இஸ்லாத்தில் பாகப்பிரிவினை குறித்த ஐயம்!

Share this:

ஐயம்:
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும் மரணித்து விட்டார். எங்கள் தந்தை சுயமாக எதுவும் சம்பாதிக்கவில்லை. எங்கள் பாட்டனாருடைய வயல், தோப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த அபரிமிதமான வருமானத்தின் மூலம் எங்கள் குடும்பம் செழிப்புடன் வாழ்ந்து வந்தது.
 

எங்கள் ஊரில் பெண்களுக்குச் சீதனமாக வழங்கப் படும் நகைகளோடு தனியாக ஒரு வீடும் சீதனமாகக் கொடுப்பது வழக்கம். சொத்துப் பிரிவினை என்று வரும்போது, பெண்களுக்கு வயல், தோப்புகளில் பங்கில்லை என்பதும் எங்கள் ஊர் வழக்கமாகும். அதற்குக் காரணம் ஆண்களுக்குப் பெற்றோர் வழியாக வீடு கிடைப்பதில்லை, மாறாக மனைவியின் வீட்டிலேயே ஆண்கள் வாழ்ந்துக் கொள்வர். இவ்வழக்கம் பன்னெடுங் காலமாக நடைமுறையில் உள்ளது.

எங்களின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்வதற்காக எங்கள் பாட்டனாரின் சொத்துகளில் பாதிக்கு மேல் விற்கப் பட்டன. தற்போது மீந்திருக்கும் எங்கள் பாட்டன் வழிச் சொத்தை நாங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். பலரும் பலவாறு பாகப் பிரிவினை செய்து கொள்ளக் கூறுகின்றனர்:

1. எங்களின் சகோதரிகளுக்குக் கொடுத்த வீடுகள் பாட்டன் வழிச் சொத்துகளை விற்றுக் கிடைத்த பணத்தில் கட்டப் பட்டதால் அந்த நான்கு வீடுகளையும் மீந்திருக்கும் வயல், தோப்புகளையும் கணக்கிட்டு, மொத்தமாக்கி, ஆண்களுக்கு இரண்டு பங்கென்றும் பெண்களுக்கு ஒரு பங்கென்றும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

2. ஊர் வழக்கப்படி சகோதரிகளுக்குச் சொத்தாக வசதியான வீடு கிடைத்து விட்டதால் வயல், தோப்புகளை மூன்று சகோதரர்களும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. சகோதரிகளுக்குக் கொடுக்கப் பட்ட வீடு சீதனத்தில் அடங்குவதால் மீந்திருக்கும் வயல், தோப்புகளிலும் அவர்களுக்குப் பங்கு உண்டு.

இந்நிலையில் எங்கள் பாட்டன் வழிச் சொந்தாக மீந்திருக்கும் வயல், தோப்புகளை நாங்கள் எவ்வாறு பாகப் பிரிவினை செய்து கொள்வது என்பதை இஸ்லாத்தின் அடிப்படையில் விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன்.

-எம்.ஏ.ஏ – அதிராம்பட்டினம்

தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்…

கேள்வியில் அடிப்படையாகவே சில தவறான கருத்துகள் இருக்கின்றன. அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் அவற்றுக்கான விளக்கத்தை முதலில் பார்ப்போம்.

1. ''இது எங்கள் பாட்டன் சொத்து'' என்று கேள்வியில் உள்ளது. பாட்டன் சொத்துகள் பேரப்பிள்ளைகளுக்கு என இந்திய சட்டம் ஒரு வகுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை நியாயப்படுத்தும் விதமாகவே சில ஊர்களில் ''இது எங்கள் பாட்டன் சொத்து'' என அழுத்தமாக சில முஸ்லிம்கள் சொல்லி வருகிறார்கள். இது இஸ்லாத்தில் இல்லாத கருத்து என்பதை விளங்க வேண்டும்.

தந்தையின் தந்தை பாட்டனாராவார். அந்தப் பாட்டனாருக்கு வாரிசுகள் இல்லையென்றால் பேரப்பிள்ளைகள் என்ற உறவும் இல்லை. பாட்டானாருக்கு மகன் என்ற வாரிசு இருந்து, அந்த மகனின் வாரிசுகளே தந்தையின் தந்தையைப் "பாட்டனார்" என்று அழைக்கவும், பாட்டன்-பேரன் என்ற இரத்த உறவையும் ஏற்படுத்தும்.

''எங்கள் தந்தை எதுவும் சுயமாக சம்பாதிக்கவில்லை'' என்று குறிப்பிடுவதே தவறு. உங்கள் தந்தை, அவரின் தந்தையின் சொத்துக்கு வாரிசு ஆவார். பிறகு நீங்கள், உங்கள் தந்தைக்கு வாரிசுதாரர்களாகி தந்தையின் சொத்துக்கு உரிமையாளர்களாக வருவீர்கள். உங்கள் தந்தை இல்லை என்றால் நீங்களும் இல்லை! அதாவது உங்கள் பாட்டனாருக்கு வாரிசு இல்லாமல் போயிருந்தால் நீங்களும் இல்லை! இதுதான் எதார்த்தம்.

ஊர் வழக்கம்

"கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).

ஒருவர் மரணித்த பின் அவரின் சொத்துகளை அடைய அவரது வாரிசுதாரர்களே உரிமை பெற்றவர்கள் என்பதை மேற்கண்ட நபிமொழி மிகவும் தெளிவாக விளக்குகிறது.

பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற – நிறைந்த/குறைந்த சொத்துகளில் ஆண்மக்களுக்குப் பங்குண்டு; பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற – நிறைந்த/குறைந்த சொத்துகளில் பெண்மக்களுக்கும் பங்குண்டு. இது அல்லாஹ்வால் விதிக்கப் பட்டதாகும். (பார்க்க: 004:007 திருமறை வசனம்).

ஒருவருடைய சொத்துக்கு ஆண் மக்கள் வாரிசுரிமை பெறுவதைப்போல் பெண் மக்களும் வாரிசுரிமை பெற்றவர்களே என்று மேற்காணும் இறைவசனம் கூறுகிறது.

எனவே மரணித்தவரின் சொத்துக்கள் அவரின் ஆண்/பெண் பிள்ளைகளையே சேரும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. ஆனால், ஊர் வழக்கம் என இஸ்லாத்திற்கு முரண்பட்ட சட்டங்களை முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்துவது வருந்ததக்க விஷயமாகும்.

ஊர் வழக்கம் என்று ஏற்படுத்திக் கொண்டு பாகப்பிரிவினை எனும் பெயரில் கண்ணுக்குத் தெரிந்தே பெரும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. ஊர் வழக்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த ஒட்டுமில்லை! அதிலும், "பெண்களுக்குத் திருமணச் சீதனமாக நகைகளும் தனியாக வீடும் கொடுத்தே ஆக வேண்டும்" என்ற ஊர் வழக்கம் இஸ்லாத்துக்கு முற்றிலும் எதிரானது.

திரண்ட செல்வங்களைக் கொண்ட ஒரு செல்வந்தருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தால் தந்தையின் அனைத்து சொத்துகளுக்கும் (மனைவி, தாய், தந்தையின் பாகம் போக) ஆணுக்கு இரண்டு, பெண்ணுக்கு ஒன்று என இருவரும் வாரிசுக்குரியவர்களாவார்கள். இதில் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் கொஞ்சம் நகைகளும் அவளுக்கென ஒரு வீடும் (ஊர் வழக்கப்படிக்) கொடுத்தால் போதும் என்று 'ஊர் வழக்கத் தீர்ப்பு'ச் சொன்னால், தந்தையின் திரண்ட சொத்துக்கு நேரடி வாரிசாகிய அந்தப் பெண்ணுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கீடு பாகத்தை பிரித்துக் கொடுக்காமல் ஏதோ கொஞ்சம் சொத்துக்களை மட்டும் கொடுத்து அவள் ஏமாற்றப்படுகிறாள்.

செல்வமே இல்லாத, அல்லது குறைந்த அளவே செல்வத்தைப் பெற்றிருக்கும் ஒரு தந்தைக்கு ஒரு மகனும், மகளும் இருந்தால் அப்போதும் பெண்ணுக்கு சீதனமாக நகைகளும் அவளுக்கென ஒரு வீடும் (ஊர் வழக்கப்படிக்) கொடுக்க வேண்டும் என்றால் தன்னிடம் இல்லாத சொத்துக்களின் தகுதிக்கு மீறி தனது பெண்ணுக்குத் திருமண சீதனமாகக் (கடன் பட்டாவது) கொடுக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படும்போது இங்கு தந்தையும் மகனும் ஏமாற்றப் படுகிறார்கள்.

இப்படி இரு பக்கமும் பாதகத்தை ஏற்படுத்தும் இச்செயல்களை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. மாறாகக் கண்டிக்கிறது. ஒரு தந்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டப் பிள்ளைகள் இருந்தால் அவர்களிடையே சமமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பிள்ளைக்குக் கொடுப்பது போலவே எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இது மட்டுமின்றி,

"ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ, அபூதாவூத்)

பிள்ளைகளிடம் பாராபட்சம் காட்டக் கூடாது என மேற்கண்ட நபிமொழி எச்சரிக்கிறது. இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு ஊர் வழக்கம் எனும் பெயரில் ஆண் பிள்ளைக்குச் சாதகமாகவும், பெண் பிள்ளைக்குப் பாதகமாகவும் பாகப் பிரிவினைப் பங்கீடு செய்வது நியாயமன்று.

வாரிசு உரிமை
 

கேள்வி: நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும் மரணித்து விட்டார்.


இறந்தவருக்கு ஆண் மக்கள் மூவர், பெண் மக்கள் நால்வர் என எழுவரும் தந்தையின் சொத்துக்கு நேரடி வாரிசுதாரர்கள் ஆவீர்கள். தாய் மரணித்து விட்டதால் கணவரின் சொத்தில் மனைவிக்குச் சேர வேண்டிய பங்கு என்பது இல்லை.
 

கேள்வி: எங்களின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்வதற்காக எங்கள் பாட்டனாரின் சொத்துகளில் பாதிக்கு மேல் விற்கப் பட்டன.


தந்தையின் சொத்தில் பாதிக்கு மேல் பெண் மக்களுக்குக் கொடுத்து விட்டு ஆண் மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள், அதாவது பாகப் பிரிவினையின் வாரிசு உரிமையில் இறைவரம்பு மீறப்பட்டுள்ளது என்பது தெளிவு! நடந்த தவறுக்கு காரணமானவர் யார் என்றோ எந்தச் சூழலில் தவறு நிகழ்ந்தது என்றோ ஆராயாமல், தொடர்ந்து அதில் நீடிக்காமல், நடந்துவிட்ட தவறுதனை மனமுவந்துத் திருத்திக்கொள்வதே முஸ்லிம்களுக்கு அழகு.

தீர்வு:

சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு வீடுகளையும் அதோடு மீதம் இருக்கும் தந்தையின் அசையாச் சொத்துக்கள், அசையும் சொத்துக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இன்றைய நிலவரப்படி மதீப்பீடுக்குட்படுத்தி வரும் மொத்த சொத்துக்களில் ஆண் மக்களுக்கு இரண்டு பாகமும், பெண் மக்களுக்கு ஒரு பாகமும் என பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

இதுவே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள வாரிசு உரிமையாகும்.
 

கேள்வி: எங்களின் சகோதரிகளுக்குக் கொடுத்த வீடுகள் பாட்டன் வழிச் சொத்துகளை விற்றுக் கிடைத்த பணத்தில் கட்டப் பட்டதால் அந்த நான்கு வீடுகளையும் மீந்திருக்கும் வயல், தோப்புகளையும் கணக்கிட்டு, மொத்தமாக்கி, ஆண்களுக்கு இரண்டு பங்கென்றும் பெண்களுக்கு ஒரு பங்கென்றும் பிரித்துக் கொள்ள வேண்டும்.


"இரண்டு பெண்களின் பாகம் போன்று ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்" (மேலும் பார்க்க: 004:11 திருமறை வசனம்)

பாகப் பிரிவினை சட்டம் இறைவன் ஏற்படுத்திய வரம்புகள் என்பதை முஸ்லிமான ஒவ்வோர் ஆணும், பெண்ணும் உணர்ந்திடல் வேண்டும். சொத்துப் பங்கீடு செய்வதில் மனித மனம் விரும்பும் கருத்துக்கு எவ்வித மதிப்பும் இல்லை! குடும்பச் சொத்துகளில் நேர்மையான பங்கீடு செய்யவில்லையெனில் அது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி தலைமுறையாகப் பகைமையை வளர்த்துவிடும்.

''உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர்கள் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்'' (அல்குர்ஆன் 004:011)

''இவை அல்லாஹ்வின் வரம்புகள்'' (அல்குர்ஆன் 004:013)

திருமறை கூறும் பாகப் பிரிவினைச் சட்டம், அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளனான எல்லாம் வல்ல இறைவனால் இயற்றப்பட்டது. வாரிசு உரிமை பெற்ற உறவுகளில் யார் யாருக்கு எவ்வளவு பங்கீடு வழங்க வேண்டும் என்பதை இறைவன் விதித்திருக்கிறான். இச்சட்டங்கள் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 1400 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் இஸ்லாத்திற்கு எதிரான ஊர் வழக்கத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் எச்சரிக்கை பெற வேண்டும்.

''நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி'' (அல்குர்ஆன் 002:208)

என்ற வசனத்தை நினைவு கூருவோம். இறைவன் விரும்பும் வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.