மதவாதம் இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்

Share this:

“மதவாதம் என்பது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இந்தியாவின் கலாச்சார இழையைச் சிதைக்கும் கொடூரசெயலாகும்” என்று பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் கூறியுள்ளார். “நாட்டில் மதச்சார்பின்மை என்பது நம் இந்திய மண்ணில் உள்ள எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வதாகும்” என்றும், “மதத்தின் பெயரால் தூண்டப்படும் எந்தவொரு அரசியல் இயக்கமும் மதத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒருசேர ஏமாற்றுவதாக அமையும்” என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லியில் இன்று மத நல்லிணக்க மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசிய அவர், அதுபோன்ற மதவாத சக்திகள் நாட்டின் நேர்மையான கலாச்சார கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிக்கும் என்றும், குறுகிய அரசியல் லாபத்திற்காக அந்த சக்திகள் மதங்களுக்கிடையே சமாதானமின்மையை ஏற்படுத்த முயலக் கூடும் என்றும் கூறினார்.

எனவே அதுபோன்ற சக்திகளை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்தை அவர் பாஜகவைப் பெயர் சொல்லாமல் மறைமுகமாகச் சாடும் தொனியில் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு மதவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் குறுந்தகடு வெளியிட்டு வன்முறைக் கிளர்ச்சியைத் தோற்றுவித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய பாஜக திட்டமிட்டிருந்தது சமீபத்தில் தெரியவந்தது.

அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை அளிக்கக்கூடிய வகையில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நமது அரசியல் அமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்று வலியுறுத்தினார். உலகின் பல்வேறு மதங்களுக்கு தனது மண்ணில் இடம் அளித்துள்ள இந்தியா தொடர்ந்து அதன் இந்த சிறப்பியல்பைப் பேணி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வருவதைச் சகிக்காத தீயசக்திகள் மதவாதத்தைத் தூண்டி குளிர்காய முயல்கின்றன என்றும் அவர் கூறினார்.

சமத்துவம் என்பதே நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய கலாச்சார உறவுகளுக்கான குழுமம் (Indian Council for Cultural Relations) ஏற்பாடு செய்திருந்த மத நல்லிணக்க நிகழ்ச்சியிலேயே பிரதமர் இவ்வாறு பேசினார்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.