ஜகாத்துக்கு உச்சவரம்பு எவ்வளவு?

Share this:

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் ஹனஃபி மத்ஹபில் இருக்கிறேன். ஷாஃபி மத்ஹபில் பெண்களின் தேவைக்குமேல் உள்ள தங்கம் நிஸாப் அளவுக்கு மேல் இருந்தால், அதற்கு மட்டும் ஸகாத் கொடுத்தால் போதும் என்று அறிந்தேன். ஹனஃபி மத்ஹபுக்கு சட்டம் என்ன? ஹனஃபிக்கும் அதே சட்டம் என்றால், பெண்களின் தேவைக்கு உள்ள அளவு என்ன? விளக்கம் தாருங்கள்! (- ஸாதிக்)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…

சகோதரர் ஸாதிக்,

இஸ்லாமிய மார்க்கத்தில் மத்ஹபின் பெயரால் எந்தப் பிரிவும் இல்லை! ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி என எந்த மத்ஹபும் இஸ்லாத்தில் இல்லை! முற்கால இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட மத்ஹபுகளுக்கும் அந்த இமாம்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பின்னாளில் தோன்றிய அறிஞர்கள் சிலர், இமாம்களின் பெயர்களைப் பயன்படுத்தி மார்க்க விளக்கம் கொடுத்ததால் இது இன்னின்ன இமாமின் சட்டம் என இமாம்களின் பெயரால் நிலைத்து, இன்றளவும் தொடர்கிறது.

நான்கு இமாம்களும் குர்ஆன், சுன்னாவைத் தான் பின்பற்றினார்கள். குர்ஆன், சுன்னா ஒளியில் சட்டங்கள் இயற்றி, மார்க்க தீர்ப்புகள் அளித்தனர். எனவே, ஹனஃபி, ஷாஃபி… போன்ற மத்ஹபுகள் இஸ்லாம் ஏற்படுத்தியதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஜகாத் எனும் கடமையான தர்மம், அதைக் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்தக் கடமையானக் கொடையை கட்டாயம் வழங்கியாக வேண்டும். இது இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்ற முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கடமையாகும்.

தங்கத்தின் நிஸாப் نِصاب – வரம்பு 20 மிஃத்கால் ஆகும். தங்கம் இந்த அளவுக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜகாத் கடமையாகும். ஒரு மிஃத்கால் என்பது 4.374 கிராம்கள் எடை கொண்டது. 20 மிஃத்கால் (20X4.374=87.48 கிராம்கள்) சுமார் 11 சவரனுக்குச் சமம். இதில் இரண்டரை சதவீதம் சுமார் 2.187 கிராம் – கால் சவரன் தங்கத்தை ஜகாத் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையை மதிப்பிட்டு கால் சவரன் எடையின் தங்கத்திற்கான ரூபாயை ஜக்காத்தாகக் கொடுக்கலாம்.

வெள்ளியின் நிஸாப் – வரம்பு 5 ஊக்கியாவாகும். ஓர் ஊக்கியா என்பது 122.472 கிராம்கள் எடை கொண்டதாகும். 5 ஊக்கியா ( 5×122.472 ) = 612.36 ~ சுமார் 615 கிராம்கள் ஆகும். இதில் 2.5 சதவீதம் – 15 கிராம் வெள்ளியை ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலையை மதிப்பிட்டு 15 கிராம் எடையின் வெள்ளிக்கான ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்கலாம்.

(விற்பனைக்காக இல்லாத) குதிரைகளுக்காகவும், அடிமைகளுக்காகவும் ஜகாத் இல்லை என நான் தள்ளுபடி செய்துவிட்டேன். எனவே, நாற்பது திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹம் என்ற அளவில் வெள்ளிக்கான ஜகாத்தைக் கொடுத்துவிடுங்கள். நூற்றுத் தொண்ணூறு திர்ஹங்களில் (ஜகாத்) எதுவும் (கடமை) இல்லை. அவை இருநூறை அடைந்துவிட்டால் அவற்றில் ஐந்து திர்ஹங்கள் (ஜகாத்) உண்டு. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – அலீ (ரலி) நூல் – திர்மிதீ 563)

ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்குக்குக் குறைந்த (தானியத்)தில் ஜகாத் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் – புகாரி 1405, முஸ்லிம் 1780, திர்மிதீ 568, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, முவத்த மாலிக், தாரிமீ)    

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மிஃத்கால் தங்கத்துக்கும் அரை மிஃத்கால் தங்கத்தை (40ல் ஒரு பாகத்தை) ஜகாத்தாக எடுப்பார்கள். (இப்னு மாஜா)

இரண்டரை சதவீதம்

கையிருப்பில் உள்ள தங்கமானது ஜகாத்துக்கான உச்சவரம்பை அடைந்து, தங்கம் தவிர்த்து மேலதிகமாகப் பணமிருந்தால் தங்கத்தின் விலை மதிப்புடன் பணத்தையும் சேர்த்து அந்தத் தொகைக்கான ஜகாத் மதீப்பிடு செய்யவேண்டும்.

அதாவது, ஒரு பவுன் தங்கம் 20 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 11 பவுனுக்கு 2,20,000 ரூபாய்கள் மதிப்பீடாகும். இத்துடன் 30,000 ஆயிரம் ரூபாய்கள் கையிருப்பு ரொக்கப் பணமாக இருந்தால், எஞ்சியுள்ள அந்தப் பணத்தையும் தங்கத்தின் விலையுடன் சேர்த்தால், மொத்தம் 2,50,000 ரூபாய்களாகும். இதில் நாற்பதில் ஒன்று என்கிற கணக்கின்படி இந்த இரண்டரை லட்சத்துக்கும் நூற்றுக்கு இரண்டரை சதவீதமான 6250 ரூபாய்கள் ஜக்காத்தாகக் கொடுக்க வேண்டும்.

பெண்களின் “தேவைக்கு மேல்” உள்ள அளவு என்ன? என்று கேள்வியில் கேட்டிருப்பது போல் பெண்கள் தேவைக்கென எந்த அளவும் இல்லை. நூறு பவுன் நகைகளை அள்ளி அணிந்தாலும் அவை பெண்களின் தேவையாகத்தான் இருக்கும். ஆகவே, பெண்களின் தேவைக்குப் போக எஞ்சியுள்ள தங்கத்துக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என எவ்வித ஆதாரமும் இல்லை. ஜகாத் கொடுக்கும் அளவுக்கு தங்கம் இல்லை என்றால் தங்கத்திற்கான உச்சவரம்பை அவை அடையவில்லை. அதனால் நிஸாபுக்குக் குறைவாக இருக்கும் தங்கத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை.

தங்கம் நிஸாபை அடைந்து, அதற்கு மேலும் தங்கம் கையிருப்பில் இருந்தால் மொத்த தங்கத்தையும் கணக்கிட்டு ஸகாத் வழங்கவேண்டும். அதாவது, ஒருவரிடம் நூறு கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் தங்கத்துக்கான உச்சவரம்பு சுமார் 88 கிராம்கள்; அல்லது 11 பவுன்கள் ஆகும். இங்கு நூறு கிராம் தங்கத்தையும் கணக்கிட்டு அதில் இரண்டரை சதவீதமான இரண்டரை கிராம் தங்கத்தை அல்லது அதற்கான கிரயத்தை ஜகாத்தாக வழங்கிட வேண்டும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.