கணவனின் சம்பாத்தியத்தின் மீது மனைவிக்கான உரிமை என்ன?

கணவனைத் தவிர வேறு எவ்வழியிலும் தனக்கு பணவரவு இல்லாத ஒரு பெண்ணிற்கு கணவனின் சம்பாத்தியத்தின் மீதான உரிமை என்ன? ஆதாரத்துடன் பதில் தர இயலுமா? – முஸ்லிம் பெண்.

பதில்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).

இஸ்லாத்தைத் தெளிவாக விளங்கி பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியைக் கேட்ட சகோதரி முஸ்லிம் பெண் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.

சகோதரி கேட்டிருக்கும் கேள்வி, இஸ்லாத்தில் கணவனைத் தவிர வேறு வழிகளில் ஒரு பெண்ணிற்கு வருமானம் உண்டெனில் கணவனின் சம்பாத்தியத்தின் மீது அப்பெண்ணிற்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற ஒருநிலை உள்ளது போன்று தோற்றமளிக்க வைக்கின்றது.

ஆனால் இஸ்லாத்தில் அவ்வாறு இல்லை.

திருமணத்திற்குப் பின் குடும்பத்தின் பொறுப்புதாரியாக ஆணையே அதாவது கணவனையே இஸ்லாம்சுட்டிக் காண்பிக்கின்றது.

ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.” (புகாரி)

இங்கு ஆணின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் என குடும்பத்தின் மற்ற அனைத்து அங்கத்தவர்களையும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இதில் மனைவியும் அடங்குவாள் என்பதைத் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

குடும்பத்தினரின் தேவைகளை அக்குடும்பத்தின் பொறுப்புதாரியான ஆண் சரிவர நிறைவேற்றவில்லை எனில் நாளை மறுமையில் அதற்குரிய நியாயமான காரணங்களை சரியான முறையில் தெரிவிக்கும் வரை இறைவன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவான் என இஸ்லாம் கடுமையாக ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

எனவே ஓர் ஆண் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை நல்ல முறையில் பராமரிக்கும் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து அவ்வளவு எளிதில் விலகிச் சென்றுவிட முடியாது. மனைவிக்கு வருமானம் வரும் வேறு வழிகள் இருப்பினும் (குறிப்பாக மனைவி தனியாக வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதாக இருந்தாலும்) குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றும்/பராமரிக்கும் பொறுப்பு ஆணுக்கு இருப்பதால், மனைவிக்குத் தேவையானதை செய்து கொடுப்பதும் ஆணின்பாற்பட்டதாகும்.

எனவே கேள்வியைப் பொதுவாக இவ்வாறு வைத்துக் கொள்ளலாம்: பெண்களுக்கு அவர்களின் கணவனின் சம்பாத்தியத்தின் மீதான உரிமை என்ன?

இக்கேள்வியைத் தொடர்புபடுத்தி திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

“கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” (திருக்குர்ஆன் 2:228)

பொதுவாக ஒரு பெண்ணிற்கு தனியாக வேறுவழிகளில் வருமானம் இருந்தாலும் இல்லையெனினும் அவர்களின் கணவர்களின் சம்பாத்தியங்களின் மீதும் அவர்களை தடுக்க முடியாத உரிமை அவர்களுக்கு உண்டு என்பதற்கு நேரடி ஆதாரம் இதுவாகும்.

ஆனால் அதே நேரம் தனக்கு கணவனின் மீது இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி கணவனின் அனுமதியின்றி அவனது சம்பாத்தியத்தை எடுத்து செலவழிக்க மனைவியை இஸ்லாம் தடுக்கின்றது.

இதை வாசித்தீர்களா? :   நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, “உணவையுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது’ என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ 1789, ஸுனன் அபூ தாவூத் 3565).

இஸ்லாம் ஒவ்வொருவர் மீதும் சில பொறுப்புகளைச் சுமத்தியிருக்கிறது. அந்தவகையில் பெண்கள் மீதும் சில பொறுப்புக்கள் உள்ளன. அந்தப் பொறுப்புகளுக்கு அவர்கள் பதில் கூற வேண்டும் என்பதற்காகவே கணவனின் சம்பாத்தியத்தில் மனைவிகளுக்கு மறுக்க முடியாத உரிமை இருந்த போதிலும் கணவனின் அனுமதியின்றி அவனது சம்பாத்தியத்திருந்து செலவழிக்க இஸ்லாம் அவர்களை தடுக்கின்றது.

இஸ்லாம் ஒவ்வொருவர் மீதும் சில பொறுப்புகளைச் சுமத்தியிருக்கிறது. அந்தவகையில் பெண்கள் மீதும் சில பொறுப்புக்கள் உள்ளன. அந்தப் பொறுப்புகளுக்கு அவர்கள் பதில் கூற வேண்டும் என்பதற்காகவே கணவனின் சம்பாத்தியத்தில் மனைவிகளுக்கு மறுக்க முடியாத உரிமை இருந்த போதிலும் கணவனின் அனுமதியின்றி அவனது சம்பாத்தியத்திருந்து செலவழிக்க இஸ்லாம் அவர்களை தடுக்கின்றது.

“ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்திற்கு பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்” (புகாரி).

ஒருவேளை ஆண்கள் தங்களது குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து அதற்காக செலவு செய்ய முன்வராத பட்சத்தில் அவர்களின் அனுமதியில்லாமலேயே அவசியத் தேவைகளுக்கு அவர்களின் சம்பாத்தியத்தை மனைவி பயன்படுத்தலாம். இதனை நபிமொழியில் வரும் ஒரு சம்பவம் எடுத்தியம்புகின்றது.

ஒருமுறை அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் மனைவி, ஹிந்த்(ரலி) நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து ”என் கணவர் கருமியாக இருக்கிறார். அவருடைய பணத்தை எடுத்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?” என்று கேட்கிறார்.

”நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் அதற்கு பதிலளித்தார்கள். (புகாரி)

இங்கு குடும்பத்தினருக்கு செலவளிக்கும் காரியத்தில் நபித்தோழர் அபூ சுஃப்யான்(ரலி) அவர்கள் சற்று அதிக கட்டுப்பாட்டுடன் இருந்தபொழுது அவரின் அனுமதி பெறாமலேயே தனது குடும்பத்தினரின் தேவைகளுக்காக அவரின் சம்பாத்தியத்திலிருந்து எடுத்து செலவழிக்க அவரின் மனைவிக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்குகின்றார்கள்.

ஆனால் அதில் அவர்கள் வைக்கும் ஒரு நிபந்தனை “அது நியாயமான அளவாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்”.

இதிலிருந்து கணவனின் சம்பாத்தியத்தை அவர் பராமரிக்க வேண்டிய குடும்பத்திற்காக அவர் செலவு செய்யாத பட்சத்தில் அவரின் அனுமதியின்றி நியாயமான அளவு எடுத்து மனைவி செலவு செய்வதில் எவ்வித குற்றமும் இல்லை என்பதும் அது அவர்களின் உரிமை தான் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

குறிப்பு: ‘முஸ்லிம் பெண்’ எனும் சகோதரி மாலையில் ஒரு விடியல் எனும் கதையின் பின்னூட்டத்தில் வைத்துள்ள கேள்விகளில் ஒன்றுக்கான பதில் இது. அவரது பிற கேள்விகளுக்கும் இன்ஷா அல்லாஹ் விரைவில் இயன்றவரை தெளிவான பதில்களை அளிக்க இருக்கிறோம்.

இதை வாசித்தீர்களா? :   இச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா? நோன்பு கூடுமா?

அந்தக் கேள்விகளுக்கு அதே ஆக்கத்தில் அழகிய விளக்கம் அளித்த சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.