குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-7)

Share this:

ஐயம்:  எது சரி? மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது …
• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)
• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55)

தெளிவு: சர்வாதிகார அரசன் ஃபிர்அவ்ன், அந்த பூமியில் வலிமை மிக்கவனாகவும், வரம்பு மீறி கொடுமை இழைப்பவனாகவும் இருந்தான். (அல்குர்ஆன் 10:83) அவனது அனுமதியின்றி இறைநம்பிக்கை கொள்பவர்களை மாறுகை மாறுகால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் கழுவேற்றுவேன் – சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன் என்றெல்லாம் துன்புறுத்தினான் (20:71 மற்றும் 26:41) குடிமக்களின் ஆண்மக்களைக் கொலை செய்து, பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்தான். விஷமம் செய்பவனாகவும் இருந்தான். (28:4)

இதையெல்லாம்விட ‘நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன்’ (79:24) ‘என்னைத் தவிர இறைவன் இல்லை’ (26:29) என்றும் பிரகடனப்படுத்தி அக்கிரமங்கள் செய்து வந்தான். இந்நிலையில், இறைத்தூர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி, இறை நம்பிக்கை கொண்ட இஸ்ரவேலர்கள் மீது கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டான். ஃபிர்அவ்னிடமிருந்து தற்காப்புக்காக தப்பிய இஸ்ரவேலர்களை கடலைப் பிளந்து வழிவிடச் செய்து அவர்களைக் காப்பாற்றி, அவர்களைத் துரத்திவந்த ஃபிர்அவ்னையும் அவனது படையையும் கடலில் மூழ்கடித்து அழித்துவிட்டான் இறைவன்.

கேள்வியில் எழுப்பியுள்ளது போல், 10:92வது வசனத்தில், ஃபிர்அவ்ன் உயிர் பிழைத்தான் என்று சொல்லப்பட வில்லை. இந்த வசனம் தவறாக விளங்கப்பட்டுள்ளது. ஆகவே, கடல் காட்சியைப் பற்றிக் குறிப்படும் 10:90,91,92 ஆகிய மூன்று வசனங்களையும் காண்போம்:

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்குர்ஆன் 10:90-92)

தற்காப்புக்காக தப்பியோடிய இஸ்ரவேலர்களை, விட்டேனா பார் என படையுடன் தொடர்ந்து துரத்திச் சென்றான் ஃபிர்அவ்ன். இஸ்ரவேலர்கள் கடலைக் கடந்து எதிர்கரைக்குச் சென்ற பின்னர், அவர்கள் சென்ற வழியில் ஃபிர்அவ்னும் அவனது படையினரும் இஸ்ரவேலர்கள் சென்ற வழியில் கடலில் இறங்கினர். இங்குமங்கும் தப்பிக்க இயலாத சரியான இடத்திற்கு வந்த பின்னர், இரு பிரிவாகப் பிளந்த கடல் ஒன்று சேர்ந்தது. கடலின் தாக்குதலை எதிர்பாரா ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கி மரணமடைந்தனர். இவை இறைவனின் ஏற்பாடாகும்.

கடலில் மூழ்கி உயிருக்காக திணறிக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன், இஸ்ரவேலர்களின் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன், அவனுக்குக் கட்டுப்பட்டவனாகவும் இருக்கிறேன் என்று கூறினான். (10:90) அதற்கு இறைவன், சற்று முன்பு வரை மறுத்துக்கொண்டிருந்துவிட்டு உயிர் பிரியும் நேரத்திலா நம்பிக்கை கொள்கிறாய் என்று கூறிவிடுகின்றான். (10:91) அத்துடன், இன்றைய தினத்திலிருந்து எதிர்கால மக்களுக்கான அத்தாட்சியாக ஆன்மா இல்லாத உனது வெற்றுச் சடலத்தை பாதுகாப்போம் என்று இறைவன் கூறினான். (10:92)

ஃபிர்அவ்ன் உடல் பாதுகாக்கப்பட்டுள்ள எகிப்தில் உள்ள மியூஸியம் (படம்: விக்கிபீடியா)ஆகவே, குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி, நபி மூஸா (அலை) அவர்களையும், அவரைப் பின்பற்றிய இஸ்ரவேலர்களையும் கடலைப் பிளக்கச் செய்து அவர்களைக் காப்பாற்றிய அன்றைய தினமே அவர்களைத் துரத்திவந்த ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.  ”இன்று உனது சடலத்தைப் பாதுகாப்போம்” என்று ஃபிர்அவ்னிடம் இறைவன் கூறியது ஃபிர்அவ்னின் மரணத்திற்கு முன், மரணவாயிலில் இருக்கும்போது ஃபிர்அவ்னுக்கு இறைவன் கூறியதாகும். (ஃபிர்அவ்னின் சடலம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு எகிப்து தலைநகரான கெய்ரோ அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி அறையில் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.)

கேள்வியில் உள்ளபடி:

ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடன் இருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.(அல்குர்ஆன் 17:103)

ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும். (அல்குர்ஆன் 28:40)

பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 43:55)

மேற்கண்ட மூன்று வசனங்களும், ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் கடலில் மூழ்கடித்தோம் என்று கூறுகின்றது. 10:92வது வசனம், அவன் மரணத்திற்கு சற்று முன், அவன் மரணித்தபின் அவனது சடலம் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அவன் அன்றைய தினமே நீரில் மூழ்கி மரணமடைந்தான் என்பதை ”இன்றைய தினம் உனது சடலத்தைப் பாதுகாப்போம்” என்ற வாசகங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்பதை நிரூபிக்க வைத்த ஆதார வசனங்களைத் தவறாகப் புரிந்து அதன் அடிப்படையில்  தவறான வாதங்களே கேள்வியில் வைக்கப்பட்டுள்ளன. குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)   


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.