ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்: மோடி

Share this:

“ ‘க்களைத் தம் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்’ என்று நரேந்திர மோடி கூறியபோது நான் அங்குதான் இருந்தேன்.”
        
டி.ஐ.ஜி. சஞ்சீவ் பட் 2002ல் நடந்த கலவரம் பற்றிக் குரூர உண்மைகளை அறிந்திருந்தார். உச்சநீதிமன்றம் இதைப் பதிவு செய்யுமா?

உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினால் முதலமைச்சர் மோடி குறுக்கு விசாரணை செய்யப்பட்டது – சென்ற வார ‘தெஹல்கா’வில் வெளியாகியிருந்தது – மிகத் தந்திரமாக நழுவிச் செல்லும் செயல்களிலேயே முதல் தரமானது. ஆனால், மோடி ஒரு பிழை செய்து விட்டார். கோத்ராவில் சபர்மதி ரயில் படுகொலைக்குப் பிறகு, 2002 பிப்ரவரி 27 அன்று மோடி ‘சட்டம் – ஒழுங்கு கூட்டம்’ ஒன்றை அவர் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் “இந்துக்கள் அவர்களது பொங்கிவரும் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்” என்று தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளும்படியான கருத்தைக் கூற வேண்டியதாகிவிட்டது. சமிக்ஞை அனுப்பப்பட்டு விட்டது.  அதைத் தொடர்ந்து வரலாறு ஊனப்படுத்தப்பட்டது.

மார்ச் 2010-ல் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஏ.கே.மல்ஹோத்ரா, அந்தக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று மோடியிடம் விசாரித்தபோது, மோடி ஏழு அதிகாரவர்க்க அதிகாரிகளின் பெயர்களைக் கூறினார்.  பிறகு, தனியாக ஒரு காவல்துறை அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டார். சஞ்சீவ் பட், மாநிலப் புலனாய்வு பீரோவில் உள்துறை பாதுகாப்பு துணை ஆணையராக இருந்தவர்.

மோடியிடம் மல்ஹோத்ரா அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டனர் என்றுதான் கேட்டார்.  யார் கலந்து கொள்ளவில்லை என்று கேட்கவில்லை.  ஆனால் கலந்து கொண்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டபின், மோடி தனிப்பட்ட ஆர்வத்துடன் இந்தத் தேவையற்ற, துண்டுத் தகவலைத் தானாக முன்வந்து அளித்துள்ளார்.  சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் இல்லை. ஏனெனில், அது ‘மேல்மட்ட சந்திப்பு’ என்று அவர் கூறுகிறார்.

மோடி ஒருதலைப்பட்சமாக, சஞ்சீவ் பட் பிப்ரவரி 27 கூட்டத்தில் கலந்து கொண்டதை மறுத்தும், அவரது பெயரைக் களங்கப்படுத்தியும் கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனெனில் இரண்டு மாதத்திற்கு முன்பாக ஒவ்வொரு அதிகாரியும் அந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை மறந்து விட்டதாக வாதாடும்போது ஒரேயொரு அதிகாரி மட்டும், உச்சநீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை அனுப்பினாலோ அல்லது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ அந்தக் கூட்டத்தில் அவர் கேட்ட உண்மையைக் கூறவும், அதை நிரூபிக்கவும் தயார் என, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கூறினார். அந்த அதிகாரிதான் சஞ்சீவ் பட்.

மோடியோ மற்ற அதிகாரிகளோ பிப்ரவரி 27க்கு அடுத்த நாள் முதலமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு உயர்மட்ட சட்டம்-ஒழுங்கு கூட்டத்தில் (அதில் தன் பெயர் களங்கப்படும்படியான எதையும் கூறவில்லை) சஞ்சீவ் பட் கலந்துகொண்டதை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  உண்மையில் அதையொட்டிய வாரங்களில் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு சட்டம்- ஒழுங்கு கூட்டங்கள் நடைபெற்றன. பிப்.28 அன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமளவிற்கு மிகவும் சீனியர் இல்லையென்றால், பிறகு எவ்வாறு பிப்.27 கூட்டத்தில் கலந்துகொள்ள மட்டும் மிகவும் சீனியராக மாறினார்?

 

சஞ்சீவ் பட்டிற்கு என்ன தெரிந்திருக்கிறதோ, அந்த விஷயத்தை மோடி நம்பக மற்றதாக மாற்ற விரும்புகிறாரா?

சஞ்சீவ் பட், சிறப்புப் புலனாய்வுக் குழுவால் 2010 ஜனவரியில் அழைப்பாணை அனுப்பப்பட்ட பொழுது, அவர் குழுவினர் முன்பாக இரண்டு நாட்களாக வாக்குமூலம் அளித்தார்.

“நான் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கட்டிடத்தையும் அதன் சுற்றுச்சுவரையும் பார்வையிட்டபோது வீட்டுப் பொருட்களும், அழுகிக்கொண்டிருக்கும் மனித சதைக் துணுக்குகளும் கலந்தது போன்ற எரித்துக் கரியாக்கப்பட்ட குப்பைக் குவியலின் அருகில் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவைக் கண்டேன். நான் அதைக் கையிலெடுத்து அதன் மீது படிந்திருந்த கரிப் புகையை என் கைக்குட்டையால் துடைத்தேன்.

அந்தப் புத்தகத்தினுள், முதல் பக்கத்தின் மேல்புறத்தில் ஆசன் ஜஃப்ரி என்ற பெயர் அழகாக எழுதப்பட்டிருந்தது. சிலகணங்கள் அந்தப் பெயரை, அந்த அழகான கையெழுத்தைக் கண்டு அதிசயித்து அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நான் ஒருபொழுதும் அந்த ஜஃப்ரியை என் வாழ்வில் ஒரு முறை கூட நேரடியாகச்  சந்திக்கவோ, அறிந்திருக்கவோ இல்லையென்றாலும், அவர் கையெழுத்திலிருந்து அவர் ஒரு படித்த, பண்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிந்தது.” பக். 47 சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சொன்னது.

ஒரு இந்து வெறிக் கும்பல் 69 இஸ்லாமியர்களை இந்தக் கட்டிடத்தில் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர், குல்பர்க் சொசைட்டிக்குச் சென்றபோது, அவர் நேரில் கண்ட, நெஞ்சைப் பிளக்கும் காட்சியை பட் விவரித்தார். “இறந்தவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ஆசன் ஜஃப்ரியும் ஒருவர்.  அப்பொழுது அவரது வயது 64. அவரது உடலையும் மற்ற 37 பேருடைய உடலையும், ஒருபோதும், யாராலும் அடையாளங் காணமுடியாத அளவிற்கு வெட்டியும் எரித்தும் விட்டனர்.  வெறும் 31 பேருடைய உடல்கள் மட்டுமே, தீக்கிரையாகாமல் எஞ்சி நின்ற துணிகளை வைத்தும், எஞ்சியிருந்த வெட்டப்பட்ட உடல்களை வைத்தும் கண்டறியப்பட்டன.

உடனே என்னுடைய சிந்தனை என்னுடைய பள்ளிக்காலத்திற்குச் சென்றுவிட்டது.  அந்தக் காலத்தில் இணைய வசதி கிடையாது.  எந்த ஒன்றையும் குறிப்பெடுத்து சரிபார்க்க, நான் அருகிலிருக்கும் நூலகத்திற்கு சைக்கிளில் போக வேண்டும். மாணவனாக ஒரு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவை நான் சொந்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற  ஆசை எனக்கு இருந்தது.  இங்கே, அது என் முன்னால் அரைகுறையாக எரிந்த நிலையில், எரிந்து பொசுங்கிப்போன மனித உடல்களின் குப்பைகளுக்குள் கிடக்கிறது.” சில கணங்கள் கழித்து, “அங்கு அடித்த துர்நாற்றம் எனக்குக் குமட்டலை ஏற்படுத்தியது. பல பகுதிகளில் மண்ணின் மேற்புறம், எரிந்த மனித சதை மற்றும் கண்டதும் கடியதுமான பொருட்களால் ஆன, ஒரு கொழகொழப்பான மரக்கரி கூழ்போல் இருந்தது. என்னுடைய ஷூவின் அடிப்பகுதி அதனுடன் ஒட்டிக் கொண்டது. அதைக் கழுவிய பின்னும்கூட அந்த ஷூக்களை நான் அணியவில்லை.”

சஞ்சீவ் பட் கூறுவதற்கு வேறு விஷயங்களும் இருந்தன.  நம் செயலின் தீமை குறித்த எந்த அச்சமும் இன்றி வன்முறைக் கும்பல்கள், நகர் முழுவதும் திகிலுணர்வைக் கட்டவிழ்த்து விட்டுச் சென்றதைக் காண மிகுந்த வேதனையாக இருந்தது.

“கோத்ரா ரயில் நிகழ்விற்கு 2 நாட்களுக்குப் பின் நான் சரஸ்புரா வட்டாரத்தைக் கடந்து கொண்டிருந்தேன். எனக்கு வலது புறத்தில் ஒரு வன்முறைக் கும்பல் மன்ஜா மசூதி என்ற மசூதியை இடித்து அழிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.  நான் எனது ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னேன்.  நான் காரை விட்டு இறங்கிய உடனேயே அந்தக் கும்பல் கலையத் தொடங்கியது.”

காவல்துறையும், வன்முறைக் கும்பலும் ஒன்றாக இயங்க முடியாது.  ஆனால் 2002 கலவரத்தின்போது மிகச்சரியாக அதுதான் நடந்தது.  குஜராத் காவல்துறையின் ஒரு பிரிவினர், கண்டுகளிக்கும் கூட்டமாக உருமாறி இருபுறமும் நிற்க, இந்து வெறிக் கும்பல்கள் மனிதர்களைக் கொன்று குவிக்கும் கேளிக்கையை நடத்தின. “அந்தக் கட்டிடம் அழிவு நிலையை எட்ட பல பத்தாண்டுகள் பிடிக்கும். ஆனால் அந்த குல்பர்க் சொசைட்டி சில மணிநேரத்தில் உடைந்து நொறுங்கிக் கிடந்தது.”

சஞ்சீவ் பட் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கூறியவற்றில் சில தட்டச்சு செய்யப்பட்டு ஆவணமாக்கப்பட்டு, தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கூறப்பட்டு, ஆவணப்படுத்தப்படாத விஷயங்கள்தான், குஜராத் கலவரத்தின் உண்மைக் காட்சியை நம்முன் கொண்டுவரும்.

‘தெஹல்கா’வின் சென்ற வார (பிப் 12, இதழில் ‘புகைந்து கொண்டிருக்கும் துப்பாக்கி இங்குதான் இருக்கிறது’ என்ற) பிரதான கட்டுரையில் (சிறப்புப் புலனாய்வுக் குழு எவ்வாறு மோடி, மூத்த அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதை) மோடி, அவரது அரசாங்கம் இரண்டும் அபாயகரமான மதச் சாய்வு மனப்பான்மையோடு, கலவரத்தின் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டன. காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சட்டப் புறம்பாக அதிகாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டதையும், நடுநிலையாக உள்ள அதிகாரிகளை எவ்வாறு துன்புறுத்தியது, சங்பரிவார் உறுப்பினர்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக நியமித்தது, மிக இக்கட்டான நிலையில் நிகழ்ந்த சட்டம் – ஒழுங்கு கூட்டத்தில் காவல் துறையினரின் வயர்லெஸ் தகவல்களையும் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகளையும் அழித்தனர் என்பது போன்றவற்றை மிகத் தெளிவாக அடித்துக் கூறும் சாட்சி ஆவணங்கள் இருந்தபோதும் கூட சிறப்புப் புலனாய்வுக் குழு எவ்வாறு மோடி, மூத்த அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இருந்தாலும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், இவையெல்லாம் மோடியை மேலும் கூடுதலாக ‘சட்டப்படி’ விசாரிக்கப் போதுமான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறது.

சிறப்புப் புலனாய்வுக் குழு, மூத்த நிர்வாகத்தினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்துக்கள் தங்களது கோபத்தைக் காண்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக, மோடிமீது கூறப்படுகிற மிக முக்கியமான குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்க முடியாது என்று கூறுகிறது. விசாரணை அதிகாரி மல்ஹோத்ரா, பிப். 27 அன்று அப்படியொரு கூட்டம் உண்மையிலேயே நடந்திருக்கிறது. ஆனால் அதில் கலந்துகொண்ட எந்த ஒரு அதிகாரியும், அந்தக் கூட்டத்தில் எல்லோரும் அறியும்படியாக  என்ன பேசினார்கள் என்பதை நிரூபிக்கத் தயாரில்லாததே, சஞ்சீவ் பட்டைக் காப்பாற்றியது (இரண்டுபேர் பேசிய விஷயங்கள் மறந்து விட்டதாகக் கூறினர்.  நாலுபேர் மோடி அதுபோன்றதொரு வாக்கியத்தைக் கூறவில்லை என்று மறுத்தனர்.  ஒருவர் அந்தக் கூட்டத்தில் தான் பங்கேற்றதையே மறுத்தார்).

இதில் பல அதிகாரிகள் எதையுமே மனதிலிருந்து பேசவில்லை. ஏனெனில், ஒன்று தனக்கு விருப்பமான பதவியை மோடி அரசாங்கத்தால் பெற்றிருப்பார்கள் அல்லது அதே பணியில் இன்னும் தொடர்ந்து நீடிப்பதால் அதில் வரும் இடையூறுகளை நினைத்து அஞ்சலாம் என்கிறார் மல்ஹோத்ரா.

மல்ஹோத்ராவும் தனது அறிக்கையின் 149வது பக்கத்தில் “அப்போதைய துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட், ஆவணப்படுத்தப்படாத வாய்மொழிச் சாட்சியத்தில் முதலமைச்சர் அந்த வார்த்தைகளை உச்சரித்தார்” என்று குறிப்பிட்டுள்ள இந்த பயங்கரமான தகவலை உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்யுமானால், மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

இது சில அத்தியாவசிய அவசர கேள்விகளை எழுப்புகிறது. ‘ஆவணப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட முறையில்’ உண்மையில் சஞ்சீவ் கூறியது என்ன? ஏன் அதை ஆவணப்படுத்தப்பட வேண்டாம் என முடிவு செய்தார்? மேலும் அதை ஆவணப்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படும் விளைவு என்ன? முதலில், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் குறியது என்னவென்று பார்ப்போம்.

“மக்களின் மனதில் மிகப்பெரும் கோபம் உள்ளது – இந்த முறை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஒரு சமநிலை அணுகுமுறையைக் கடைபிடிக்க முடியாது. மக்களின் கோபம் வெளிப்படுத்தப்படுவதற்கு அனுமதியளிக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது.”  சஞ்சீவின் கூற்றுப்படி அந்தக் கூட்டத்தில் மோடியால் பேசப்பட்ட வன்முறையைத் தூண்டுகிற, தீ வைக்கக் காரணமாயிருந்த வார்த்தைகள் இவைதான். அதைப் பிறகு பட் தனது அந்தரங்க குறிப்பேட்டில் குறித்து வைத்து, கலவர காலத்திலும் பாதுகாத்து வந்தார்.

இதை பட் வெளிப்படுத்தியபோது, மல்ஹோத்ரா தனது இருக்கையிலிருந்து துள்ளி எழுந்து விட்டார். ‘‘நீங்கள்தான் உண்மையைப் பேசுவதற்கு முன்வந்த முதல் நபர்’’ என்று அவரது கைகளைப் பற்றி, அவரைத் தனது மூத்த அதிகாரியான பரம்வீர் சிங்கின் அறைக்கு அழைத்துச் சென்றார்.  சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குநராக இருந்த பரம்வீர் சிங், மோடிக்கு எதிரான முழு விசாரணையை மேற்பார்வை செய்பவராக இருந்தார். அவரும், உண்மையைப் பேசி தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்தவரைக் கண்டு மகிழ்ந்தார்.

பிறகு சஞ்சீவ் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தரைத் தளம் பற்றி விவரித்தார்.  பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பாண்டேயா அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், அவர் முதலமைச்சரின் பங்களாவில் இருந்த மற்றொரு அறையில், கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது இருந்தார் என்பதையும் மல்ஹோத்ராவிடமும், சிங்கிடமும் கூறினார்.

(ஏறத்தாழ அந்தக் கலவரங்கள் நடந்து முடிந்து இரண்டரை மாதங்கள் கழித்து, மே 13, 2002 அன்று பாண்டேயா, நீதியரசர் பி.பி.சாவந்த் மற்றும் நீதியரசர் ஹோஸ்பர்ட் சுரேஷ் என்ற இரு நீதிபதிகளின் முன்பாக வாக்குமூலம் அளித்தார். அதில் பிப்.27, 2002 அன்று இரவு, மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், ‘இந்துக்களால் தீமையான விளைவுகள் நடக்கும்.  காவல்துறையினர் அதில் தலையிடக் கூடாது என்பதை மோடி மிகத் தெளிவாகக் கூறினார்’ என்று வாக்குமூலம் அளித்தார்.  சில மாதங்களுக்குப் பிறகு அவர் விசித்திரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.)

நீதிபதிகள் சாவந்த் மற்றும் சுரேஷ் இருவரும் அவர்கள் முன் அளிக்கப்பட்ட பாண்டேயாவின் மோடியைக் குற்றம்சாட்டும் சட்டபூர்வ சான்றறிக்கையை, சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக சமர்ப்பித்து அதை நிரூபித்திருக்கிறது.  இப்பொழுது, சஞ்சீவ் பட்டின் நடந்த நிகழ்வுகள் பற்றிய கூற்று, மோடி ஏற்பாடு செய்திருந்த இரண்டு கூட்டங்களில் – ஒன்று நிர்வாகரீதியானது, மற்றது அரசியல்ரீதியானது – ஒருபுறம் வி.ஹெச்.பி. மற்றும் பா.ஜ.க. தலைவர்களுக்கு கலவரம் செய்யக்கூடிய கும்பலைத் தயார் செய்யும்படியும், மறுபுறம், அவற்றைக் கண்டும் காணாததுபோல் காவல்துறை எந்திரத்தை இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர் என்பதும் (27, பிப்ரவரி அன்று கூட்டம் நடந்ததற்கான உறுதியான சாத்தியங்கள் இருப்பதும்) இருக்கும் ஆதாரங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

(2007-ல் அப்போதைய பா.ஜ.க கோத்ரா சட்டமன்ற உறுப்பினரும், பஜ்ரங்தள் தலைவர்களில் ஒருவருமான ஹரேஷ் பட் என்பவரும் ரகசிய விசாரணையின்போது, மோடி மூன்று நாட்கள் ரத்த வெறியாட்டம் போடுவதற்கு, கலவரக் கும்பல்களுக்கு அனுமதியளித்தார் என்ற மற்றொரு  விலாவாரியான அழுத்தமான சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.  மோடி அரசாங்கத்தின் நானாவதி – ஷா கமிஷனில் சிறப்பு வழக்குரைஞராக இருந்த அர்விந்த் பாண்டேயா, மோடியின் தலைமையிலான வழிகாட்டுதல்தான் கோத்ரா சம்பவத்தை சாத்தியப்படுத்தியது என்று கூறியது உளவு கேமராவில் பதிவாகியுள்ளது.)

சஞ்சீவ் பட் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம், அந்தக் கூட்டத்தில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் கூறினார். ஆனால் அதை ஆவணப்படுத்த சம்மதிக்கவில்லை.  காரணம், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை என்பது வெறும் முதல் கட்ட விசாரணை மட்டுமே, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் அமைந்த குற்றவியல் புலனாய்வு அல்ல என்பதுதான்.

“அவர் அந்தக் கூட்டத்தில் ஒரு புலனாய்வுத் துறை அதிகாரி என்ற முறையில் கலந்துகொண்டு, அவருடைய நம்பிக்கையின் அடிப்படையில், அந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை அப்படியே வெளியில் பகிரங்கப்படுத்துவது என்பது அரசு அலுவல் அற அடிப்படையில் சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்.  எப்படி இருந்தாலும் அவர் கடமையுணர்வோடு தனது நினைவுகளில் உள்ளவற்றைத் தன்னால் இயன்றவரை மீட்டெடுத்து, சட்டக் கடப்பாடு ஏற்படும்போது அதைக் கூறுவார்’’ என்று மல் ஹோத்ரா தனது அறிக்கையில் கூறியுள்ளார் (சஞ்சீவ் பட் தற்போது மாநில ரிசர்வ் காவல் பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி.யாக உள்ளார்). இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பிற்காலத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், சஞ்சீவ் பட் ஆரம்பத்தில் கூறியவற்றை, சிவில் நடைமுறை சட்டப் பிரிவு 161ன்  அடிப்படையில் ஒரு முழுமையான ஆவணமாக இணைக்கப்படுமளவிற்கு விரிவு செய்துகொள்ள முடியும் என்பதுதான்.

இந்த ஒரு வாக்குமூலம் நிரூபிக்கப்பட்டாலே, மோடிக்கெதிரான குற்றச்சாட்டுக்குப்  போதுமானது என்றாலும் கூட, ஆவணப்படுத்தப்படாத முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் மேலும் சில மோசமான விஷயங்களைக் கூறியுள்ளார்.

தற்போது உச்சநீதிமன்றத்திலுள்ள, சிதிலமடைந்த எழுத்து வாக்குமூலத்தில் சபர்மதி துயரச் சம்பவத்திற்குப் பிறகு, குஜராத்தின் அகமதாபாத்திலும் வேறு சில மாவட்டங்களிலும் வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் உள்பட மற்ற சில இந்துத்துவ அமைப்புகள், இனக் கலவர வன்முறையைத் தூண்டவுள்ளன என்பதைக் குறிப்பிடுகின்ற புலனாய்வுத் தகவல்களால் மாநிலப் புலனாய்வுக் குழு மூழ்குமளவிற்குத் தகவல்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் மேலும் மெக்ஹனி நகரிலும், குல்பர்க் சொசைட்டியை சுற்றிலும், வன்முறைக் கும்பல்கள் தயார்படுத்தப்பட்டு வருவதைக் குறித்த தகவல்களை மாநிலப் புலனாய்வு நிறுவனம் தொடர்ச்சியாகப் பெற்று, அதைக் களப் புலனாய்வு அலுவலகத்திற்கு அப்போதைய டி.ஜி.பி.யாக இருந்த கே.சக்ரவர்த்திக்கும், அதன்பிறகு அப்போதைய காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டேவிற்கும்  அனுப்பிக் கொண்டே இருந்தது என்பதையும் கூறினார்.

ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஆவணப்படுத்தப்படாத முறையில் கூறிய விஷயங்கள் மேலும் நமக்கு அதிர்ச்சியளிக்கவல்லவை.

சஞ்சீவ் பட், இந்தத் தகவல்களை டி.ஜி.பி., கமிஷனரிடம் மட்டும் அனுப்பவில்லை என்றும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும் நேரடியாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.

‘‘தொடக்கத்தில் குல்பர்க் சொசைட்டிக்கருகில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்த தயார் ஆகிக் கொண்டிருப்பது பற்றிய அறிக்கைகளை டி.ஜி.பி.சக்ரவர்த்திக்கும், ஆணையர் பி.சி.பாண்டேவிற்கும் தொடர்ச்சியாக அனுப்பினேன். ஆனால், பாண்டே அதைப் பொருட்படுத்தவேயில்லை என்பதைப் பிறகுதான் அறிந்தேன்’’ என்கிறார் பட்.

‘‘பிறகு, டி.ஜி.பி. சக்ரவர்த்தியின் அலுவலகத்திற்குச் சென்று பாண்டேவிடம், குறைந்த பட்சம் நரோடாவிலும் மெக்ஹனி நகரிலும் ஊரடங்குச் சட்டத்தையாவது அமல்படுத்த வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.  பாண்டே ஊரடங்குச் சட்டத்தை முற்பகல் அறிவித்தார்.  ஆனால் அந்த ஆணை பேப்பரில் மட்டுமே இருந்தது.  அடிப்படையில் அது ஒருபோதும் நிறைவேற்றப்படவேயில்லை.  குல்பர்க்கில் இருந்த வன்முறைக் கும்பல் மாலை 4.30வரை கலையவேயில்லை’’ என்றார் பட்.

‘‘ஊரடங்குச் சட்டம் ஒருபோதும் அமல்படுத்தப்படாததால், குல்பர்க்கிலுள்ள வன்முறைக் கும்பல்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது’’ எனத் தொடர்ந்தார்.  இறுதியாக, “நான் பாண்டேவைப் பார்த்தபோதும், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேயில்லை. நான் சக்ரவர்த்தியைத் தொலைபேசி மூலமாக பாண்டேவிடம் பேசவைத்தேன். ஆனால், அதன் பிறகும் கூட பாண்டே செயல்பட விரும்பவில்லை என்கிற அதிர்ச்சிதான் எனக்குக் கிடைத்தது.

இந்த அடிப்படையிலிருந்துதான் நான் மோடியின் அந்தரங்கச் செயலரான ஓ.பி.சிங்கைத் தொலைபேசியில் அழைத்து, அவரிடம் குல்பர்கிலுள்ள நிலைமையை  விளக்கி, காவல்துறை உடனடியாகச் செயலில் இறங்காவிட்டால், வெறிக்கும்பல் அக்குடியிருப்புக்குத் தீ வைத்து, முன்னாள் காங்கிரஸ் எம்பி ஆசன் ஜஃப்ரி உள்பட பல டஜன் கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்று விடுவார்கள் என்றும் அதனால் முதலமைச்சருக்குத் தொடர்பு கொடுக்குமாறும் கூறினேன்” – பட்.

சஞ்சீவ் பட் – மோடியின் செயலருக்குத் தொலைபேசிய பிறகு, நகர காவல்துறை நடவடிக்கை எடுத்து விடும் என்று சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால், அச்சுறுத்தும் வகையில் அதன் பிறகும் எந்த நடவடிக்கையும்  இல்லை. “இந்தக் கணத்தில்தான், முதல் நாள் இரவு மோடி சொன்னதன் பொருளை முழுமையாக அறிந்தேன்.  அந்தத் தகவல் காவல்துறை இயந்திரத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி உள்ளது என்பதையும் அறிந்தேன்” என்கிறார் பட்.  சஞ்சீவ் பட்டைப் பொறுத்தவரை சக்ரவர்த்தி நடவடிக்கை எடுக்க விரும்பினார்,  ஆனால் கையறு நிலையில் இருந்தார்.  பாண்டேவிற்குக் கீழிருந்தது நகர காவல்துறை. ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

மற்ற அதிகாரிகள், அந்த விதிவயப்பட்ட, சி.எம். வீட்டில் நடந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய கேள்விகளுக்கு, மழுப்பலாகப் பதில் அளித்தனர்.  சஞ்சீவ் பட் ஒருவர் மட்டுமே, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உண்மை அறியும் தாகத்துக்கான ஒரே நம்பிக்கை. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் பட் வாக்குமூலம் அளித்த 2010 ஜனவரிக்கும், உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் 2010 மே மாதத்திற்கும் நடுவில் பல விஷயங்கள் அடியோடு மாறிவிட்டன.  2010 பிப்ரவரியின் கடைசி வாரத்தில் பரம்வீர் சிங், சில தனிப்பட்ட காரணங்களைக் கூறி புலனாய்வுக் குழுவிலிருந்து விலகிக்கொண்டார். மே 2010ல் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த 600 பக்க அறிக்கையை மல்ஹோத்ரா மட்டுமே தனியாகத் தயார் செய்தார்.  மேலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவேண்டும், முழுவீச்சில் புலனாய்வைத் தொடங்க வேண்டும் (இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு செய்யக்கூடும் என சஞ்சீவ் பட் நினைத்தது போல) என்று சிபாரிசு செய்வதற்குப் பதிலாக, எதை ஆதாரமாகக் கொண்டு கண்டறிந்தார்களோ அந்த ஆதாரமே முரணாக உள்ளது என்ற முடிவுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு வந்திருந்தது.

ராகவனும், மல்ஹோத்ராவும் மோடி நியாயமற்றவர், வகுப்புவாதி,  மதவெறி பிடித்தவர், அறமற்றவர் என்று அலுவலகரீதியாகக் கூற முடியாது.  ஆனால் விசித்திரமான முறையில் மோடிக்கு எதிராக மேலும் கடுமையான புலன் விசாரணை அவசியம் என்று வலியுறுத்தப் போதுமான அடிப்படை இல்லை என்று கூறியுள்ளனர். மோடியின் கட்சி சார்பற்ற, நேர்மையான நடத்தை அவரால் ஆட்சி செய்யப்படும் மாநிலத்தில், நூற்றுக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இஸ்லாமியர்களாகப் பிறந்ததைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாத நிலையில் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பதை அவர்கள் மறந்து விட்டது போல் தெரிகிறது.

சிறப்புப் புலனாய்வுக் குழு பதிலளித்தே ஆகவேண்டிய பல கேள்விகள் உள்ளன.  ஏன் சஞ்சீவ் பட் ஆவணப்படுத்தப்படாத வகையில் கூறிய பல விஷயங்களை, எதிர்காலத்தில் பயன்படுத்தும் நோக்கத்துடன் எழுத்தில் ஆவணமாகப் பாதுகாக்கவில்லை?  உச்சநீதிமன்றத்திற்கு சஞ்சீவ் பட் ஆவணப்படுத்தப்படாத முறையில் கூறிய அனைத்தையும் தெரிந்துகொள்ள உரிமையில்லையா?  மல்ஹோத்ரா ஏன் அதன் சிறு பகுதியை மட்டும் குறிப்பிடவேண்டும்? அதேபோல், மல்ஹோத்ரா சஞ்சீவ் பட் அளித்த அனைத்து தகவல்களையும் பயன்படுத்தி, அவ்விசாரணையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றாரா? அவ்வாறில்லையெனில், அவரிடம் வாக்குமூலம் வாங்கவென 2 நாட்கள் ஒதுக்கப்பட்டதன் நோக்கமென்ன? ஆசன் ஜஃப்ரியின் மனைவி ஜகியாவின் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, உயர் பதவி அதிகார வர்க்க அதிகாரி மற்றும் காவலதிகாரி தவிர, சஞ்சீவ் பட்டின் நிகழ்வுகள் குறித்த விவரணையை அழிக்க முடியாத, உறுதியான சாட்சியமாக மாற்ற மல்ஹோத்ரா என்ன முயற்சிகள் எடுத்தார்? அவர் காவல் உயர் அதிகாரியாய் இருந்து இறங்கி அடி மட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறியும் வகையில் சாதாரண காவல் அலுவலர்களிடம் ஏன் விசாரிக்கவில்லை?

‘தெஹல்கா’, ஒரு தனிப்பட்ட சுயேச்சை சாட்சியத்தை  வைத்து பிப். 27ம் தேதி கூட்டம் குறித்து சஞ்சீவ் பட் கூறுவதற்குப் பலப்படுத்தும் சாட்சியத்தை, பல வழி முறைகளில் கண்டறிந்துள்ளது.  ஆனால் அதைப் பெறும் முன்பு, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் அகமதாபாத் நகரங்களில் மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட நேரத்தில், திரைக்குப் பின்னால் அதிகாரத்தின் படிநிலையில் என்னதான் நடந்தது என்று பார்ப்போம்.

சஞ்சீவ் பட் தான், மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் மிக மிக மூத்த துணை ஆணையர் (அவருக்கு அடுத்த இரண்டுபேர் உள்ளனர்). அவர் மிக நீண்ட காலமாக அதில் பணிபுரிபவர். அவர் உள்துறை பாதுகாப்புக் குழாமின் பொறுப்பாளர்.  உளவுச் செய்திகளை மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரிகள், உள்துறை மந்திரிகள் மற்றும் முதலமைச்சருக்கு அனுப்புமுன் அவற்றைச் சேகரிப்பது, தொகுப்பது, அவற்றை ஆய்வு செய்வது போன்றவைதான் அவரது பணி.

பிப். 28 அன்று, மாநில உளவுப் பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கான்ஸ்டபிள்கள் நரோடா கோவன், நரோடா பாட்டியா மற்றும் மெக்ஹனி நகர் (குல்பர்க் சொசைட்டி அமைந்துள்ள இடம்) ஆகிய இடங்களில் நிலைமை மிக வேகமாக சீர்கேடடைந்து கொண்டுள்ளது என்பது பற்றிய செய்திகளை, தொடர்ச்சியாக மாநிலப் புலனாய்வுக் குழுவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

மாநில உளவுப் பிரிவு முன்பாக, சஞ்சீவ் பட் வாக்குமூலம் அளித்ததன்படி, மாநிலப்  புலனாய்வுத் துறை, காவல்துறை கண்காணிப்பாளரான பர்வத் என்னும் கடைசிப் பெயரைக் கொண்டவர், மெக்ஹனி நகரின் உளவுச் செய்திகளைப் பெறும் பதவியில் இருந்தார் (சஞ்சீவ் பட் பர்வத்தின் முதல் பெயரை மறந்திருந்தார். ஆனால் மல்ஹோத்ராவிடம், மாநில சிறப்புப் புலனாய்வுத் துறையிடம் அலுவலக ரீதியாக விசாரித்து, அவரது முதல் பெயரைப் பெறுவது எளிது என்று கூறியுள்ளார்). சஞ்சீவ் பட்டைப் பொறுத்தவரை, குல்பர்க் சொசைட்டியில், நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கும் செய்தியைத் துளியும் பிசகாது அப்படியே அவருக்கு பர்வத் அனுப்பிக் கொண்டிருந்தார்.

குல்பர்க் சொசைட்டியின் வெளிப்புறத்தில், வி.ஹெச்.பி.யும் பஜ்ரங்தள்ளும் பல மணிநேரமாக இஸ்லாமியருக்கு எதிரான கீழ்த்தரமான கோஷங்களை எழுப்பி, அந்த வன்முறைக் கும்பலைக்  கொலை வெறியாட்டத்திற்குத் தயார்படுத்திக் கொண்டு இருப்பதாக சஞ்சீவ் பட்டிடம், பர்வத் தொலைபேசியில் கூறியுள்ளார். வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பலர் மெக்ஹனி நகரைச் சார்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் டெம்போக்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வேறு பல பகுதிகளிலிருந்து கலவரக்காரர்களைக் கொண்டு வந்து அவர்களோடு சேர்த்துக் கொண்டிருந்தனர்.  பஜ்ரங்தள்ளைச் சார்ந்த பெரும்பாலானோர், சூலாயுதத்தைத் தங்கள் இடுப்பில் செருகியிருந்தனர்.  சிலர் கைத் துப்பாக்கி வைத்திருந்தனர்.  ஆனால் எரிவாயு சிலிண்டர்களும், பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட கேன்களும்தான் மிக முக்கியமான ஆயுதங்களாகப் பயன்பட்டன.

காங்கிரஸ் எம்.பி. குடியிருக்கும் குல்பர்க் சொசைட்டியைப் பாதுகாப்பான இடமாகக் கருதிக் கொண்டு, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் அங்கு தஞ்சம் புகுந்தனர். பல மணி நேரமாக ஏதும் செய்ய இயலாத நிலையில், தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், காவல்துறைக்கும் தங்களைக் காப்பாற்ற வேண்டி தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தனர்.  ஆனால் உள்ளூர் காவல்துறை, அமைதியான பார்வையாளர்களாக இருந்தது.  சில நேரங்களில், அது அந்த வெறிக்கும்பலைச் சினமூட்டி வன்முறையில் ஈடுபட வைத்தது.  ஏறத்தாழ பிற்பகல் 2 மணி, காவல்துறை நான்கு மணிநேரத்திற்கு முற்றிலுமாக முடக்கப்பட்ட பிறகு, தைரியம் பெற்ற வெறிக் கும்பல் கட்டிடத்தைத் தாக்கியது.

‘‘பர்வத்தின் கூற்றுப்படி, கலவரக்காரர்கள் முதலில் அந்த இடத்தைச் சூறையாடினர். ஒரு சில இடங்களில் பாலியல் பலாத்காரமும் நடந்தேறியது என்றும் அவர் தெரிவித்தார்.  பர்வத் அந்த சம்பவ இடத்திலிருந்து கொடுத்த தகவலின் அடிப்படையில், நாங்கள் அகமதாபாத் காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு அந்தத் தகவலை அளித்தோம்’’ என்று சஞ்சீவ் பட், மல்ஹோத்ராவிடம் தெரிவித்தார்.

‘‘பிற்பகல் 2.30 க்கு, மீண்டும் பர்வத் என்னைத் தொலைபேசியில் அழைத்து, அந்தக் கும்பல் ஆசன் ஜஃப்ரியை வெளியே இழுத்து வந்து, சான்ட்ஷாவால் (குஜராத்தில் தெருநாயைப் பிடிக்கப் பயன்படும் ஒரு கருவி) அவருடைய தலையைச் சுருக்கிட்டு, சிறிது நேரம் அந்தக் கும்பல் அவரைச் சுற்றி நடக்க வைத்தது. இரும்புக் கம்பியால் அடித்து உதைத்தது.  பிறகு சான்ட்ஷாவை நீக்கி விட்டு, கண்ட துண்டமாக வெட்டி எறிந்தனர். கடைசியில் அவரை ஒரு சதைக்குவியலாகக் குவித்து அதில் தீ வைத்தனர்’’ என்று சஞ்சீவ் மல்ஹோத்ராவிடம் தெரிவித்தார்.

நரேந்திர மோடியிடம், மாநிலப் புலனாய்வுக் குழு கேள்வி கேட்டபோது, ‘குல்பர்க் சொசைட்டியைக் கும்பலாக வந்து தாக்குதல் நடந்தது பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா? அவ்வாறெனில் யாரால், எப்பொழுது, அத்தகவல் அளிக்கப்பட்டது? அந்தப் பிரச்சினைக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

மோடியின் பதில்:  என்னுடைய நினைவுக்கு எட்டிய வரையில், மெக்ஹனி நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியிலும், நரோடா பாட்டியாவிலும் நடந்த தாக்குதல் பற்றி, இரவில் நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு மறு ஆய்வுக் கூட்டத்தில்தான் எனக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

எங்கே உண்மை இருக்கிறது? சஞ்சீவ் பட், அவரே தனிப்பட்ட முறையில் மோடியின் அந்தரங்கச் செயலர் ஓ.பி.சிங்கிற்கு, தொலைபேசியில் குல்பர்க் இனப்படுகொலை பற்றி தகவல் அளித்ததாகக் கூறியிருக்கிறார். இதில் முக்கியமாக நினைவில்கொள்ள வேண்டியது என்னவென்றால், மோடி முதலமைச்சராக 2001ல் பதவியேற்றதிலிருந்து, மாநில உள்துறை அமைச்சர் பதவியிலும் இருந்து வருகிறார். இந்த அடிப்படையில் குஜராத் காவல்துறை, மாநில உளவு நிறுவனம் இரண்டும் நேரடியாக அவரது கட்டுப்பாட்டின்கீழ்தான் இயங்கும் என்பதுதான்.

பிப்.28, குல்பர்க் சொசைட்டி இனப்படுகொலை நடந்ததன் விளைவாக, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, பேராபத்தில் சிக்கிய மக்களின் உதவி கோரும் தொலைபேசி அழைப்புகளால் மூழ்கியது.  மாநிலப் புலனாய்வுக் குழுவிடம் இருந்து பெறப்பட்ட சில வயர்லெஸ் செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.

12:20 – ஏறத்தாழ 10 ஆயிரம் பேரைக்கொண்ட வெறிபிடித்த கும்பல், குல்பர்க் சொசைட்டியை சுற்றி வளைத்து, கல்லெறிந்தும், தீவைக்கவும் முயற்சி செய்து கொண்டுள்ளன என்ற செய்தியை மெக்ஹனி நகர் காவல்துறை கண்காணிப்பாளர் கே.ஜி.எர்டா, அகமதாபாத் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளார்.  எர்டா மேலும் சில துணைப் படைகள் தேவைப்படுகிறது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

12:38 –  மெக்ஹனி நகருக்கு அருகில் நின்றிருந்த, நடமாடும் காவல்துறை வேன் ஒன்று அகமதாபாத் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, குல்பர்க் சொசைட்டி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான நபர்களைக் கொண்ட வெறிக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அனுப்பியுள்ளது.

14:05 – இரண்டாவது செக்டரைச் சேர்ந்த, இணை ஆணையர் எம்.கே.டாண்டன், ஆஸன் ஜஃப்ரி வெறிக்கும்பலால் சூழப்பட்டுள்ளார்.  அங்கு மேலும் கூடுதலான காவல் படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று செய்தி அனுப்பினார்.

14:14- 10ஆயிரம் பேரைக் கொண்ட வெறி கொண்ட கும்பல், குல்பர்க் சொசைட்டிக்குத் தீ வைக்கவுள்ளனர்.  ஏ.சி.பி., டி.சி.பி. மற்றும் கூடுதல் படை இங்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டுமென்று கே.ஜி. எர்டா மற்றொரு தகவலை அகமதாபாத் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார்.

14:45 – கே.ஜி.எர்டா, குல்பர்க் சொசைட்டி எல்லா பக்கத்திலும் வெறிக் கும்பலால் சூழப்பட்டு அவர்கள் அதைத் தீக்கிரையாக்கத் தயார் நிலையில் உள்ளனர் என்று  மற்றுமொரு செய்தி அனுப்பினார்.

15:45 – குல்பர்க் பகுதியில் வன்முறை நிகழ்வு எதுவும் நடந்ததா (அந்த நேரம் இனப்படுகொலை முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தது) என்று விசாரித்து டாண்டன் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு செய்தி அனுப்பினார்.

இந்த சிறு செய்திகளே, என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைக் காவல்துறை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறது என்பதையும், தங்களுக்குள் செய்திகளை அனுப்பிக் கொண்டதைத் தவிர வெறிகொண்ட கும்பலைக் கலைக்க எதுவும் செய்யவில்லை என்பதையும் நிரூபிக்கிறது.  காவல் கட்டுப்பாட்டு அறையின் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து போனதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை கூறுவதும் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியுள்ளது. ‘கலவரத்தின்போது நடந்த, காவல்துறை வயர்லெஸ் உரையாடல்கள் அனைத்தையும் குஜராத் அரசாங்கம் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.’

அரசு, அலுவல் ரீதியான ஆவணங்களை அழிப்பது என்கின்ற இந்த ஒரு ஆதாரம்  போதாதா, மேலும் புலன் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்கு?

பகல் 12.30 லிருந்து 3.45 வரை எந்தப் புது காவல் படையும் அனுப்பப்படவில்லை.  டாண்டன் மாலை 4.30க்குத்தான் உடல்களை அப்புறப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றார். குல்பர்க் சொசைட்டி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு எர்டாமீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. டாண்டன் மற்றும் அப்போதைய டி.சி.பி. ஆக இருந்த பி.பி.கோண்டியா (‘விருப்பப்பட்டே இனப்படுகொலை நடக்க அனுமதி அளித்தனர்’ என்ற அடிப்படையில்) இருவர் மீது குற்றஞ்சாட்டி, சிறப்புப் புலனாய்வுக் குழு அவர்களது இனப்படு கொலைக்கான பங்களிப்பை மேலும் புலன் விசாரணை செய்து வருகிறது. ஆனால், அந்த நேரத்தில் காவல்துறை ஆணையராக இருந்த பி.சி.பாண்டே மீது, சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றஞ்சாட்டாதது விசித்திரமாக உள்ளது. இருந்தாலும், இங்குதான் வெளிப்படையான ஒரு கேள்வி இருக்கிறது. வெறிகொண்ட கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகிக் கொண்டுள்ளது பற்றி உள்ளூர் காவல்துறையிடமிருந்தும், மாநில  உளவுப் பிரிவிடம் இருந்தும் அறிக்கைகள் தொடர்ச்சியாக ஆறாகப் பெருகி வந்தபோது பாண்டே என்ன செய்தார்?

சிறப்புப் புலனாய்வுக் குழு பெற்று, மேற்கோள் காட்டியிருக்கும் ஒரு சில வயர்லெஸ் செய்திகள், பாண்டே ஒரு சில அதிகாரிகளிடம் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர்கள் தன் உத்தரவைக் கடைப்பிடித்தார்களா என்பதை ஒருபோதும் கவனிக்கவில்லை என்றும், அவரே கடைப்பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றன.  இந்த விஷயம், பாண்டே பற்றி சஞ்சீவ் பட் கூறிய, உளவுச் செய்திகளின் மீது வேண்டுமென்றே எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்கிற விஷயத்துடன் இணைக்கப்பட்டு, பாண்டேவின் குற்றத்தன்மையை மேலும் நெருக்கிப் பிடிக்கிறது.

ஒளிவு மறைவற்ற, தெளிவான உண்மை ஒன்றும் உள்ளது. மூத்த அதிகாரிகளோ கூடுதலாகக் காவலர் படையோ சம்பவ இடத்திற்கு ஏன் செல்லவில்லை?

பாண்டேவும், பிப்.27 அன்று முதலமைச்சர் வீட்டில் நடைபெற்ற, அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். நரோடா மற்றும் குல்பர்க்கில் படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது, முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து ஏறத்தாழ 15 அழைப்புகள் பாண்டேவுக்கு வந்துள்ளன. இந்தக் கொடூரப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது பாண்டே முதலமைச்சரிடமும் அவரது தளபதிகளிடமும் எந்த விஷயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார் என்ற கேள்வி எழுவது இயல்பானது தானே? அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட ஒரு மாநிலத்தில், முதலமைச்சர், குடிமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கும்படியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் என்று கேட்டிருக்க வேண்டும்.  தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

மோடி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின்போது கூறியது போல், படுகொலைகள்  நடந்தது குறித்து அடுத்த நாள் இரவு வரை எனக்குத் தெரியாது என்று கூறினால், அவரை மதவாத மனப்பான்மை கொண்டவர் என்றோ அல்லது ஆட்சி செய்யத் தகுதியோ, திறமையோ அற்றவர் என்றோ ஒருவர் குற்றம் சாட்டலாமா?

நமது ஆர்வத்தை தூண்டும்படியான மற்றொரு விஷயம் என்னவென்றால், பாண்டே 2009ல் ஓய்வு பெற்ற பிறகு மாநில மின்சார ஆணையத்தின் தலைவராகப் பணியமர்த்தப்பட்டார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் நம்பத்தகுந்த தகவலின்படி சஞ்சீவ் பட், நேரடியாக அறியப்பட்ட விஷயங்களைத் தவிர, கலவரத்தின்போது தயாரிக்கப்பட்ட சில உளவு அறிக்கைகளையும் மாநில உளவுக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

பலரை வன்முறையில் கொன்ற சபர்மதி இரயில் சம்பவம் வெளியே தெரிந்த உடன், வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள் தலைவர்களும், சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட குழுக்களும் பிப். 28 அன்று மதக் கலவரத்தை உருவாக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டும் மலையளவு உளவுத் தகவல்களை மாநில அரசு வைத்திருந்ததை பிப். 27ஆம் தேதியிட்ட சில அறிக்கைகள் காட்டின.

டிஐஆர் /2/காம்/பிரிக்காஷன்/72/2002 என்ற பெயர் கொண்ட 27.2.2002 என தேதியிடப்பட்ட அறிக்கை கூறுவதாவது:  ‘வி.ஹெச்.பி. 28 பிப். 2002 அன்று குஜராத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்ற கோத்ரா சம்பவம் தொடர்புடைய தகவல்கள் பெறப்பட்டன.  இதற்கான எதிர்காலச் செயல்களையும் செயல்முறைகளையும் வரையறுக்க அகமதாபாத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு கூட்டத்திற்கு வி.ஹெச்.பி. அழைப்பு விடுத்திருந்தது.  இதன் பொருட்டு கண்காணிப்பு தேவைப்படுவதுடன் இதற்குப் பிறகு வரப்பெறும் எந்தத் தகவல்களும் அனுப்பப்பட வேண்டும்.’

“பந்த்தின் காரணமாக உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலையால் எதிர்பாராத மோசமான நிகழ்வுகள் நடப்பதைத் தவிர்க்க கடுமையான கண்காணிப்பு அவசியப்படுகிறது” என்ற தகவல் அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் அனுப்பப்பட்டதாக மாநில உளவுப் பிரிவு கூறுகிறது.

இருந்த போதிலும், டி -1/9- ஹெச்.எ. என்ற எண்ணிடப்பட்ட மற்றொரு தகவல், கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு பொது போக்குவரத்திலும் கார்களிலும் பயணிக்கும் சிறுபான்மையினர் பலிவாங்க குறிவைக்கப்படலாம் என்று அனைத்துக் காவல்துறை கமிஷனர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியது.

பிப். 28 அதிகாலையிலேயே, இந்துத்துவ அமைப்புகள் வன்முறையை விளைவிக்கக் கூடிய குழுக்களை ஒன்று கூட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி எச்சரிக்கை செய்ததற்கான சில அறிக்கைகளையும் சஞ்சீவ் பட் சமர்ப்பித்துள்ளார்.

உதாரணத்திற்கு சி/பிரிக்காஷன்/177/2002 என்று பெயரிடப்பட்ட பிப். 28, 2002 என்ற தேதியிடப்பட்டு, முதலமைச்சர் அலுவலகத்திற்கும் மற்றும் உள்துறைக்கும் குறிப்பிட்ட செய்தி கூறுவதாவது: “வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்ற கொலை வெறியாட்டத்தில் பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சில உறுப்பினர்கள் பங்களிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களைத் தாக்குகின்றனர். மேலும் அவர்கள் வேறு வேலைகளிலும் ஈடுபட்டுள்ள சிறுபான்மையின ஏழைகளைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்துகின்றனர்.  இதன் அடிப்படையில் காவல்துறை அந்த மாதிரியான வாகனங்கள் மற்றும் நபர்கள் மீது கூடுதலான முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படுகின்றனர்.

அரசின் அறிக்கைக்கும் உண்மைக்கும் இடையே இதே போன்று வேறு சில இடைவெளிகளும் உண்டு.  மோடியின் அரசு, பலரைக் கொடூரமாகப் பலி வாங்கிய சபர்மதி இரயில் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் அகமதாபாத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவில்லை என்று கோருவதற்கு முரணாக, சஞ்சீவ் பட் இறுதி ஊர்வலங்கள் அகமதாபாத்தில் நடைபெற்றன என ஆதாரம் காட்டுகிறார்.  இது மோடி வேண்டுமென்றே, மூர்க்கமான மதக் கலவரத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக உடல்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத்திற்கு எடுத்து வந்தார் என்ற ஆதாரம் அற்ற இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சான்றாக அமைகிறது.

சி/டி.ஐ.ஆர்/ஷம்ஷன் யாத்ரா/176/2002 என்ற பெயரில் 28 பிப். 2002 தேதியிடப்பட்டு மோடியின் அலுவலகத்திற்கு மற்றும் உயர் காவல்துறை போலீஸ் அதிகாரிகளுக்கும் குறிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘‘கோத்ரா சம்பவத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட கரசேவகர்களின் உடல்கள், இறுதி ஊர்வலமாக சோலா சிவில் மருத்துவமனையிலிருந்து துவங்கப்படலாம்.  இந்த ஊர்வலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊர்வலத்தின்போதும் அதற்குப் பிறகும் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.’’

மேலும் நரோடா பாட்டியாவில் உள்ள கிணற்றில், அதிக எண்ணிக்கையிலான உடல்கள் போடப்பட்டுள்ளன. அதன் பிறகு சந்தேகத்தைக் கிளப்பாமல் இருப்பதற்காக விபத்தில் ஏற்படும் கழிவுப் பொருட்களால் அது மூடப்பட்டுள்ளதைக் குறிப்புணர்த்தும், தொடர்ச்சியான உளவு அறிக்கைகளையும்,  சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வழங்கினார்.  மாநில உளவுப் பிரிவு ஆய்வாளர் ஒருவர், கூடுதல் விசாரணையில் இறங்கும்போது, விசாரணையைத் திசை திருப்பும் வகையில் யாரோ இறந்த பன்றியைக் கிணற்றில் வீசியிருந்தனர் என்பதையும் அவருடைய அறிக்கை காட்டியது (நரோடா பாட்டியா படுகொலைகளின் சதிக் கும்பலில் முக்கியமான பாபு பாஜ்ரன்ஜி, தெஹல்காவின் ரகசிய ஆய்வின்போது நிருபரிடம், அலுவலக ரீதியாக வெளியிடப்படும் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதன் பொருட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டதாகக் கூறினார்).

டீஸ்டா செடல்வாட் போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அரசிடமும் நீதிமன்றத்திடமும் நரோடா பாட்டியாவில் உள்ள கிணற்றைத் தோண்டி ஆராயும்படி பல மனுக்கள் செய்திருக்கின்றனர். சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் விசாரணை மாற்றப்பட்ட பொழுதும் இந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தங்களுடைய கோரிக்கையை அழுத்தமாகப் பதிவு செய்தனர்.  ஆனால் சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் அரசின் விளக்கங்களை மட்டும் எந்தவித விசாரணையும் இன்றி எடுத்துக் கொண்டது.

இவை அனைத்தும் சஞ்சீவ் பட்டால் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு பெறப்பட்ட ஒரு சில அறிக்கைகளில்  இருந்து  மட்டுமே தோன்றியவையாகும்.  மோடியின் அரசு கலவரத்தைப் பற்றி உளவுப் பிரிவு அல்லது சட்டம் – ஒழுங்கு கூட்டங்கள் தொடர்பான ஆவணங்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற நிலையில், இது மூடிமறைக்கும் ஒரு நடவடிக்கையாகப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. முதலமைச்சர் மற்றும் இதர முதுநிலை அலுவலர்களுக்கும் கலவரத்தின்போது வழங்கப்பட்ட பாதுகாப்பில் பற்றாக்குறை இருந்ததையும் கூட அரசு மறுத்துள்ளது.

சஞ்சீவ் பட்டைத் தவிர மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மட்டுமே மோடி அரசின் நிலையைத் தெளிவுபடுத்த வைக்கும் மிக மிக முக்கியமான ஆவணங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வழங்கினர்.

முன்னாள் உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. பி.ஸ்ரீகுமார் எப்படி ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் அகமதாபாத்திற்குக் கலவரத்தின்போது கடத்திக் கொண்டுவரப்பட்டன என்பதையும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பு எப்படி மோடி அரசாங்கம் கரசேவகர்களுக்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையும் பற்றிய மிக அதிக அளவிலான உளவு அறிக்கைகளை வழங்கினார். சஞ்சீவ் பட் மற்றும் ஸ்ரீகுமார் இருவரும் 18 செப். 2002 ஒரே நாளில் ஒரே ஆணையின்படி மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டனர். ஸ்ரீகுமார் இருட்டடிப்பு செய்யப்பட்டார்.  மேலும் அவர் தன்னுடைய ஓய்வூதியத்தைப் பெற வழக்குடன் போராட வேண்டி இருந்தது.  சஞ்சீவ் பட்டிற்குக் கடந்த 8 வருடங்களாக வரவேண்டிய உயர் பதவி வழங்கப்படவில்லை.

கலவரத்திற்குப் பிறகு, மோடி அரசால்  நேர்மையான அதிகாரிகள் எப்படியெல்லாம் தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர் என்பதற்கான பல உதாரணங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கைகள் பதிவு செய்துள்ளன. மிகத் தெளிவான இந்த அச்சுறுத்தல்கள் தொடருகின்றன. 

‘தெஹல்கா’ புதிய சாட்சியங்களைத் தடயம் அறிந்து கண்டுபிடித்தது.  ஒரு இதழால் சஞ்சீவ் பட்டின் கோரிக்கைகளைச் சரிபார்க்க முடியும்போது, ஏன் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் முடியாது?

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா என்பவருக்கு விசாரணைக் கமிஷன் முன்பாக, மூத்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினரின் பதிவு செய்யப்பட்ட உரையாடலை அனுமதி பெறாமல் ஏன், எவ்வாறு சமர்ப்பித்தீர்கள் என்று அரசு பிப்ரவரி 5 அன்று ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை எந்த வகையான கட்டாயப்படுத்தல்களுக்கும் உள்ளானபோதும், சஞ்சீவ் பட் பிப்.27ல் நடந்த கூட்டத்தில் இருந்தார் என்பதையும், அங்கு டி.ஜி.பி. சக்ரவர்த்தியின் வற்புறுத்தலின் பேரில் சென்றார் என்பதையும் உறுதிப்படுத்த முயற்சித்தது. ஆனால் ‘தெஹல்கா’, கலவரத்தின்போது சஞ்சீவ் பட்டின் ஓட்டுனராக இருந்த போலீஸ் தலைமைக் காவலரான தாராசந்த் யாதவ்(50)வைக் கண்டுபிடித்தது.  யாதவ் ‘தெஹல்கா’விடம், பிப். 27 2002 அன்று பட் அலுவலகத்திலிருந்து இரவு 8 மணிக்குக் கிளம்பியதாகவும், அதன்பிறகு அகமதாபாத் டிரைவ்-இன் ரோட்டில் உள்ள இல்லத்திற்கு ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

‘‘சார் ஓட்டப் பயிற்சிக்குச் சென்றுவிட்டு ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பினார்.  எனது இரவு உணவை முடித்துக் கொண்டபோது சார் வந்து திரும்பவும் காந்தி நகரில் உள்ள போலீஸ் பவனுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார்.  நாங்கள் அங்கு சென்று சேரும்போது டி.ஜி.பி. சாரின் கார் வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது. சார் டி.ஜி.பி. சாரின் காரில் ஏறிக்கொண்டு என்னைப் பின்தொடருமாறு கூறினார்.  நாங்கள் முதலமைச்சர் பங்களாவிற்குச் சென்றோம்.  அங்கு  வெளியே மேலும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சார் வெளியே வந்தார். அவரை நான் அவரது போலீஸ் பவனுக்கு அழைத்துச் சென்றேன்.  அங்கு மேலும் ஒரு மணி நேரம் போல வேலை பார்த்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றேன்.”

சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் தேவையெனில் யாதவ்வின் நிகழ்வுகளின் பதிவு செய்யப்பட்ட நகலை ‘தெஹல்கா’ வழங்கத் தயாராக உள்ளது.

ஆனால் ஒரு செய்தி இதழால் கிடைத்த தகவல்களையும் சஞ்சீவ் பட்டின் கோரிக்கையையும் இந்த அளவுக்குச் சரிபார்க்க முடியும்போது, இந்திய உச்சநீதிமன்றத்திற்குக் குறையாத அதிகாரம் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவால் இந்திய வரலாற்றின் மிக வன்முறையான இரு குழுக்களின் மோதலின் அடிப்படையைக் கண்டறிவதில் இத்தனை பிரச்சினைகள் ஏன் என்பதே நமது முன்னுள்ள கேள்வியாகும்.

முழுமையாக எதுவும் செய்யப்படவில்லை என்று தானாக ஒத்துக்கொண்ட  விசாரணை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டதன் பின்னணியின் சந்தேக முடிச்சுகளை அவிழ்க்கும் என்று நம்ப முடியுமா? குஜராத் இந்து மற்றும் இஸ்லாம் இனங்களின் தீவிரவாதிகளைப் பொய்க் காரணம் சொல்லிக் கொண்டு, மிகவும் கொடூரமான வன்முறையில் ஈடுபடும் புரையோடிப்போன காயமாக குஜராத் நீடிக்கத்தான் போகிறதா?  தங்களது கடமைகளில் தவறிப்போன தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சரியான பாடத்தை வழங்கப் போவதில்லையா? கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இனி நீதி கிடைக்குமா என்று நம்பிக்கை இழந்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது முழு அதிகாரத்துடன் தலையிடுமா, தலையிடாதா?

அனைவரது பார்வையும் மார்ச் 3ல் கூட இருக்கும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வையும் அவர்கள் வழங்கவிருக்கும் தீர்ப்பையும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது.

தமிழில்: இந்திரா அலங்காரம்
நன்றி: தெஹல்கா, 19.02.2011 / உயிர்மை.காம்

தொடர்புடைய ஆங்கிலச் செய்தி:

http://www.satyamargam.com/english/1814-narendra-modi-said-let-the-people-vent-their-anger-dig-sanjeev-bhatt.html


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.