தொழுகையில் கொட்டாவி வந்தால் …

Share this:

ஐயம்:

கொட்டாவி வந்தால் அடக்குவது கூடாது என்று மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொழுகையில் கொட்டாவி வந்தால் அதனை அடக்கிக் கொள்ள முயல்கிறேன். இது தொழுகையைப் பாதிக்குமா? விளக்கம் தேவை.

– சகோதரர் வாஸிம் அக்ரம்.

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …

தும்மல், கொட்டாவி, இருமல், விக்கல், ஏப்பம் இவை நாம் விரும்பிச் செய்வதில்லை. அவை, உடற்கூறுகளின் இயற்தன்மையால் ஏற்படும் அனிச்சை செயல்களாகும்.

“கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவருக்கும் கொட்டாவி வந்தால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சப்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 3289, முஸ்லிம் 5718, திர்மிதீ 2747, அபூதாவூத் 5028, அஹ்மத் 27504).

“அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் யாரும் தும்மி ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறினால் அதைக் கேட்பவர் ஒவ்வொருவரும் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறுவது கடமையாகும். கொட்டாவி வந்தால் இயன்றவரை தடுக்கவேண்டும். ஹா ஹா வென வாயைப் பிளக்கக் கூடாது ஏனெனில் இதன் காரணமாக ஷைத்தான் சிரிக்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2747).

கொட்டாவி சோம்பலுக்கான அறிகுறியாகும். அளவுக்கதிகமாக உண்பதாலும், பருகுவதாலும் உற்சாகம் இழந்து சுறுசுறுப்பின்றி சோம்பல் நிலை ஏற்படும். ஒருவருக்குக் கொட்டாவி வரும்போது அவர் “ஹா”வென வாயைப் பிளப்பதைப் பார்க்க சற்று அருவருப்பாகவே இருக்கும். இதனால் கொட்டாவி வரும்போது கையை வைத்து வாயை மறைத்துக் கொள்ள வேண்டும்.

“உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து (மறைத்து) அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழை(ய முயல்)கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5719). 

உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் முடிந்த வரை (அதைக்) கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழை(ய முயல்)கிறான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5721).

கொட்டாவி வருவதை இயன்றவரை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இயலாதெனில் கொட்டாவி ஏற்படும்போது வாய் பிளக்க நேர்ந்தால் கையை வைத்து வாயை மறைத்தால் போதும்; அது, ஷைத்தான் நுழைய தடுப்பாகிவிடும்!

கொட்டாவி தொழுகையைப் பாதிக்கும் என்பதற்கான சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! “கொட்டாவி ஏற்படுவதை இயன்றவரை கட்டுப்படுத்தட்டும்” என்கிற நபிமொழி, இயலாதவற்றுக்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம் என்பதை உணர்த்துகிறது.

உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளதுபோல், கொட்டாவி வந்தால் அடக்கக்கூடாது என்பதற்கு நிறுவப்பட்ட அறிவியல் சான்று ஏதுமில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.