சூரியன் மறையும்வரை அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தலாமா?

ஐயம்:

(அஸ்ரு நேரத்தில்) எங்கேயாவது வெளியூர் போய், திரும்ப வருவதற்கு மஃக்ரிப் நேரம் ஆகிவிட்டால் அஸ்ருத் தொழுலாமா? எத்தனை ரக்ஆத்கள் தொழவேண்டும்?

– மின்னஞ்சல் வழியாக சகோதரி sithi aseema

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளை அந்தந்த நேரங்களில் நிறைவேற்றிட வேண்டும் என்று அல்லாஹ் விதியாக்கியுள்ளான். எனினும் தக்கக் காரணத்துடன் சிலவற்றுக்கு விதிவிலக்கு உண்டு.

அகழ்ப் போரின்போது சூரியன் மறைந்த பின் உமர்(ரலி) குரைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும்வரை நான் அஸ்ருத் தொழவில்லையே’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அஸ்ருத் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி(ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸ்ருத் தொழுதார்கள். அதன்பின்னர் மக்ரிப் தொழுதார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (புகாரி 596).

அகழ்ப் போர் நாளில் அஸ்ருத் தொழுகைத் தவறி விடுகின்றது. சூரியன் மறைந்த மஃக்ரிப் நேரத்தில் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் முதலில் அஸ்ருத் தொழுதுவிட்டுப் பின்னர் மஃக்ரிப் தொழுதுள்ளார்கள். போர் என்பது நெருக்கடியான சூழ்நிலை என்பதால் இதை விதிவிலக்காகக் கொள்ளலாம்.

எந்த நேரத்தில் என்ன தொழுகை? என்பது ஹதீஸ்களின் சான்றுகளுடன் ஏற்கனவே நமது தளத்தில் விளக்கப்பட்டுள்ளது. வெளியூருக்குச் சென்றால் அதன் தூரத்தைக் கணக்கில் கொண்டு ஜம்வு, கஸ்ருச் செய்து வெளியூரில் தொழுதுகொள்ளலாம். வெளியூரில் தொழமுடியாத நெருக்கடியான நிலையுள்ளதா? என்பதை நீங்களே அறிந்தவராவீர்கள். உறக்கம், மறதி போன்றவற்றால் தொழுகை நேரம் தவறி விடுமானால் விடுபட்ட தொழுகைகளை வரிசைப்படியே தொழவேண்டும். இதற்கான சான்றாக சூரியன் மறைந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் விடுபட்ட அஸ்ருத் தொழுகையை முதலில் தொழுதிருக்கிறார்கள்.

வெளியூர் செல்வதற்கான திட்டமிட்ட ஏற்பாடுகள் இருக்குமானால் லுஹ்ருத் தொழுகையுடன் சேர்த்து அஸ்ருத் தொழுகையையும் உள்ளூரிலேயே தொழுதுகொள்ளலாம். இதற்கான ஹதீஸ்களின் சான்றுகளுடன் கஸ்ரு ஜம்வுத் தொழுகைகளைப்பற்றி என்ற ஆக்கத்தில் விளக்கப்பட்டுள்ளன.

தகுந்த காரணம் ஏதுமின்றி, சூரியன் மறையும் வரை அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தக்கூடாது.

“சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸ்ருத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.” அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி) (நூல் – புகாரி 579).

இதை வாசித்தீர்களா? :   முஸ்லிம்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?

சில நெருக்கடியான சூழ்நிலையில் தாமதம் ஏற்பட்டால் அஸ்ருத் தொழுகையை முதலில் தொழவேண்டும். உள்ளூரில் இருந்தால் நான்கு ரக்அத்களும், வெளியூரில் இருந்தால் தூரத்தைக் கணக்கிட்டு இரண்டு ரக்அத்களாகவும் சுருக்கித் தொழதுகொள்ளலாம்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)