லெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா?

Share this:

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

என்னுடைய உறவினர் சார்பில் இக்கேள்வியை அனுப்புகிறேன். அவர் ஒரு வணிக நிறுவனத்தில் (Trading Companyயில்) அக்கவுண்ட்டண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களுக்கான பத்திரங்கள் (Letter of credits) தயாரிப்பது மற்றும் அவற்றிற்கான சான்றிதழ்கள் வழங்குவது ஆகியன அவரது பணிகளாகும்.

“வாடிக்கையாளர் தம் கடனை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறினால், கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியாகக் கணக்கிடப்பட்டு, கட்டணமாகச் சுமத்தப்படும்!” என்ற நிபந்தனைகளுடன் கூடிய பத்திரங்களை தயாரிப்பது கூடுமா?


அதே போன்று, இத்தகைய ஆவணங்களைத் தயாரிப்பதும், சான்றிதழ்களை அளிப்பதும் வட்டிக்கான பெரும் பாவத்தில் சேருமா? வட்டிக்கான கணக்கு எழுதுபவர், சாட்சியாளர் பற்றி அல்லாஹ் சபித்தவர் எனும் நிலையில் இவர் வருவாரா?

ஒரு அக்கவுண்ட்டண்ட் ஆன இவர் பணிக்கு எங்குச் சென்றாலும் இதே போன்ற பணிச்சூழலே உள்ள நிலையில், உங்களின் ஆலோசனை என்ன?

Sister In islam,
Gia sithara.

_____________

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

வட்டி வாங்குவதைத் தடைசெய்தும், மீறி வட்டி வாங்குவோரை எச்சரிக்கை செய்தும், கண்டித்தும் அருளப்பட்ட இறைமறை வசனங்களை அறிய வட்டி தடுக்கப்பட்ட வரலாறு படியுங்கள்.

வெறுமனே வட்டி என்று எழுதுவதாலோ, வெறுமனே இவ்வளவு கடன் தொகைக்கு இவ்வளவு வட்டி என்று கணக்கிடுவதாலோ வட்டியோடு தொடர்புடையதாக ஆகிவிடாது. ஆனால், செய்யும் தொழிலுடன் சம்பந்தப்படும்போது அதாவது – வட்டி வரவு … ரூபாய் என்று கணக்கு எழுதும்போது வட்டித் தொழிலில் ஈடுபட்டதாகிவிடும்.

உதாரணமாக: கடன் கொடுக்கல் வாங்கலை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும், உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருந்தாலும் அவற்றையும் எழுதிக் கொள்ளுங்கள், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 2:282) என்றெல்லாம் கூறும் இஸ்லாத்தின் அடிப்படையில், கொடுக்கல் வாங்கல் வட்டிக் கடனாக இருக்குமாயின் அதற்கான சட்டம் தலைகீழாக மாறிவிடுகின்றன!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபரையும், அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ”இவர்கள் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 3258, அஹ்மத்)

வட்டி வாங்குவோரை மட்டுமல்லாமல் வட்டி கொடுப்போர், வட்டிக் கணக்கு எழுதுவோர், வட்டிக் கடனுக்கு சாட்சியாக இருப்போர் அனைவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருப்பதுடன் பாவத்தில் இவர்கள் சமமானவர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

Letter of creditsஐப் பொருத்தவரை, வட்டி கலக்காதவை என்றும் வட்டி கலப்பவை என்றும் இருவகைகள் உள்ளன (விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன). கேள்வியில் கேட்டுள்ளபடி, வட்டிக்குக் கடன் கொடுக்கும் நிறுவனத்தில் கணக்கு எழுதுபவராக பணியாற்றும் கணக்கர், வட்டித் தொழிலுடன் நேரடியாக சம்பந்தப்படுகிறார். வாடிக்கையாளர் உரிய காலத்திற்குள் கடனைச் செலுத்தத் தவறினால், கடனுக்கான வட்டியின் தொகையை கடனாளியின் கணக்கில் பற்று வைப்பவர் கணக்கு எழுதுபவரே என்பதாலும், தடுக்கப்பட்ட வட்டியை ஊதியமாகப் பெறுவதாலும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி சாபத்துக்குரியவராக வட்டி அவரை ஆக்கிவிடும் ஆகவே, கடன்களுக்கான பத்திரங்கள் Letter of credits தயாரிப்பதில் தவறில்லை. அதில் வட்டிக் கணக்கு எழுதும் அக்கவுடெண்ட் வேலையாக இருந்தால் அதிலிருந்து விலகிக்கொள்வதே சாலச் சிறந்தது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு!

Letter of credit

லெட்டர் ஆஃப் கிரெடிட் என்றால் என்ன? வணிகர்களுக்கு இது எவ்வாறு பயன்படுகிறது? என்பதைத் தெரிந்து கொண்டால் இதில் வட்டி எப்படி சம்பந்தப்படுகிறது என்பதையும் அதை தவிர்க்க முடியுமா என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

ஓர் உதாரணம் பார்ப்போம்: சிங்கப்பூர் வணிகரான ஜோதி சென்னையிலிருக்கும் குமார் எனும் வணிகரிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிற்குச் சில பொருள்களை கொள்முதல் செய்ய விரும்புகிறார். இருவரும் முன்னரே அறிமுகமானவர்களல்லர் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்குமே கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. ‘நாம் சரக்கை ஏற்றி அனுப்பிய பிறகு ஜோதி பணம் அனுப்பவில்லை என்றால் என்ன செய்வது?’ என்று குமாருக்குத் தயக்கம். ‘நாம் பணத்தை அட்வான்சாக அனுப்பிய பிறகு குமார் சரக்கை அனுப்பவில்லை என்றால் என்ன செய்வது?’ என்பது ஜோதியின் தயக்கம்!

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான இருபக்கப் பாதுகாப்பு ஏற்பாடுதான் ‘லெட்டர் ஆஃப் கிரெடிட்’!

ஜோதி கணக்கு வைத்திருக்கும் தம்முடைய சிங்கப்பூர் வங்கிக்குச் சென்று, அவருக்குத் தேவையான சரக்குகளை குமார் அனுப்பும் பட்சத்தில் அதற்கான தொகை 10 லட்சத்தைத் தன்னால் கட்ட முடியும் என்ற உத்தரவாதத்தைத் தரும்படி கோருகிறார். அவரது கோரிக்கையின்படி சிங்கப்பூர் வங்கி, ஓர் ஆவணத்தைத் தயாரித்து, அதை சென்னையில் குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அனுப்பும். அந்த ஆவணம்தான் லெட்டர் ஆஃப் கிரெடிட்.

குமாருக்கும் ஜோதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கையின் எல்லா அம்சங்களும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும். விற்கப்படும் பொருள், எண்ணிக்கை, தரம், விலை, ஏற்றுமதி செய்ய வேண்டியது கப்பல் மூலமா? விமானம் மூலமா?, கால அளவு என எல்லாமே அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குமார் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: லெட்டர் ஆஃப் கிரெடிட் ஆவணத்தில் உள்ளபடி பொருள்களைத் தயார் செய்து கப்பலிலோ விமானத்திலோ ஏற்றிவிட்டு அவருடைய இன்வாய்ஸ், கப்பல் அல்லது விமான நிறுவனம் அளித்த ரசீது (பில் ஆஃப் லேடிங் அல்லது ஏர்வேபில்), முதலிய ஆவணங்களைக் கொண்டுபோய் அவர் கணக்கு வைத்திருக்கும் சென்னை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்கள் லெட்டர் ஆஃப் கிரெடிட்டில் குறிப்பிட்டபடி இருக்கின்றனவா என்பதைச் சென்னை வங்கி சரிபார்த்து, பிறகு அவற்றை ஜோதி கணக்கு வைத்திருக்கும் சிங்கப்பூர் வங்கிக்கு அனுப்பிவிடும்.

சிங்கப்பூர் வங்கி அவற்றைத் தன் பங்குக்குச் சரிபார்த்துவிட்டு ஜோதிக்குத் தகவல் அனுப்பும். உடன்படிக்கையில் உள்ளபடி ஜோதி 10 லட்சத்தை சிங்கப்பூர் வங்கியில் செலுத்தி, அந்த ஆவணங்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு சென்று துறைமுகத்திலோ விமானநிலையத்திலோ காட்டித் தமக்குரிய சரக்குகளைப் பெற்றுக் கொள்வார்.

ஜோதியின் வங்கி 10 லட்சத்தைக் குமாரின் சென்னை வங்கிக்கு அனுப்ப, குமாருடைய வங்கிக் கணக்கில் அத்தொகை வரவு வைக்கப்படும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் லெட்டர் ஆஃப் கிரெடிட் என்பது, ‘ஒரு வணிக உடன்படிக்கையில் பொருள் வாங்குபவர் அதற்கான தொகையைச் செலுத்தும் சக்தி உள்ளவர்தாம்’ என அவருடைய வங்கி அளிக்கும் உத்தரவாதம். நியாயமாகப் பார்த்தால் இதில் வட்டிக்குத் தொடர்பு கிடையாது. ஆனால் நடைமுறையில் இது வட்டியுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஏன் அப்படி என்று பார்ப்போம்.

சிங்கப்பூர் வணிகர் ஜோதியினால் 10 லட்சம் கட்ட முடியும் என்று அவருடைய வங்கி, சென்னை வங்கிக்கு உத்தரவாதம் வழங்கிய பிறகு ஜோதி அப்பணத்தைக் கட்டவில்லை என்றால் என்னாகும்? உத்தரவாதம் கொடுத்த சிங்கப்பூர் வங்கிதான் முதலில் அப்பணத்தைச் சென்னை வங்கிக்குக் கட்டிவிட்டுப் பிறகு ஜோதியுடன் மல்லுக்கட்ட வேண்டும். அவ்வாறு, சரக்குகளுக்கான தொகையை வங்கி கட்ட நேர்ந்தால், சிங்கப்பூர் வங்கி சென்னை வங்கிக்குப் பணம் கட்டிய தேதியிலிருந்து அக்கடனை அடைக்கும் தேதி வரை உள்ள காலத்திற்கு ஜோதி வட்டி செலுத்த வேண்டும். இதைத்தான் ஒரு நிபந்தனையாக லெட்டர் ஆஃப் கிரெடிட் விண்ணப்பத்திலேயே சேர்த்து ஜோதியிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

இறக்குமதி செய்யும் சரக்குக்குரிய தொகையை வாடிக்கையாளர் செலுத்தமுடியாத சாத்திய(மு)ம் இருப்பதால், வங்கிகள் லெட்டர் ஆஃப் கிரெடிட் வெளியிடுமுன் தகுந்த தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.

முதலில், லெட்டர் ஆஃப் கிரெடிட்டுக்கான தொகை 10 லட்சத்தையும் முன்கூட்டியே கட்டிவிடும்படி ஜோதியிடம் கேட்பார்கள். அவர் அப்படிக் கட்டிவிட்டால் அத்தொகையை வங்கி தனது பொறுப்பில் வைத்திருந்து குமாரிடமிருந்து வந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் 10 லட்சத்தை அவருடைய வங்கிக்குச் செலுத்தி விடும். இதில் வட்டி சம்பந்தப்படாது. ஆனால் சரக்கு ஆர்டர் பண்ணிய தேதியிலிருந்தே ஜோதியின் பணம் 10 லட்சம் வங்கியில் முடங்கிப் போய்க் கிடக்கும். இதை, “எனது வணிகத்தில் வட்டி கலந்துவிட வேண்டாம்” என உறுதியுள்ள முஸ்லிம்கள் சிலரைத் தவிரப் பெரும்பாலான வணிகர்கள் விரும்புவதில்லை.

10 லட்சம் தொகையை முன்கூட்டியே செலுத்த ஜோதி விரும்பவில்லை என்றால், வங்கியில் அவர் கடன் கேட்கலாம். வங்கி அக்கடனை ஒப்புக் கொண்டால் லெட்டர் ஆஃப் கிரெடிட் வெளியிட்ட நாளிலிருந்தே வட்டிக்கான மீட்டரும் ஸ்டார்ட் ஆகிவிடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லெட்டர் ஆஃப் கிரெடிட் இப்படித்தான் வட்டி கலந்து வெளியிடப்படுகின்றன.

இஸ்லாமிய வங்கிகளில் வட்டியல்லாத லாபப் பங்கீடு முறையில் லெட்டர் ஆஃப் கிரெடிட் வெளியிடுகிறார்களாம்.

ஆக, ஒரு தொழில் நிறுவனம் விரும்பினால் லெட்டர் ஆஃப் கிரெடிட்டை வட்டி சார்ந்த நடவடிக்கையாகவோ அறவே வட்டி கலக்காத நடவடிக்கையாகவோ அமைத்துக் கொள்ள முடியும். இஸ்லாமிய வங்கிகள் அதிகம் செயல்படும் சவுதி, அமீரகம், மலேஷியா போன்ற நாடுகளில் வட்டியில்லாத லெட்டர் ஆஃப் கிரெடிட் பெறுவது எளிதானதுதான்.


(இறைவன் மிக்க அறிந்தவன்).


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.