கோன் மருதாணி (Cone henna) போடலாமா?

ஐயம்: கோன் மருதாணி (Cone henna) போடலாமா? இதற்குத் தெளிவாக பதில் தாருங்கள். (asee)

தெளிவு: பெண்கள் அழகுக்காக இட்டுக் கொள்ளும் ஒரு வகையான மூலிகை இலையே மருதாணி (Henna). விதை, இலை, பூ, காய், மரத்தின் பட்டை, வேர் என மருதாணி (சிறு) மரத்திலுள்ள இவற்றில் நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

அது மட்டுமில்லை. மருதாணி இலை ஒரு கிருமி நாசினியும் கூட. கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகளை அழித்துவிடும். நகச் சுத்தி வராமல் தடுக்கும். காயம் – புண்ணையும் ஆற்றிவிடும். பால்வினை நோயான மேக நோய்க்கும், கரும்படை, வண்ணான் படை, தோல் அரிப்பையும் குணப்படுத்தும். உடல் வெப்பம் தணியவும் உதவும்.

மருதாணி இட்டுக் கொள்வது மிகப் பழமையான பழக்கம். மருதாணி இட்டு அலங்கரித்துக் கொள்வது மதரீதியாக இல்லாமல் எல்லாப் பெண்களும் மருதாணி இட்டுக் கொள்கின்றனர். ஆண்களும் நரைத்த தலைமுடிக்கு சாயம் பூசவும், காலில் உள்ள வெடிப்புகளுக்காகவும் மருதாணி இலைகளை அரைத்துப் பயன்படுத்துகின்றனர்.

மருதாணி இலையை எண்ணெயுடன் கலந்து முடிக்குத் தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும். பெண்கள் அலங்காரத்திற்காக இட்டுக் கொள்ளும் மருதாணி இலையில் மேலதிகமான மருத்துவமும் உள்ளன என்பது, இயல்பாக மருதாணி மரத்திலிருந்து பறித்து அரைத்து உபயோகிக்கும் மருதாணி இலைகளுக்கே மருத்துவப் பலன்கள் உண்டு. (மருத்துவப் பலன்களான இவை அனைத்தும், இயற்கையான மருதாணியில் மட்டுமே கிடைக்கும்)

ஆனால், வணிகமயமாக்கப்பட்டு விட்ட உலகில் இன்று கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான, CONE – கூம்பு வடிவ (பாக்கெட்டில் அடைத்து, பிழிந்து போட்டுக் கொள்ளும்) மருதாணியில் இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுவதால் மருதாணியில் நச்சுத் தன்மை ஏற்பட்டு, நோய்களை ஏற்படுத்தி ஆபத்தாகி விடுகிறது. கடந்த 2012 வரு ரமளான் பெருநாளுக்காக சில ஊர்களில் கோன் மருதாணி போட்டவர்களில் பெண்கள், சிறுமிகள் என பலர் அலர்ஜிக்கு ஆளாகி வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தடுப்பு ஊசிப் போட்டு அவசர சிகிச்சைக்கு ஆளாயினர் என்ற செய்தி பல ஊடகங்களில் வெளியாகியிருந்தது. (தொடர்புடைய புதிய தகவல்கள்: http://www.satyamargam.com/english/2182-salons-ignore-govt-directive-on-hair-dye.html)

இச்செய்தியை வாசித்தவர்கள் அதிர்ச்சியடைந்து இனி கோன் மருதாணியை உபயோகிக்க வேண்டாம் என அறிவிப்புச் செய்தனர். கோன் மருதாணி கையில் போட்டுக் கொண்டால் தோல் வழியாகவே கெமிக்கல் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது என்றால் சாப்பிடும் பொழுது, உணவுடன் சேர்ந்து கையிலுள்ள இரசாயனம் வயிற்றுக்குள் சென்று புற்று நோய் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். விரல்களை சூப்பிச் சாப்பிடுவது நபிவழி என்பதால் விரல்களில் கோன் மருதாணிப் போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு, உணவுடன் கெமிக்கல் விரைவாக பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே, விஷத் தன்மையுள்ள கோன் மருதாணிப் போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பதுடன் அதை விலக்கி விடுவது நலம்.

இதை வாசித்தீர்களா? :   பிரிவின் இடைவெளி

அதிலும் குறிப்பாக கறுப்பு மருதாணி (Black henna) யில் துரிதமாகக் காய்ந்து கருமையான நிறம் பெறவேண்டி, தலைமுடி நரைக்குப் பயன்படுத்தப்படும் சாயங்கள், பெட்ரோல் ஆகியவையும் கலக்கப்படுகின்றன என்றும் இவை உடலில் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து அலர்ஜியை உண்டு செய்யும் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“கிராமங்களில் இயற்கையாக மரத்திலிருந்து மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து உபயோகிக்க முடிகிறது. நகரங்களில் இந்த வசதி இல்லை. அதனால் செயற்கையாக கெமிக்கல் சேர்க்கப்பட்ட கோன் மருதாணியைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது!” என ஆதங்கப் படுவர்களுக்கு, அபாயத்தைத் தேடி வலியச் செல்ல வேண்டாம் என்பதே அறிவுரை.

கோன் மருதாணி போட்டுக் கொள்ள மார்க்க ரீதியாக தடையேதும் இல்லை. ஆனால், அதன் பக்கவிளைவுகள் ஆபத்தானது என்பதை உணர்ந்து, மருதாணியைக் கடைகளில் வாங்கும் போது அதன் உட்பொருட்கள், காலாவதியாகும் தேதி ஆகியவற்றைக் கவனித்து வாங்க வேண்டுகிறோம். விசேஷ நாட்களுக்கு போதிய நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு, இயன்றவரையில் இயற்கையான மருதாணியை வரவழைத்துப் பயன்படுத்தினால் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி, பலனை அடையலாம் இன்ஷா அல்லாஹ்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)