்டுள்ளார். வெடிகுண்டு தயார் செய்வதற்காக தனக்கு 45,000 ரூபாய் கிடைத்ததாகவும் ராகுல் ஒத்துக் கொண்டுள்ளார். RSS – பஜ்ரங்தள் அமைப்புகளின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் பிரச்சாரகர்கள் மூலமாக தனக்கு அப்பணம் கிடைத்ததாகவும் கூறினார். வெடிகுண்டு தயார் செய்வதற்கான அப்பணத்தை மூன்று அரசியல் தலைவர்கள் கொடுத்து விட்டதாக ராகுல் இச்சோதனையின் போது கூறியிருந்தாலும் அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை காவல்துறையால் முடியவில்லை என நாந்தேட் குண்டுவெடிப்புகள் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தி வரும் கமிட்டி சேர்மன் நீதிபதி கோல்சே பாட்டீல் அறிவித்தார்.

இந்த தலைவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கவும், மும்பை, மாலேகாவ் தொடங்கிய குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் நடந்த சதியாலோசனைகளை வெளிக்கொணரவும் நீதித்துறை (Judicial) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கோரினார். நாந்தேட் விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்காக “வகுப்புவெறி எதிர்ப்பு (Communalism Combat) மராத்தி பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு” நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது முன்னாள் நீதிபதியான கோல்ஸே இவ்வாறு கூறினார். அமைக்கப்படும் உயர்மட்ட விசாரணைக் குழுவில் தேசிய மனித உரிமை கழக அங்கத்தினர், நடுநிலை சமூக சேவையினர் போன்றவர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் கோல்சே கூறினார்.

நீதிபதி கோல்சே, நாக்பூர் RSS அலுவலகத்தில் போலியாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னால் இருந்த RSS – காவல்துறை சதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் ஆவார்.

வெடிகுண்டு தயார் செய்யும் பொழுது நிகழ்ந்த தவறே நாந்தேட் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், நாந்தேட் குண்டுவெடிப்பை “பட்டாசு தொழிற்சாலையில் நடந்த ஒரு சாதாரண விபத்து” என்று கூறி காவல்துறை சம்பவத்தை மூடி மறைக்க முயன்றது சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காகவே ஆகும். இது மீண்டும் ஒரு சங் பரிவார – காவல்துறை மறைமுக தொடர்புகளுக்கான ஆதாரமாகும். சங் பரிவாரத்துடன் மறைமுகமாக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் உளவுத்துறை (Intelligence Bureau) குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும், தேசவிரோத செயல்கள் தொடர்பாகவும் கடந்த 60 வருடங்களாக அரசுக்கு தவறான விவரங்களை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பதாகவும் நீதிபதி கோல்சே சுட்டிக்காட்டினார்.

நாந்தேட் குண்டு வெடிப்பு குறித்த உண்மைகளை வெளியில் கூறுவதற்கு பொதுமக்கள் அஞ்சுவதாக விசாரணை கமிட்டி வழிநடத்துனர் (Convener) டீஸ்தா ஸெற்றல்வாத் கூறினார். மேலும், “பரிசோதனைக் குழுவின் அறிக்கை வெளிவரும் முன்பே ‘சம்பவத்திற்கு பட்டாசு வெடிப்பு தான் காரணம்’ என காவல்துறை அவசர கதியில் பத்திரிக்கையாளர்களிடம் செய்தி கொடுத்தமைக்குப் பின்னால் நிச்சயம் ஏதோ ஒரு சதி உள்ளது. சம்பவத்தில் வெடித்த குண்டின் வீரியத்தால் கிட்டங்கியின் கதவுகள் (Godown Shutters) 40 அடி தூரத்திற்கு வெடித்து சிதறியது சம்பவத்திற்கு பட்டாசு வெடிப்பு காரணமாக இருக்க இயலாது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மேலும் சம்பவ இடத்தில் ஒரு பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாக அங்கு குடியிருக்கும் மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதும் மிக முக்கிய ஆதாரமாகும்” எனவும் டீஸ்தா கூறினார்.

ராகுல் மோகனுக்கு நடத்தப்பட்ட டெஸ்டின் மூலம் வெளிப்பட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய விஷயங்களின் அடிப்படையில் RSS, பஜ்ரங்தள், வி.இ.ப, இந்து மகா சபை, சிவசேனா போன்றவைகளை தீவிரவாத இயக்கங்களாக அறிவித்து அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் விசாரணைக் கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. நாந்தேட் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை கமிட்டி 5 தினங்களாக நடத்திய விசாரணை அறிக்கையை வரும் தினங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நடக்கும் எல்லாவிதமான குண்டுவெடிப்பு அசம்பாவிதங்களுக்கும் பின்னால் ஏதாவது முஸ்லிம் குழுக்களே இருப்பதாக கடந்த காலங்களில் வலிந்து திணிக்கப்பட்டு “தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இஸ்லாம்” என்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் பின்னணியிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 60 வருடங்களாக இந்திய புலன்விசாரணைக் குழுவில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படாததும், காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய துறைகளில் முஸ்லிம்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதிலும் ஒரு நீண்டகால திட்டமிட்ட சதிச்செயல் இருப்பது தற்போது வெளிவரும் தகவல்களின் மூலம் சிறிது சிறிதாக உறுதிபடுத்தப்படுகிறது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.