112 சவரன் நகைகளை ஏற்கவோ? மறுக்கவோ?

Share this:

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …

அன்பான சகோதரர்களுக்கு,

என் நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம் செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் புனித மிக்க ரமலான் மாதத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் எனக்கு இருக்கும் சில ஐயங்களைப் பகிர்ந்து, அதற்கான மார்க்க விளக்கங்களைப் பெற விரும்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.

அறியாமைக் காலத்தில் இருந்த நாட்களில் எனக்காக என் பெற்றோர் சேமித்து வைத்திருந்த நகைகள், நிரந்தர வைப்புத் தொகை இப்படியாக என்று சமீபத்தில் என் உடன்பிறந்த இளைய சகோதரர் (அவருக்கும் அல்லாஹ் நேர்வழியை நாடட்டும்) ஒரு குறிப்பிட்ட தொகையையும், 112 சவரன் நகைகளையும் என்னிடம் கொடுத்தார். நான் வாங்க மறுத்து விட்டேன். அவரும் வலுக்கட்டாயமாக, “இது தந்தை உனக்காகச் சேர்த்து வைத்தது. எனவே உனக்கே உரியது” என்று சொல்லி என்னிடமே விட்டுச் சென்று விட்டார். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவை என்னிடமே இருக்கின்றன.

ஐயம் – 1
இதனை இப்போது நான் ஏற்றுக் கொள்ளலாமா அல்லது மறுத்திடணுமா ?

ஐயம் – 2
ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக அந்தத் தங்கத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி என்றால் எனக்காக எனச் சொல்லி என் தந்தை சேர்த்து வைத்த காலத்திலிருந்து ஜக்காத்தைக் கணக்கிட வேண்டுமா? அல்லது என்னுடைய கைகளுக்கு கிடைத்த நாளில் இருந்து கணக்கிட வேண்டுமா?

ஐயம் – 3
எனக்குரியது இல்லை எனும் பட்சத்தில் ஒரு முஃமினாக நான் என்ன செய்ய வேண்டும்?

தெளிவான விளக்கம் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையில் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நம் அனைவரின் நற்கருமங்களையும் செயல்களை பொருந்திக் கொள்வானாக.

இப்படிக்கு,
உங்கள் சகோதரி
ஆமினா அப்துல்லாஹ் (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:-

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…

பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சொத்துகள், அந்தச் சொத்து்கள் மீதான மற்ற உடன் பிறப்புகள் – சகோதரர்கள் சகோதரிகள் நியாயமான ஆட்சேபணை தெரிவிக்காத வரையில் பெற்றோர்களால் எந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்டதோ அவை அவருக்குரியதே!

”இது தந்தை உனக்காகச் சேர்த்து வைத்தது; உனக்கே உரியது” என்று சகோதரர் ஒப்படைத்து விட்டபின் ரொக்கத்தையும் நகைகளையும் வாங்கிக் கொள்வதில் தவறேதும் இல்லை. வாங்கியபின் 112 சவரன் நகைகளும் குறிப்பிட்ட ரொக்கத் தொகையும் உங்களுடைய அனுபவத்துக்கு வந்துவிடுகிறது. ஆகவே, இந்த நகைகளுக்கும், ரொக்கத்திற்கும் நீங்கள் மட்டுமே முழு உரிமையுள்ளவராவீர்கள்.

ஐயம் – 1
இதனை இப்போது நான் ஏற்றுக் கொள்ளலாமா அல்லது மறுத்திடணுமா?

தெளிவு:-
தந்தை – மக்கள் உறவில் இருவரில் ஒருவர் முஸ்லிம் அல்லாதவராயின் சொத்துரிமையில் ஒருவருக்கொருவர் பங்கு கிடையாது. ஆனால், ஒரு முஸ்லிம் தந்தையின் சொத்துகளில் முஸ்லிம் பிள்ளைகளுக்கும் முஸ்லிம் பிள்ளைகளின் சொத்துகளில் முஸ்லிம் பெற்றோருக்கும் உரிமையுள்ளது என்கிற ‘சொத்துரிமை’ அடிப்படையில் உங்கள் தந்தை, இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தவராயின் அவர் அளித்தவற்றை ‘சொத்துரிமை’ வகையில் அவரின் மகளாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்வதே நேர்மையாகும் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

இல்லாவிடினும், அதாவது தந்தை – மக்கள் வெவ்வேறு வாழ்க்கை நெறியைச் சார்ந்தவராயினும், இயல்பான பிள்ளைப் பாசத்தின் அடிப்படையிலான ‘அன்பளிப்பு’ முறையில் வழங்கினாலும் அவற்றை மறுத்தலாகாது.

ஐயம் – 2
ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக அந்தத் தங்கத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி என்றால் எனக்காக எனச் சொல்லி என் தந்தை சேர்த்து வைத்த காலத்திலிருந்து ஜக்காத்தைக் கணக்கிட வேண்டுமா? அல்லது என்னுடைய கைகளுக்குக் கிடைத்த நாளில் இருந்து கணக்கிட வேண்டுமா?

தெளிவு:-
ரொக்கமும் நகைகளும் உங்களுக்கு மட்டும் சொந்தமானவை என உறுதியான நாளிலிருந்தே அவற்றுக்கான ஸகாத் தொகையைக் கணக்கிட்டுக் கொடுப்பது உங்கள் மீது கடமையாகிறது. அதற்கு முன்னர் அவை உங்களுக்குச் சொந்தமானவை என்பது உறுதிசெய்யப்படாத நிலையில் இருந்ததால், அன்றைய நாள்களில் ரொக்கத்திற்கும் நகைக்குளுக்கும் ஸகாத் கொடுப்பது உங்கள் மீது கடமை இல்லை. அவை உங்களுக்கென உரிமையாக்கப்பட்டு எப்போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதோ அன்றிலிருந்து அதற்கான ஸகாத்தைக் கணக்கிட்டு நீங்கள் கொடுத்தால் போதுமானது! கூடுதல் விபரங்களுக்கு: நகைகளுக்குரிய ஸகாத்தை யார் கொடுப்பது? எனும் நமது தளத்தின் பழைய பதிவைப் பார்வையிடவும்.

ஐயம் – 3
எனக்குரியது இல்லை எனும் பட்சத்தில் ஒரு முஃமினாக நான் என்ன செய்ய வேண்டும்? தெளிவான விளக்கம் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையில் இன்ஷா அல்லாஹ்.

தெளிவு:-
”ரொக்கமும் நகைகளும் எனக்குரியது இல்லை எனும் பட்சத்தில் நான் என்ன செய்யவேண்டும்?” எனும் இந்த மூன்றாவது கேள்வி மிக முக்கியமெனக் கருதவேண்டியுள்ளது. ரொக்கமும் நகைகளும் உங்களுக்குரியது இல்லை என்பதற்குத் தெளிவாக காரணத்தை நீங்கள் கூறவில்லை. அவற்றுக்கு நீங்கள் உரிமையாளர் ஆகமுடியாது என்றால் அவற்றுக்கு நியாயப்படி உரியவர்கள் யார்?/யாவர்? என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அப்படி அறிந்திராத நிலையாக இருந்தாலும் அவை சேரவேண்டிய உண்மையான உரிமையாளரை தேடிப் பிடித்து அவரிடம் ஒப்படைக்கலாம்!

தெரியாத நிலை நீண்டு நீடிக்குமெனில் ரொக்கத்தையும் நகைகளையும் பெற்றோரின் பெயரால் தர்மம் செய்துவிடலாம்!

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?” என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம்” என்றனர். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி 1388, 2760, 2762, முஸ்லிம் 1830, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.