எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.

Share this:

கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
 

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். 

வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது.

பால்யகால ஸ்மரணகள்(குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம்(இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம்(பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 
 
அன்பைத் தேடி பயணப்பட்ட அவரின் வாழ்வில், அவர் இறுதியாக தேடிய மழை போன்ற அன்பு இருக்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டார். 1999 ஆம் ஆண்டு தன் 65 ஆவது வயதில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அன்றோடு மாதவிக்குட்டி என்ற தன் இயற்பெயருக்கு விடைகொடுத்து, கமலா சுரய்யா என்றப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆனார்.
 
தேடியலைந்த நிரந்த
அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது.
 
இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும்
அவரைத் தொடர்ந்தன
!
 
உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த
பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன. 
 
தொடர்ந்து வந்த வல்லூறுகளின்
தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.
 
கடந்த ஒன்றரை மாதக்காலமாக சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
 
இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றப்பின்னரான அவரின் கடந்த 10 ஆண்டு கால வாழ்வில் அவர் வெளிப்படுத்திய அவரின் மகத்தான எண்ணங்கள், இவ்வுலகை விட்டு நீங்காது!
 
அவரின் எண்ணங்களில் சில:
 
“அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!”
 
“நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை.”
 
“எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது.”
 
“நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்.”
 
“பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, ‘கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்’ என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது. தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்.”
 
“நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.”
 
கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும்.
 
சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை 
புரியட்டுமாக!
ஆமீன்.
 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.