சுன்னத் தொழுகைகள்

Share this:

ஐயம்:-

அஸ்ஸலாமு அலைக்கும்.
சுன்னத் தொழுகைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் விளக்கினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன், ஜமீல் பாபு (மின்னஞ்சலின் இரண்டாம் பகுதி)

தெளிவு:-

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

இஸ்லாம் மார்க்கத்தின் கடமையான அமல்களில் தொழுகை முதன்மையானது. கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றிட வேண்டும். கடமையான தொழுகைகளை எந்தெந்த நேரத்தில் தொழுதிட வேண்டும் என்கிற விபரங்களை முந்தைய பதிவில் கண்டோம். பார்க்க: எந்த நேரத்தில் என்ன தொழுகை?

கடமையான தொழுகைக்கு முன்னரும் பின்னரும் சில உபரியானத் தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். இந்த உபரியான தொழுகைகளை ”சுன்னத்” தொழுகை என்று கூறுவோம். சுன்னத்தான தொழுகை என்று அலட்சியப்படுத்தாமல் உபரியான தொழுகைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால், கடமையான தொழுகைக்கு ஈடான நன்மைகள், அல்லாஹ் நாடினால் சுன்னத்தான தொழுகைக்கும் கிடைக்கும்! சுன்னத்தான தொழுகை கடமையான தொழுகைக்குப் பகரமாகச் சமன் செய்யப்படும் என்பதை அறியத்தரும் நபிமொழி:    

நான் மதீனாவுக்குச் சென்றபோது, “இறைவா! எனக்கு நல்ல தோழரை எளிதில் கிடைக்கச் செய்வாயாக!” என்று பிரார்த்தனை செய்தேன். அபூஹுரைரா (ரலி) அவர்களின் நட்பைப் பெற்றேன். நல்ல நட்பை வழங்குமாறு அல்லாஹ்விடம் நான் கேட்டதை அவரிடம் தெரிவித்தேன். நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைக் கூறுங்கள். அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கலாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அதற்கு,”மறுமை நாளில் ஒரு மனிதனின் செயல்களில் தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சரியாக இருந்தால் அவன் வெற்றியும் ஈடேற்றமும் அடைவான். அது சீர்கெட்டிருந்தால் அவன் இழப்பும் துன்பமும் அடைவான். அவனது கடமைகளில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் ‘எனது அடியானிடம் ஏதேனும் உபரியான தொழுகைகள் உண்டா எனப் பாருங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். கடமைகளில் ஏற்பட்ட குறைவு, அவற்றின்  மூலம் நிறைவு செய்யப்படும். ஏனைய எல்லா வணக்கங்களும் இவ்வாறே அமையும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

– அறிவிப்பவர் ஹுரைஸ் (ரஹ்) (நூல்கள் – திர்மிதீ 378, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்).

மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களில் குறைவு ஏற்பட்டால் அவை உபரியான அமல்களைக் கொண்டு நிறைவு செய்யப்படும். எனவே, சுன்னத்தான அமல்களால் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.

கடமையான தொழுகைக்கு முன், பின் சுன்னத்தான தொழுகைகள்

“ஒரு நாளின் இரவிலும் பகலிலும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுபவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற, நான் செவியேற்றிருக்கிறேன்.

– அறிவிப்பவர் உம்முஹபீபா (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 1198, 1199, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள்; லுஹ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள். மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள். ஆகிய சுன்னத்தான பன்னிரெண்டு ரக்அத்களை யார் தொடர்ந்து தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் ஓர் இல்லத்தைக் கட்டுகிறான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

– அறிவிப்பவர் உம்மு ஹபீபா (ரலி) (நூல்கள் – திர்மிதீ 379, இப்னுமாஜா).

அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் அறிவிக்கும் இதே ஹதீஸ் நஸயீ நூலின் பதிவில், “அஸருக்கு முன் இரண்டு ரக்அத்கள்” என்று கூடுதலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. “இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்” என்பது இடம்றெவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனது வீட்டில் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு(ஃபர்ளு)த் தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு மஃக்ரிபு(ஃபர்ளு)த் தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ருத் தொழுகையும் அடங்கும். இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉம் ஸஜ்தாவும் செய்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉம் ஸஜ்தாவும் செய்வார்கள். ஃபஜ்ரு நேரம் வந்து விட்டால் (ஃபஜ்ரின் முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

– அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் – முஸ்லிம் 1201).

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்களும் மஃக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் (சுன்னத்) தொழுதேன். மஃக்ரிப், இஷா, ஜுமுஆ (ஆகியவற்றின் சுன்னத்) தொழுகைகளை நபி (ஸல்) அவர்களுடன் அவர்களது இல்லத்திலேயே தொழுதேன்.

– அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (நூல்கள் – புகாரி 937, முஸ்லிம் 1200)

மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் எனவும், ஜும்ஆத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் எனவும் பதிவாகியுள்ளது. “ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள்” என்பது இடம்பெறவில்லை.

கடமையான தொழுகைக்கு முன்-பின் சுன்னத்தான தொழுகைகள் முறையே:

  • ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள்.

  • லுஹருக்கு முன் குறைந்தது இரண்டு ரக்அத்கள்; கூடுதலாக நான்கு ரக்அத்கள். லுஹருக்குப் பின் இரண்டு ரக்ஆத்கள்.

  • அஸருக்கு முன் இரண்டு ரக்அத்கள்.

  • மஃக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

  • இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

  • ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

தொழுதுகொள்ளலாம்.

இன்னும், ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை உண்டு, விரும்பியவர் அதைத் தொழுது கொள்ளலாம். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவற்றையும் தொழுதுகொள்ளலாம்.

”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறி விட்டு ”விரும்பியவர்கள் தொழலாம்” என்று மூன்றாம் முறை கூறினார்கள்.

– அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) (நூல்கள் – புகாரி 627, முஸ்லிம் 1522, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

நபி(ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள்’ என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, ‘இது விரும்புவோருக்குத் தான்’ என்றார்கள்.

– அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) (நூல்கள் – புகாரி 7368, அபூதாவூத், அஹ்மத்)

நாங்கள் மதீனாவில் இருந்தபோது, முஅத்தின் மஃக்ரிபுத் தொழுகைக்காக பாங்குச் சொல்லிவிட்டால் மக்கள் (நபித்தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.

– அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் – முஸ்லிம் 1521)

மேலும், பள்ளிவாசலில் நுழைந்து, அமர்வதற்கு முன் பள்ளிக் காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழும்படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். “நபி (ஸல்) அவர்கள் வெளியூர் பயணத்திலிருந்து திரும்பினால் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

“உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

– அறிவிப்பவர் அபூகத்தாதா (ரலி) (நூல்கள் – புகாரி 1163, முஸ்லிம் 1166)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடையே அமர்ந்திருந்த(ஒரு)போது நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். எனவே, நானும் (தொழாமல் அந்த அவையில்) அமர்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , “நீர் அமர்வதற்குமுன் ஏன் இரண்டு ரக்அத்கள் தொழவில்லை?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்களும் அமர்ந்திருந்தீர்கள்; மக்களும் அமர்ந்திருந்தார்கள் (எனவேதான் நானும் அமர்ந்துவிட்டேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு, “உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

– அறிவிப்பவர் அபூகத்தாதா (ரலி) (நூல் – முஸ்லிம் 1167)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில்தான் (ஊர்) திரும்புவது வழக்கம். அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பிறகு பள்ளிவாசலில் அமர்வார்கள்.

– அறிவிப்பவர் கஅப் பின் மாலிக் (ரலி) (நூல் – முஸ்லிம் 1171)  

இவை தவிர தினமும் இரவுத் தொழுகை பதினோரு ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்களை வித்ராகத் தொழுவார்கள்; அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் (அத்தஹியாத்துக்காக) உட்கார மாட்டார்கள்.

– அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் – முஸ்லிம் 1217)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள்.

– அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் – முஸ்லிம் 1218)

இவை அனைத்தும் நன்மைகளை அள்ளித்தரும் சுன்னத்தான தொழுகைகள்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

குறிப்பு: இஷ்ராக், ளுஹா போன்ற தொழுகைகள் பற்றிய விபரங்கள் இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.