தொடரும் அல்தாஃபின் அவலம்: கேரள இஸ்லாமோஃபோபியா – Follow up

கடந்த 2008 ஜனவரி 6 ம் தேதியன்று கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள குமளியில் வைத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தத் தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்துக் கேரளாவில் சிறை வைக்கப் பட்டுள்ள காஷ்மீரைச் சேர்ந்த அல்தாஃப், நிரபராதி என காஷ்மீர் அரசே கடிதம் அளித்தப் பின்னரும் இதுவரை விடுதலை செய்யப்படாமல் சிறைச் சாலைகளில் அலைக் கழிக்கப்பட்டு வருகிறார்.

தீவிரவாதி எனக் கூறி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அல்தாஃபினை பீருமேடு நீதிமன்றம் 15 நாள் ரிமாண்ட் செய்தது. கிடைத்தச் சந்தர்ப்பத்தை வீணடிக்காமல் அதனைத் தொடர்ந்த நாட்களில் RSS மற்றும் BJP-யினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கேரளா முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டுமல்ல குமளியில் வியாபாரம் செய்யும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் கடைகளைத் தகர்த்தும் அவர்களைத் துன்புறுத்தியும் அட்டூழியம் செய்தனர்.

அல்தாஃபினைக் குறித்த செய்தி ஊடகங்களில் பரபரப்பாக்கப்பட்டு பாஜக மற்றும் RSS அமைப்பினர் அதனை வைத்து இலாபம் சம்பாதிக்க இறங்கிய வேளையில் அவர்களுக்குப் போட்டியாகக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பால கிருஷ்ணன், “அல்தாஃப் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் உள்ள தீவிரவாதி” எனவும் “காஷ்மீரில் காவல்துறையால் தேடப்படும் பல தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி” எனவும் “மத்திய உளவுதுறையின் கண்களில் மண்ணைத் தூவி கேரளாவில் மறைந்து வாழ்வதாகவும்” “இன்று முதல் கேரளா முழுவதும் உள்ள அன்னிய மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள்” எனவும் அறிவித்து அதன்படி கேரளாவில் வாழும் காஷ்மீர் முஸ்லிம்களின் மீது காவல்துறையின் கண்காணிப்பு என்ற பெயரில் தன் பங்கிற்குக் காவல்துறையை வைத்து அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டார்.

இதனிடையே அல்தாஃப் அடைக்கப்பட்டிருந்தச் சிறைசாலைக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை எனவும் அங்கு அல்தாஃபின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் தாக்குதல் நடைபெறலாம் எனக் கூறி அல்தாஃபை விய்யூர் மத்தியச் சிறைசாலைக்கு மாற்ற நீதிமன்றத்திலிருந்துக் காவல்துறை உத்தரவு பெற்றுக் கொண்டு அல்தாஃபை விய்யூர் மத்தியச் சிறைசாலைக்கு மாற்றியது.

இவ்வேளையில் அல்தாஃபின் சகோதரர், “தனது தம்பி அல்தாஃப் நிரபராதி எனவும் அரசுக்கு எதிராகவோ நாட்டுக்கு எதிராகவோ சட்டத்திற்குப் புறம்பான விதத்திலோ எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை எனவும் அப்பாவியான அவன் மீது காவல்துறை வேண்டுமென்றே பொய் வழக்குத் தொடுத்துள்ளது” எனவும் கூறி சமர்ப்பித்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அல்தாஃபின் ரிமாண்டை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்தது.

அதனைத் தொடர்ந்து அல்தாஃபின் தந்தை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு சமர்ப்பித்தார். அங்கும் தீவிரவாதியை வெளியே விட முடியாது எனக்கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், “காஷ்மீர் காவல்துறைக்கு ஏதாவது வழக்குத் தொடர்பாக அல்தாஃபை அவசியமா?” என கேட்டுப் பதிலளிக்குமாறு அரசுக்கு கேரள உயர்நீதி மன்றம் உத்தரவும் போட்டது.

இதை வாசித்தீர்களா? :   தொடரும் இஸ்லாமோஃபோபியா...!

இதனிடையே காஷ்மீர் முதல்வர் அலுவலகத்தை அணுகிய அல்தாஃபின் தந்தைக்கு, “அல்தாஃபை காஷ்மீரில் எந்த ஒரு வழக்குத் தொடர்பாகவும் தங்களுக்குத் தேவையில்லை எனவும் காஷ்மீரில் அல்தாஃப் சட்டத்திற்குப் புறம்பாக எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும் இத்தகவல் கேரளக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது” எனவும் காஷ்மீர் முதலமைச்சரின் ஆலோசகரான மன்சூர் அஹ்மத் கனாய் காஷ்மீர் IG-க்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பபட்டுள்ளதாகத் தெரியப்படுத்துகிறார். இக்கடிதத்தின் நகல் DIG-க்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனேயே காஷ்மீர் முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இக்கடிதத்தின் நகலைப் பெற்றுக் கொண்ட அல்தாஃபின் தந்தை, அதனை கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்து, “நிரபராதியான தனது மகனுக்கு ஜாமீன் மட்டுமாவது உடனடியாக அனுமதிக்க வேண்டும்” எனக் கோரினார்.

ஆனால் இந்த மனுவையும் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இம்மனுவின் மீதான விசாரணையின் பொழுது இவ்வாறான ஒரு கடிதம் குறித்துக் கேரளக் காவல்துறைக்கு எதுவுமே தெரியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனைத் தொடர்ந்து “தற்பொழுதைக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று அதனை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக” அறிவித்து அல்தாஃபின் ரிமாண்டை உயர் நீதிமன்றம் மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு அப்பாவி முஸ்லிம் மீது ஏதோ காரணத்திற்காகப் புனையப்பட்டத் தீவிரவாதி நாடகத்தின் உண்மைகள் வெளிவந்து விட்டச் சூழலில் அல்தாஃபின் கைதை வைத்து அரசியல் இலாபம் தேடும் நோக்கில் முன்பு அல்தாஃபை “ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி” என அறிவித்திருந்தக் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் தற்பொழுது, “அல்தாஃபை ஊடகங்களே தீவிரவாதியாக்கின” எனக் கரணம் அடித்துள்ளார்.

இந்தியாவில் எந்த ஒர் இடத்திலும் எவ்விதச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எவ்விதத் தகவலும் இல்லாத அல்தாஃப் கடந்த ஒரு மாதக் காலமாக முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அவரும் அவருடையக் குடும்பமும் அவரைப் போன்ற எண்ணற்ற காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களும் கேரளக் காவல்துறையாலும் நீதித்துறையாலும் அங்கும் இங்கும் அலைகழிக்கப் படுகின்றனர்.