அன்னியப் பெண் ஜனாஸாவின் முகத்தை ஆண்கள் பார்க்கலாமா?

Share this:

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பெண் மையித்தின் முகத்தை வருபவர்களுக்கெல்லாம் (ஆண், பெண்) திறந்து காட்ட இஸ்லாம் அனுமதிக்கின்றதா?

– சகோதரி. ஜியா சித்தாரா

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்…

மார்க்கத்தை அறிந்துப் பேணி நடக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ள சகோதரி ஜியா சித்தாரா அவர்களுக்கு அல்லாஹ் மேன்மேலும் ஞானத்தை வழங்குவானாக.

சாதாரண நிலையில் அன்னிய ஆண்/பெண்களின் முகத்தை அன்னிய பெண்/ஆண்கள் சரியான காரணமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. 

“நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்” என்று திருமறை 24:30,31 வசனங்கள் அறிவுரை கூறுகிறது.

”நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்” என்று ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

“அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மதீ, அபூதாவூத்)

“நானும் மைமூனா(ரலி)வும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த போது இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்தார்கள். ஹிஜாப் சம்பந்தமான கட்டளை வந்த பிறகு இது நடந்ததாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள், ”இவரை விட்டும் நீங்கள் இருவரும் மறைந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அவர் குருடாயிற்றே! அவர் எங்களைப் பார்க்கவோ அறியவோ முடியாதே?” என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”நீங்கள் இருவரும் குருடிகளா?; நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டதாக உம்முஸலாமா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

மேற்கண்ட அறிவுரைகளிலிருந்து ஓர் ஆண் அன்னியப் பெண்ணையோ, ஒரு பெண் அன்னிய ஆணையோ அவசியமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எதிரில் வருவது பெண், அல்லது ஆண் என்று தெரிந்தால் மீண்டும் அந்தப் பெண்ணை/ஆணைப் பார்ப்பதை விட்டும் பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும். இது தான் அன்னியரைக் காண்பதைக் குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கும் அறிவுரையாகும்.

அவசிய நிமித்தம் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதில் தவறில்லை. மருத்துவரிடம் நோயைச் சொல்லும் போது அவரை நோக்கியே சொல்ல வேண்டியிருக்கும். வியாபாரம், மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் அன்னிய ஆணும் அன்னியப் பெண்ணும் பொது இடங்களில் பணி போன்ற அவசிய நிமித்தம் கருதி நேரடியாக உரையாட வேண்டியச் சந்தர்ப்பம் நிகழுமானால் அதில் தவறில்லை. மார்க்க சம்பந்தமாக பெண்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி கேள்வி கேட்டுள்ளனர். நபி(ஸல்) அவர்களும் பெண்களின் கேள்விகளுக்கு அவர்களை நோக்கி விளக்கமளித்துள்ளார்கள்.

ஜனாஸாவின் முகத்தைப் பார்த்தல்

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்திற்குக் காரண, காரியங்களில் அடிப்படையில் மட்டுமே இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. அவசியக் காரணங்கள் ஏதுமின்றி தடை செய்யப்பட்ட விஷயங்களுக்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.

அன்னிய ஆணின் முகத்தை அன்னியப் பெண்களும் அன்னியப் பெண்ணின் முகத்தை அன்னிய ஆண்களும் பார்ப்பதை இஸ்லாம் பொதுவாகத் தடை செய்கிறது.

இந்தத் தடைக்கு அவசியக் காரணங்கள் மட்டுமே விதிவிலக்காக அமையும். அந்த வகையில் அன்னிய ஜனாஸாவின் முகத்தைப் அன்னிய ஆண் /பெண்கள் பார்ப்பது எவ்வகையில் அவசியம் என்பதற்குப் பார்க்க நினைப்பவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

”எனது தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை…”  என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 1244)

அபூபக்ர்(ரலி) ‘ஸுன்ஹ்’ எனுமிடத்திலுள்ள தம் உறைவிடத்திலிருந்து ஒரு குதிரை மீது பயணம் செய்து முன்னோக்கி வந்து (மதீனாவை அடைந்து குதிரையைவிட்டு) இறங்கிப் பள்ளிவாசலுக்குள் நுழைத்தார்கள். மக்களிடம் பேசவில்லை. இறுதியில் என்னிடம் வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தேடினார்கள். அவர்கள் (இறந்து) யமன் நாட்டுத் துணி ஒன்றினால் போர்த்தப்பட்டிருக்க, அவர்களின் முகத்தைவிட்டு (அத்துணியை) நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தம் தலையைக் கவிழ்த்து அவர்களை முத்தமிட்டு அழுதார்கள். பிறகு, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். உங்களுக்கு அல்லாஹ் இரண்டு இறப்புகளை ஒன்று சேர்க்கவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறப்பைத் தாங்கள் அனுபவித்துவிட்டீர்கள்” என்று கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 1241, 3667, 4452)

இங்கு தந்தை ஜனாஸாவின் மூடிய முகத்தை மகனும் நபி(ஸல்) அவர்களின் ஜனாஸாவின் முகத்தை அபூபக்ர்(ரலி) அவர்களும் திறந்துப் பார்த்ததிலிருந்து மூடப்பட்ட ஆண் ஜனாஸாவின் முகத்தைப் ஆண் பார்வையாளர்கள் பார்க்க அனுமதியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. இதிலிருந்துப் பெண் ஜனாஸாவின் மூடிய முகத்தைப் பெண் பார்வையாளர்களும் திறந்துப் பார்த்துக் கொள்ள இஸ்லாத்தில் தடை இல்லை என்பதை அறிந்துக் கொள்ள முடிகின்றது.

ஆனால், பெண் ஜனாஸாவின் முகத்தை அன்னிய ஆண்கள் பார்க்கலாம் என்றோ, ஆண் ஜனாஸாவின் முகத்தை அன்னியப் பெண்கள் பார்க்கலாம் என்றோ நேரடியாக அனுமதித்து அறிவிப்பு எதையும் நாமறியவில்லை. விசாரணை ஏற்படும் சூழலில் இன்னார் மகள், இன்னார் மனைவி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள – இறந்தவர் அவர் தானா? என்ற சந்தேகத்தைத் தீர்க்கும் முகமாக அன்னியப் பெண்/ஆண் ஜனாஸாவின் முகத்தைப் பார்க்கலாம். மற்றபடி அன்னியப் பெண்/ஆண், அன்னிய ஆண்/பெண் ஜனாஸாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதே இஸ்லாத்திலிருந்து பெறும் படிப்பினையாக உள்ளது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.