மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத் தொழுகை உண்டா?

பதில்:

மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்தான தொழுகை தொழுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) ஆதார நூல் : இப்னு ஹிப்பான

''மஃக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃக்ரிபுக்கு முன் தொழுங்கள். மஃக்ரிபுக்கு முன் விரும்பியவர் தொழுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி), நூல்: புகாரி 1183

மேலும்

"ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் விரும்பியவர்கள் தொழலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)இ நூல்: திர்மிதி 170

இந்த ஹதீஸின்படி பொதுவாகக் கடமையான ஐவேளைத் தொழுகைகளின் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

நான் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் சென்று, ''அபூ தமீம் மஃக்ரிபுக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம்'' என்று விடையளித்தார்கள். ''இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்?'' என்று நான் கேட்டேன். ''அலுவல்களே காரணம்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மர்ஸத் பின் அப்தில்லாஹ்இ நூல்: புகாரி 1184

இதிலிருந்து மஃக்ரிப் தொழுகைக்கு முன்னும் சுன்னத்தான தொழுகை உண்டு என்பதை அறியலாம்.

இறைவன் மிக அறிந்தவன்.

இதை வாசித்தீர்களா? :   ஸஜ்தாக்களின் இடையே சிறு இருப்பில் ஓத வேண்டியதென்ன?