முஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா?

Share this:

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?

பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு  என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்

முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள். அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும். இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார். அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 2:144)

காபா என்பது மனித சமுதாயம் ஏக இறைவனை வணங்குவதற்கு கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும். அதை நோக்கி முஸ்லிம்கள் அனைவரும் தமது தொழுகையின் போது நோக்க கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்பதால் தான் முஸ்லிம்கள் அதை நோக்கி தொழுகிறார்கள். ஆனால் காபா என்ற அக்கட்டடத்தைத் தொழவில்லை. இதற்கு முக்கியமான ஒரு வரலாற்று சம்பவம் விளக்கமாக இருக்கிறது.

மக்கா வெற்றியின் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இதே காபாவின் மேல் நின்று தொழுகைக்கான அழைப்பை விடுக்க பிலால் எனும் நபித்தோழரைப் பணிக்கிறார்கள். அவர் அதன் மேல் நின்று தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார். தாம் வணங்கக் கூடிய ஒன்றின் மீது யாரும் ஏறி நிற்க மாட்டார்கள். முஸ்லிம்கள் காபாவை வணங்குவதாகத் தவறாக எண்ணுபவர்கள், எவராவது தான் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பாரா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டால் இதற்குரிய விடை கிடைத்துவிடும்.

இன்றைக்கும் கூட நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் இடம் நிறைந்து விடும் சூழலில் முஸ்லிம்கள் பள்ளியைச் சுற்றியுள்ள வெளி இடங்களில் நின்று தொழுவதைக் காணலாம். அதற்காக அவர்கள் பள்ளிவாசலை வணங்குகிறார்கள் என்று அர்த்தமில்லை. அதே போன்றே காபா எனப்படும் உலகின் முதல் பள்ளிவாசலுக்குள் போதுமான இடமில்லாத சூழலில் காபாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழுகிறார்கள்.

இது தவிர முஹம்மது (ஸல்) அவர்களும்  அவருடைய தோழர்களும் அதனுள் சென்று தொழுதும் உள்ளார்கள். ஆக தொழுகையின் போது உலக மக்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு திசையை உலகின் எப்பகுதியிலிருந்தும் நோக்க ஏவப்பட்டுள்தால் முஸ்லிம்கள் காபாவை நோக்கித் தொழுகிறார்களே தவிர அதையே தொழவில்லை.

இரண்டாவதாக ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல் சுவனத்திலிருந்து வந்துள்ள ஒரு பொருள் என்பது முஸ்லிம்களின் மற்றொரு நம்பிக்கை. இதை முஹம்மது (ஸல்) அவர்கள் தம் கைகளால் தொட்டுத் தடவி முத்தம் இட்டுள்ளார்கள். ஆனாலும் இதை வணங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதைத் தொடவில்லையென்றாலும் முத்தமிடவில்லையென்றாலும் ஹஜ் வணக்கம் நிறைவேறிவிடும்.

மேற்கண்ட பத்திகளில் சொல்லப்பட்டவற்றை ஆய்ந்து நோக்கினால் முஸ்லிம்கள் காபா என்ற கட்டிடத்தையோ அதில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லையோ வணங்கவில்லை என்பது விளங்கும். (எப்படி ஒரு பிற நாட்டுப் பொருளை, அல்லது சந்திரனில் இருந்து பெற்ற கல்லையும் மண்ணையும் மனிதர்கள் ஆர்வத்துடன் அணுகுகிறார்களோ அதே போல் தான்) சுவனத்தின் ஒரு பொருளை இறைத்தூதர் அவர்கள் தொட்டுள்ளார்கள், முத்தமிட்டுள்ளார்கள் என்பதால் முஸ்லிம்கள் முத்தமிடுகின்றனரே தவிர அதை வணங்கவில்லை என்பதே உண்மை.

மேலும்,

உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள். (புகாரி 56வது அத்தியாயத்தில் 675வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இரண்டாவது கலீஃபாவாகிய உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதில் முஸ்லிம்களின் கருப்புக்கல் குறித்த முஸ்லிம்களின் நோக்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கணம் பொதிந்துள்ளது.

மேலும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் ஒன்றாகிய தவாஃப் (வலம் வருதல்) என்பதை முஸ்லிம்கள் ஏழு முறை சுற்றிவரவும்  அதை இந்தக் கல்லினை அடையாளமாகக் கொண்டே துவக்கவும், ஒவ்வொரு சுற்றை முடிக்கவும் ஏவப்பட்டுள்ளனர். கூட்டம் காரணமாகக் கருப்புக் கல்லினை நெருங்கி முத்தமிட இயலாதவர்கள், தொலைவில் இருந்தவாறே கருப்புக் கல்லினை நோக்கி சைகை செய்துவிட்டு தங்களின் வலம் வருதலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி உள்ளது. இயலாத சூழலில் கருப்புக் கல்லைத் தொடாமலேயே கூட ஹஜ்ஜைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே காபாவையோ, ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லையோ அல்லது, இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையோ அவர்கள் அடக்கப்பட்டுள்ள மதீனா எனும் பள்ளியையோ கூட வணங்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை என்பதே இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையின் நிலைபாடாகும்.

இறைவனே மிக்க அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.