குர் ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-3)

Share this:

ஐயம்:-

மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து?
– ரத்தக்கட்டியிலிருந்து (96:1-2).
– நீரிலிருந்து (21:30).
– கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37) .

(கடந்த பதிவின் தொடர்ச்சி)

தெளிவு:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அவன் மனிதனை அலக்கிலிருந்து படைத்தான்” (அல்குர்ஆன் 96:2 மேலும் படிக்க 22:5, 23:14, 40,67, 75:38 ஆகிய வசனங்கள்).

”அலக்” என்கிற அரபு வார்த்தைக்கு உறைந்த இரத்தக் கட்டி, அட்டைப் பூச்சி, பற்றிப் பிடித்துக்கொண்டு தொங்கும் பொருள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கோர்த்துக் கொள்ளல் என்றெல்லாம் பல பொருள்கள் உள்ளன.


இறைமறை 96:2வது வசனம் ”மனிதன் இரத்தக் கட்டியிலிருந்து படைக்கப்பட்டான்” என்று கூறுவதாகக் கேள்வியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ”அலக்” என்ற வார்த்தைக்கு சில மொழிபெயர்ப்பாளர் ‘இரத்தக்கட்டி’ என்று தமிழில் மொழியாக்கியுள்ளனர். அலக் என்ற வார்த்தைக்கு இரத்தக்கட்டி என்று அர்த்தம் இருந்தாலும், கருவளர்ச்சிக் கட்டத்தின் எந்த நிலையிலும் இரத்தக் கட்டி என்ற அம்சம் இல்லை என்பது அறிவியலின் உறுதியான முடிவு. ”அலக்” என்பதற்கு, ”பற்றிப் பிடித்துக் கொண்டு தொங்கும் பொருள்” என்பதே சரியான கருத்து. கருத்தரித்ததும் அந்தக் கரு, கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு தட்டையான பொருளாக மாறி, கருவறைச் சுவற்றோடு அப்பிக் கொள்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை மருத்துவத்தில் (PLACENTA – நச்சுக் கொடி) சூலகத்தின் கருவக ஒட்டுப் பகுதியென்று குறிப்பிடுகின்றனர்.

வளரும் கருவுக்கு அது குழந்தையாகி வெளியே வரும்வரை சுவாசப்பை, ஈரல், சிறுநீரகம் எல்லாமே இந்த ”பிளஸென்டா” தான்! எனவே ஒரு குழந்தை உருவாவதற்குரிய எல்லாமாகச் செயல்படும் பிளஸென்டாவைத்தான் இறைவன் இங்கே ”அலக்” என்று குறிப்பிடுகின்றான். ”அலக்” என்பதற்கு ”இரத்தக் கட்டி” என்றும் அர்த்தம் இருந்தாலும் அப்பொருள் இங்குப் பொருத்தமாக இல்லை என்பதால் அலக் என்பதை இரத்தக்கட்டி என்று மொழியாக்கம் செய்வதை சில மொழிபெயர்ப்பாளர்கள் தவிர்த்துக் கொண்டனர்.

அவனே தான் படைத்த ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். மனிதனின் படைப்பைக் களி மண்ணில் இருந்து ஆரம்பித்தான்.

பின்னர், அவனது சந்ததியை அற்பமான இந்திரியத் துளியிலிருந்து உண்டாக்கினான்.

பின்னர், அவனை ஒழுங்குற அமைத்துத் தனது ரூஹிலிருந்து அதில் ஊதினான்… (அல்குர்ஆன் 32:7-9).

அவன் மனிதனை இந்திரியத் துளியிலிருந்து படைத்தான்… (அல்குர்ஆன் 16:4, மேலும் படிக்க,18:37, 35:11, 36:77, 40:67, 53:46, 75:37).

அற்மான நீரிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

பின்னர் அதனை குறிப்பிட்ட காலம்வரை பாதுகாப்பான இடத்தில் நாம் வைத்தோம். வரையறை செய்வோருள் சிறந்த நாமே (அதனை) வரையறுத்தோம்.
(அல்குர்ஆன் 77:20-23).

எப்பொருளிலிருந்து (அல்லாஹ்) அவனைப் படைத்தான்?

இந்திரியத் துளியிலிருந்து அவனைப் படைத்து, அவனுக்கு (உரியதை) வரையறுத்தான் (அல்குர்ஆன் 80:18,19).

எனவே, மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை(ச் சிந்தித்து)ப் பார்க்கட்டும். குதித்துப் பாயும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து வெளிப்படுகின்றது (அல்குர்ஆன் 86:5-7).

இறைமறையின் 16:4, 18:37, 22,5, 23:13, 35:11, 36:77, 40:67, 53:46, 76:2, 80:19 ஆகிய வசனங்கள், “மனிதன் நுத்ஃபாவிலிருந்து – இந்திரியத் துளியிலிருந்து – படைக்கப்பட்டான்” என்று கூறுகின்றன.

ஆணின் இந்திரியத் துளியிலிருந்து லட்சக் கணக்கான உயிரணுக்களில் ஒரே ஓர் உயிரணு மட்டும் நீந்திச் சென்று பெண்ணின் சினை முட்டையை உடைத்துச் சேர்ந்து கோர்த்துக் கொண்டு, கருக் கொள்ளச் செய்கிறது. ஆண் பெண் இந்திரியக் கலவையைப் பற்றிக் குர்ஆன், ”கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாம் படைத்தோம்…” (அல்குர்ஆன் 76:2) என்று கூறுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலம்வரை கலப்பான இந்திரியத் துளியாக இருந்து பின்னர், அட்டைப் பூச்சியைப்போல் கருவறைச் சுவற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் ”அலக்” என்ற நிலைக்கு கருவளர்ச்சியின் செயலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்படுகின்றது.

கருவறையில் கருவளர்ச்சியின் படிநிலைகள்.

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களிமண் எனும் மூலத்திலிருந்து படைத்தோம்.
பின்னர்
(அவரது சந்ததியைப்) பாதுகாப்பான ஓரிடத்தில் நாம் இந்திரியத் துளியாக வைத்தோம்.
பின்னர், இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் அமைத்தோம்.
பின்னர், அந்த ‘அலக்’கை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்.
பின்னர், அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்.
பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்.
பின்னர் நாம் அதனை மாறுபட்ட
(மனிதப்) படைப்பாக்கினோம்.
அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவானான்.
(அல்குர்ஆன் 23:12-14)

மனிதர்களே! (மரணித்தபின்) எழுப்பப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர் ‘அலக்’கிலிருந்தும், பின்னர், அரைகுறை வடிவமான சதைப் பிண்டத்திலிருந்தும் உங்களைப் படைத்தோம். உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே (இதை விவரிக்கின்றோம்) குறிப்பிட்ட காலம்வரை நாம் நாடுபவற்றைக் கருவறைகளில் தங்கச் செய்கிறோம். பின்னர் சிசுவாக உங்களை வெளியேற்றுகின்றோம்… (அல்குர்ஆன் 22:5).

கருவறையில் கருவளர்ச்சியைக் குறித்து ஹதீஸ் விளக்கம்

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

பிறகு, அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – LEECH – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது.

பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது.

பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயல்களையும் அதன் வாழ்வாதார(நிர்ணய)த்தையும், அதனுடைய வாழ்நாளின் கால அளவையும், அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும்.  பிறகுதான் அதனுள் உயிர் ஊதப்படும். இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம்(தொலைவு) இருக்கும்வரை (நற்)செயல் புரிந்துகொண்டே இருப்பார். ஆனால் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் நரகவாசிகளின் செயலைச் செய்துவிடுவார் (அதன் விளைவாக நரகம் புகுவார்). (வேறு) ஒருவர், நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) இருக்கும்வரை (தீய)செயல் புரிந்துகொண்டே இருப்பார். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார் (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்).

– அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (நூல்கள் – புகாரி 3208, 3332, 6594, 6595, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

இந்திரியத் துளி, சினைமுட்டையுடன் சேராதவரை கருவைப் பற்றியப் பேச்சுக்கே இடமில்லை. ஆணின் இந்திரியத் துளியில் இருந்து, ஓர் உயிரணு ஊடுருவிச் சென்று பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்த பின்னரே கரு உருவாகி, கருவுற்ற சினை முட்டையின் கருவளர்ச்சிப் படிநிலைகளையே, கருவுக்கு இந்திரியத் துளி அடிப்படையாகவும் பின்னர், உறைந்த இரத்தக்கட்டி போன்று தோற்றமளிக்கும் கருக்கட்டி என்பது அடுத்த நிலையாகவும், பின்னர், தசைப் பிண்டம் அதற்கடுத்த நிலையாகவும்… அமைகின்றன என்று இறைமறை 22:5, 23:12-14 வசனங்கள் விவரிக்கின்றன.

அல்லாஹ், (தாயின்) கருவறையில் ஒரு வானவரை நியமிக்கிறான். அவர், ‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது, பற்றித் தொங்கும்) கருக்கட்டி இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு’ என்று (கரு வளர்ச்சியின் மாற்றங்களைக்) கூறிக் கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்கிட அல்லாஹ் விரும்பும்போது ‘இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? அல்லது நற்பாக்கியம் பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு?’ என்று வானவர் கேட்பார். அவ்வாறே (இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு), அது தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே எழுதப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் – புகாரி 6595).

குர்ஆன் அறிவியல் நூலல்ல என்றாலும், கருவியல் குறித்துக் குர்ஆன் முன்வைக்கும் சான்றுகள் அனைத்தும் அறிவியலுக்கு வழிகாட்டியாகவே அமைந்துள்ளன. கரு உருவாக்கம் எவ்வாறு நிகழ்கின்றது என்கிற எவ்வித அடிப்படை விஞ்ஞான அறிவும் இல்லாத காலத்தில் அருளப்பட்ட வான்மறை வசனங்களை இன்றைய நவீன விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகின்றனவே தவிர முரண்படவில்லை.

உயிரினத்தை நீரிலிருந்து அமைத்தோம்


நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்தே இருந்தன; நாமே அவ்விரண்டையும் பிரித்தோம்; உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து நாமே அமைத்தோம் என்பதையெல்லாம் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30).

மனிதன், விலங்கு, பயிர் ஆகிய உயிரினங்களின் உடலில் பெரும் பகுதி நீரால் ஆனது. உயிரணுக்களில் அதிகமான அளவு நீரால் ஆனது. உடலிலுள்ள அனைத்து செல்களையும் நீரே சூழ்ந்துள்ளது. சராசரி மனிதனின் உடல் எடை 60 கிலோ என்றால் அதில் 40 கிலோ நீர்தான். அதாவது உடலின் எடையில் மூன்றில் இரு பாகங்கள் தண்ணீரே.

மனிதனின் உடலிலுள்ள உயிரணுக்கள் எண்ணிலடங்கா வேதியியல் நடவடிக்கைகளைக் கொண்டே உயிர் வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்திற்கு மத்தியில் உயிரணுக்கள் இருந்தால்தான், இது சாத்தியமாகும். வெப்பம் குறிப்பிட்ட அளவைவிடக் கூடினாலோ குறைந்தாலோ ஆபத்துதான். ஆகவே, வெப்பத்தைத் துரிதமாக இழந்துவிடாத, அதே நேரத்தில் வேகமாக வெப்பத்தை ஈர்க்காத பொருளாலேயே உடல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நீரைத் தவிர வேறு பொருளுக்கு இந்தத் தனித்தன்மை கிடையாது.

இதனால்தான், மனித உடலை அதன் மூன்றில் இரு பகுதியை நீரால் இறைவன் அமைத்துள்ளான். நம் உடலில் நீர் மட்டும் இல்லை என்றால் உடலின் வெப்பம் சில நேரங்களில் கொதிக்கும் அளவுக்குப் போய்விடும். வேறுசில நேரங்களில் உறைந்துவிடும் அளவுக்கு வெப்பம் குறைந்துவிடும். இந்த இரு நிலைகளிலும் உடலிலுள்ள உயிரணுக்களின் இயக்கம் தடைப்பட்டு, மரணம் நிகழும்.

நீர் குளிர்ந்தால், அது உறைந்து பருமன் (Volume) அதிகரிக்கும்; அடர்த்தி (Dencity) குறையும். குளிர் காலத்தில் கடல் நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது எடுத்துக்காட்டாகும். அவ்வாறே நீர் வெப்பமடைந்தால் அடர்த்தி அதிகமாகும்; பருமன் சிறியதாகும்.

மேலும், வெப்பமானாலும் குளிர்ச்சியானாலும் நீரில் மெல்லவே பிரதிபலிக்கும். நீரில் உள்ள கனிமங்கள் மிக நுட்பமான வேதியியல் பொருட்களாக இருப்பதால் படிப்படியாகவே நீர் வெப்பத்தை கிரகிக்கும். அந்த வெப்பம் தணிவதானாலும் படிப்படியாகவே தணியும். இதனால் புவியின் காலநிலையை மென்மையானதாகவும் உயிரினம் வாழ்வதற்கு ஏற்றதாகவும் அமைக்கும் திறன் நீருக்குக் கிடைக்கிறது.

இங்கு ”உயிரினங்களை நீரால் அமைத்தோம்” என்பதைக் குறிக்க மூலத்தில் ”ஜஅல்னா” எனும் வினைச்சொல்லையே அல்லாஹ் ஆண்டுள்ளான். ஆனால், நீரிலிருந்து மனிதனைப் படைத்ததையும் (25:54) ஜீவராசிகளைப் படைத்ததையும் (24:45) அல்லாஹ் குறிப்பிடுகையில் ”ஃகலக” எனும் சொல்லை ஆண்டுள்ளான். இது ‘விந்து’ எனும் நீரைக் குறிக்கும்.

ஆனால், மனிதன், விலங்கு, பயிர் ஆகிய எல்லா உயிரினங்களையும் (ஹய்யு) நீரால் அமைத்தோம் என இங்கு (21:30) அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இங்கு ஆளப்பெற்றுள்ள ”ஜஅல்னா” எனும் சொல் பொதுமையைக் குறிக்கும். ”நீரால் அமைத்தோம்” என்றால், நீரிலுள்ள எந்த அம்சங்கள் மூலம் உயிர்வாழ்வது சாத்தியமாகுமோ அந்த அம்சங்களுடன் படைத்துப் பராமரிக்கிறோம் என்று பொருள். இது மனிதனுக்கும் பிற உயிரினங்களும் தவாரங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத் தக்கதாகும் (நன்றி: அருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்).

“குர் ஆனில் முரண்பாடுகளா?” தொடரும் இன்ஷா அல்லாஹ்.

முந்தைய பகுதிகள்:

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1)

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-2)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.