பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித உரிமை கழகம்!

Share this:

{mosimage}புது தில்லி: மும்பைக் கலவரத்தில் குற்றவாளிகள் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கண்டறிந்த பால்தாக்கரே உட்பட சிவசேனா தலைவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக செயல்பட்டுவரும் இயக்கங்களான கர்மசமிதி, ஜம்மியத்துல உலமாயே ஹிந்த், உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களின் மனித உரிமை யூனியன் போன்றவை உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தன.

"முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் கூட்டாக அதனை செய்ய உத்தரவிட்டவர் பால்தாக்கரே" என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை இவ்வியக்கங்கள் சுட்டிக்காட்டின. காவல்துறை நடத்திய கொலைகளில் கொல்லபட்டவர்களின் பெயர்களும், மாநில அரசு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத விஷயங்களையும் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் இவ்வியக்கங்கள் சமர்ப்பித்தன. 
 
மும்பை கலவர வழக்கில் மாநில அரசின் கடமை தவறல்களுக்கான உதாரணங்களையும், தெளிவான விசாரணை நடத்தப்படாத காரணத்தினால் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்ட வழக்குகளின் பட்டியலையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்ட, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நீதிமன்றம் கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்தே அவர்களுக்காக செயல்படும் மேற்கண்ட இயக்கங்கள் நீதிமன்றத்தில் இவ்வாக்குமூலம் அளித்துள்ளன. 
 
சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக அநியாயம் இழைத்த உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், சிவசேனாவின் பத்திரிக்கையான சாம்னாவில் ஆத்திரம் கொள்ள வைக்கும் விதத்தில் மதங்களுக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதாக பால்தாக்கரேக்கு எதிராக ஒரு சில வழக்குகள் பெயருக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் அவ்வாக்குமூலத்தில் கூறினர். சிவசேனா-பாஜக அரசு 1,371 வழக்குகளை மூடி விட்டதாகவும் அவற்றில் 112 வழக்குகளை  சிறப்புப் புலனாய்வுக் குழு டீம் மீண்டும் மறுவிசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர். 
 
சிவசேனா-பாஜக அரசு மூடி மறைத்த மீதமுள்ள 1259 வழக்குகளை சி.பி.ஐ மறுவிசாரணை செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்தனர். கலவரத்தில் காணாமல் போன 91 நபர்களின் பட்டியலையும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றவாளிகள் என கண்டறிந்த 31 காவல்துறை அதிகாரிகளின் பட்டியலையும் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.