என்கவுண்டர் கொலைகள் குறித்த தகவல் பட்டியல் திரட்ட தேசிய மனித உரிமைக் கழகம் முடிவு

புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organizations – NCHRO) முடிவு செய்துள்ளது. அதோடு விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் செய்யும் வரம்பு மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் கணக்கெடுத்து ஆவணப்படுத்துவது என NCHRO தீர்மானித்துள்ளது.

ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குப் பின் முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து ஆந்திரக் காவல்துறை பல உரிமை மீறல்களை நிகழ்த்தி வருகிறது என அக்கூட்டத்தில்; தெரிவிக்கப்பட்டது. விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை கயிற்றில் கட்டித் தொங்க விடுதல், பால் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுதல், உடல் மீது ஏறி நிற்றல், கால்களை அகல விரித்தப்படிப் பலமணிநேரங்கள் நிற்கவைத்தல் போன்ற மிகக் கொடூரமான சித்திரவதைக்கு காவல்துறை உள்ளாக்குவதாக ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் லத்தீஃப் தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் என்கவுண்டர் கொலைகளுக்கான தேசிய அளவில் பட்டியல் திரட்டுதல், நாடு முழுவதும் அரசு காவல்துறை மூலம் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களைப் பட்டியலிடுதல், விசாரணைக் கைதிகளாகப் பல காலம் சிறையில் வாடும் அப்பாவிகளின் பட்டியல் திரட்டுதல், அரசு இயந்திரத்தில் குறிப்பாகக் காவல்துறையில் சிறுபான்மையினருக்குப் போதிய வாய்ப்புகள் அளிப்பது குறித்து கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இதை வாசித்தீர்களா? :   கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!