ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொருளாதார சமூக அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க இன்று ஓர் அவசர சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஆந்திர சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது அலி ஷபீர் அரசின் இந்த முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்தார். ஏற்கனவே இந்த அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இம்முடிவைச் செயல்படுத்த முனையும்போது மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதித்தது.

 

அதனைத் தொடர்ந்து மாநில பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அளித்த பரிந்துரைகளின் பேரில் முஸ்லிம்களில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி இச்சட்டத்தை ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம்களுக்கு சாதிப் பிரிவுகள் இல்லை என்றும் அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு தீர்மானித்தல் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று ஐக்கிய முஸ்லிம் செயற்குழு (Muslim United Action Committee) வும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.

 

இதனைக் குறித்து கருத்து தெரிவித்த திரு ஷபீர், அனைத்து முஸ்லிம்களுமே சமூக அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தான் என்றும் இந்த இடஒதுக்கீட்டை அனைத்து பின்தங்கிய முஸ்லிம்களுக்கும் பொருந்துமாறு மாற்றுவதற்காக அரசு சட்ட ஆலோசனை செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

இதை வாசித்தீர்களா? :   பரவும் கிருமிகள்